Ad Code

35. பொன் விதி | யே. கோல்டன் ரதிஸ் | The Golden Rule | மத்தேயு 7.12 Matthew

பொன்விதி

யே. கோல்டன் ரதிஸ் B.A, B.Sc., B.Th.,                    மேலமெஞ்ஞானபுரம் சேகரம்,  CSI திருநெல்வேலி திருமண்டலம், BD - 3, செராம்பூர் கல்லூரி, செராம்பூர்.            

 

click here to download pdf of Meditation 35

தியான வசனம் மத்தேயு 7.12

ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.

 

முகவுரை

ஒவ்வொருவருடைய மனதிலும் இந்த உலகம் இவ்விதமாக இருந்தால் நலமாக இருக்கும் என்றும் தன்னோடு இருப்பவர்கள் இப்படியிருந்தால் நலமாயிருக்கும் என்றும் சிந்தனைகள் இருக்கும். ஆனால், அதில் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய பங்குமிருக்கிறது என்று சிந்திப்பவர்கள் எத்தனை பேர்? தன்னலம் நோக்காமல், பிறர் நலம் நோக்குபவர்கள் எத்தனை பேர்? கிறிஸ்தவ வாழ்வியல் நெறிமுறைகளில் (Christian Life Ethics) அனைத்து நெறிகளையும் உள்ளடக்கி, மிக எளிமையாக சொன்னது தான் மத்தேயு 7.12. இந்த நெறிமுறையானது இந்த உலகம் எப்படியிருக்க வேண்டும் என்று சிந்திப்பதோடு நின்றுவிடாமல், தன் பங்களிப்பை மிக நேரிய முறையில் கொடுக்க அழைப்பு கொடுக்கிறது.

 

வசனத்தின் பின்னணி

ஆதலால் என்று ஆரம்பிப்பது, இந்த வசனத்திற்கு அதன் முந்தைய பகுதியோடு தொடர்பிருப்பதைக் காட்டுகிறது. பிறரைக் குறித்து தீர்ப்பளித்தல் மற்றும் மன்றாட்டின் மகத்துவம் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து, எது மிக முக்கியமானது என்று சுருக்கமாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களை நாம் நடத்துவது தொடர்பான இயேசுவின் நெறிமுறை போதனைகளின் (Ethical Teachings of Jesus)சுருக்கமே இந்த பொன் விதியாகும்.

 

விரும்புவதை வாழ்வாக்கு

விரும்புதல் என்பதின் கிரேக்க பதத்தின் (θέλητε - thelēte - You might desire/ intend) அர்த்தம் ஒருவர் ஒன்றை தன் உள்மனத்தில் வைத்திருப்பது அல்லது அதை எதிர்ப்பார்ப்பது என்பதாகும். அந்த தன் விருப்பத்தை மற்றவரிடம் எதிர்பார்க்கும் முன்பு, தான் செய்ய வேண்டும் என்பது தான் இங்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. செய்யுங்கள் (ποισιν - poiōsin - Should do) என்பதை மூல பதத்திலிருந்து புரிந்து கொள்ளும் போது, உருவாக்குதல் அல்லது செயல்படுத்துதல் என்பதை புரிந்து கொள்ளமுடியும். பிறர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தங்கள் உள்மனதில் எண்ணுகிறமோ, அவ்வாறே தங்களை உருவாக்கிக் கொண்டு, பிறர் செய்ய வேண்டும் என்று நினைக்கும் காரியங்களுக்கு தாங்களே முதலில் செயல்வடிவம் கொடுக்க திருமறை நமக்குக் கற்றுத்தருகிறது.

 

இதை எதிர்மறையாக நோக்கினால் "உங்களுக்குச் செய்ய விரும்பாததை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்" என்று சொல்லலாம்.  தோபித்து 4:15 சொல்லுகிறது: “உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே…” இது 2 ஆம் நூற்றாண்டு ஆவணமான டிடாச்சேயிலும் (Didache) இது குறித்துக் காணப்படுகின்றது. ஆகையால் பிறர் நமக்கு செய்யக் கூடாதென்று விரும்புகிற எதையும் பிறருக்கு செய்யாதபடி மிகுந்த கவனமுடன் வாழ்வோம்.  தூய யோவான் சொல்லுகிறார்: “என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” (1 யோவான் 3.18).

 

பழைய ஏற்பாட்டில் காணப்படுவது போல், "அந்நியரை (பிறர்) நேசி" என்ற கட்டளையை இது நினைவுபடுத்துகிறது (உபா 6.15 லேவி 19.18). அதே நேரத்தில் இந்த பொன் விதி பகைவரையும் நேசி என்பதை எடுத்தியம்புகிறது. அன்பை (அகப்பே) இறையரசி மையக்கருத்தாக வலியுறுத்தி இறைமைந்தன் இயேசுகிறிஸ்து ‘இதுவே திருச்சட்டமும் இறைவாக்குகளுமாம்’ என்று என்று சொல்லுகிறார். நல்ல சமாரியன் உவமை இதற்கு சிறந்த சான்றாகும். நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது (1 யோவான் 3.11).

 

சிந்தனைக்கு…

இந்த விதி பொன் போன்றதென்றால் சத்தியமானது , என்றென்றுமுள்ளது, மற்றும் விலையேறப்பெற்றது. இந்தக் கட்டளையைத் தியானிப்பதோடு மாத்திரம் இராமல், அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்போமானால்,  நம்முடைய  வாழ்க்கையானது நம் குடும்பத்தோடு, உடன் வேலையாட்களோடு, எஜமானரோடு, நமக்கு கீழாய் வேலை செய்யும் நபர்களோடு, அண்டைவீட்டாரோடு, ஏன்? சாலைகளில் இருக்கும் மக்களோடும் கூட எவ்வளவு மேம்பட்ட வித்தியாசமாயிருக்கும் என்று சிந்திப்போம். இந்தக் பொற்கட்டளை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எவ்வளவு அற்புதமான உன்னதமான உலகமாக இருக்கும். இதில் உங்கள் பங்களிப்பைக் கொடுக்கத் தயாரா? சிந்தியுங்கள், அர்ப்பணியுங்கள், வாழ்வாக்குங்கள், இறையாசி உங்களோடு இருப்பதாக, ஆமென்.


Post a Comment

0 Comments