தியானம் : 20 / 10.04.2022
தலைப்பு : ஓசன்னா - கர்த்தாவே இரட்சியும்
திருவசனம் : சகரியா 9:9 சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் குருத்தோலை ஞாயிறு நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் ஓசன்னா என்று சொல்வதற்கும், சகரியா 9.6 ஆம் வசனத்திற்கும், குருத்தோலை பவனிக்கும் என்ன தொடர்புள்ளது என்று தியானிப்போம்.
ஓசன்னா
மூல பதமான எபிரேயத்தில் ஓசன்னா என்ற பதத்தின் நேரடி அர்த்தம் 'இரட்சியும் / காப்பாற்றும்' (save) என்பதாகும். இது இயேசு என்ற பெயரின் அர்த்தத்தோடு தொடர்புடையது. இந்த பதமானாது இரட்சகராக வந்த இயேசுவின் மேசியாத்துவத்தைப் புகழ்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. லூக்காவைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளில் இந்த பதம் வருகின்றது.
சகரியா 9.6 இன் விளக்கம்
இஸ்ரவேலர் 70 ஆண்டு கால பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் யூதேயாவிற்கு வந்து தங்கள் வாழ்வை சீரமைத்துக் கொண்டிருந்த காலக்கட்டதில் இறைவாக்குரைத்தவர் சகரியா. குறிப்பாக இந்த 9 ஆம் அதிகாரம் முதல் சகரியா 2 ஆம் பகுதி எனப்படுகிறது. மேலும் இந்த 9 ஆம் அதிகாரத்தில் தமஸ்குவின் மீது வரும் பாரம் குறித்து சொல்லப்பட்டாலும், மெசியாவின் வருகை குறித்த கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்றன. சகரியா 9.6 அந்த மெசியாவின் வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வை குறித்து வருகின்றது. தங்களை இரட்சிக்க வரும் கர்த்தராக (ஓசன்னா) யூதர்கள் எதிர்நோக்கி இருந்தனர்.
குருத்தோலை ஞாயிறு
அந்த எதிர்நோக்கின் ஒரு அடையாளமாக தான் இந்த மாபெரும் பவனி இயேசுவின் ஊழிய காலத்தின் இறுதி நாட்களில் நிறைவேறியது. யோவான் 12. 13 இல் வாசிக்கிறோம் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், "ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்." அதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாம் ஆசரிக்கிறோம்.
நிறைவுரை
குருத்தோலை பவனி என்பது
இரட்சகரைக் கொண்டாடும் பவனி,
இரட்சிப்பில் களிகூரும் பவனி
இரட்சிப்பை பிரஸ்தாபப்படுத்தும் பவனி. இதை உணர்ந்து ஆசரிப்போம். இறையாசி உங்களோடிருப்பதாக.
Prepared by
Meyego
0 Comments