உலகம் முழுவதும் செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில், சர்வதேச செவிலியர் கவுன்சில் அமைப்பு, 1965-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடியது. பின்னர், 1974-ஆம் ஆண்டில் இருந்து மே 12-ம் தேதி அன்று சர்வதேச செவிலியர் தினமாக ஒழுங்காக ஆசரிக்கப்படுகிறது.
இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடும்பத்தில் பிறந்த செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவாக, அவர் பிறந்தநாளான மே 12-ம் நாள் ‘சர்வதேசசெவிலியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது.
‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரே, செவிலியர் சேவையின் முன்னோடி. ‘இறைவனால் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகவே’ எண்ணி செவிலியர் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்தார். ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்திதேடிச் சென்று சேவை புரிந்தார்.
உலக மக்களின் நன்மைக்காக உழைக்கும் செவிலியர்களின் பணிக்கு நாம் ‘நன்றி’ என்று ஒற்றை வார்த்தையில் கூறி அவர்களின் பணியை குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என்றும் நலமுடன் வாழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு மனதார வாழ்த்தி, இறைவனிடம் மன்றாடுவோம். சிரித்த முகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவை செய்யும் செவிலியர்களைப் போற்றுவோம்!
0 Comments