தலைப்பு : உலகத்திற்குள் அனுப்பும் உயிர்த்த கிறிஸ்து
திருவசனம் : அப்போஸ்தலர் 22.21 அதற்கு அவர்; நீ போ, நான் உன்னைத் தூரமாயப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி எப்படி உலகெங்கும் செல்லும்? "நீங்கள் உலகெங்கும் போய்" என்ற இயேசுவின் வார்த்தைக்கு செவிசாய்த்து செல்பவர்களால் தான். அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? அனுப்புகிறவர் யார்? தம் ஒரேபேறான குமாரனையே உலகத்திற்கு அனுப்பிய கடவுள் (missio-Dei) தான். மிஷன் என்பது அனுப்புவது (missio - to send - apostolo). அப்போஸ்தலர் 22.21 இல் பவுல் தன்னை கடவுள் எப்படி அழைத்தார், எதற்காக அழைத்தார், என்பதைப் பற்றி பேசுகிறார்.
1. உலகத்திற்குள் அனுப்புகிறார்
யோவான் 17.18 தெளிவாக சொல்லுகிறது "நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." இந்த உலகம் எப்படிப்பட்டது? லூக்கா 10. 3 சொல்லுகிறது, "புறப்பட்டுப்போங்கள், ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்." உயிர்த்த இயேசு மாற்கு 16.15 இல் சொன்னார், "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."
2. உயர்ந்த இலட்சியத்தோடு அனுப்புகிறார்.
உயிர்த்த இயேசு கொடுத்த பிராதன கட்டளை (மத்தேயு 28.18-20) போங்கள், சீஷராக்குங்கள், திருமுழுக்கு கொடுங்கள் & கற்றுக்கொடுங்கள் (Go, Make Disciples, Baptize & Teach) என்ற அறைக்கூவலை நமக்கு கொடுக்கிறது. உலகில் உள்ள எல்லா பணிகளைக் காட்டிலும் அதிக பொறுப்புணர்வோடும், குறிக்கோளோடும் செய்ய வேண்டிய பணி இறையரசின் பணியே.
3. உன்னத பெலத்தோடு அனுப்புகிறார்.
உயிர்த்த கிறிஸ்து வெறுமே கட்டளை போடவில்லை. அப்போஸ்தலர் 1.8 சொல்லுகிறது, "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்."
நிறைவுரை
அப்போஸ்தலர் பவுலின் வாழ்விலும், இறைவன் பவுலை அழைத்து உலகத்தின் பல இடங்களுக்கு அனுப்பினார்; புறஜாதிகளை சந்தித்து சபையில் சேர்க்கும் உயர்ந்த இலட்சியத்தைக் கொடுத்தார். எல்லா போராட்டங்களில் மத்தியிலும் அதை நிறைவேற்றி முடிக்க உன்னத பெலணை முடிவுபரியந்தம் உன்னத கடவுள் கொடுத்து ஆசீர்வதித்தார். கடவுள் உங்களை அவரது பணிக்காக அனுப்ப அழைப்பாரேயென்றால் தாமதம் செய்ய வேண்டாம், தயங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். அழைப்பிற்கு இணங்கி அர்ப்பணியுங்கள். இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments