Ad Code

29. திரித்துவம்: அன்பின் ஐக்கியம் | Trinity: Community of Love | Tirinity Sunday 2022 | CSI Tirunelveli Diocese

தியானம் : 29 / 12.06.2022
தலைப்பு : திரித்துவம்: அன்பின் ஐக்கியம்
திருவசனம் : யோவான் 14.13 இயேசு (ஸ்காரியோத்தல்லாத யூதா) அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் (தந்தை & மைந்தன்) அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 

முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் திரித்துவ ஞாயிறு வாழ்த்துகள். நாம் ஆராதிக்கும் கடவுள் மூவொரு கடவுள். தந்தை, மைந்தன், தூயாவியார் என மூன்று நபர்களாக மனுக்குலத்திற்கு வெளிப்படுத்திய ஒரே யெகோவா (YHWH - Lord - கர்த்தர்) கடவுளை நாம் நம்புகின்றோம். ஆதித்திருச்பை தந்தையாகிய டெற்றுலியன், மூவொரு கடவுளைக் குறிக்க, டிரினிட்டி (Tirinity - திரித்துவம்) என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த திரித்துவக் கொள்கை நடைமுறையில், நமக்கு அன்பின் ஐக்கியத்தை கற்றுத் தருகிறது.

1. மூவொரு கடவுளின் உறவு
இயேசு சொன்னார்: "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10.30). தந்தை, மைந்தன், தூயாவியார் என மூன்று நபர்களாக கடவுள் வெளிப்பட்டாலும் கடவுள் ஒருவரே; ஒரே தன்மையுடையவரே. அவர்களுக்குள் இருக்கின்ற அந்நோநிய ஐக்கியம் நமக்குள்ளும் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி..." என்று இயேசு கிறிஸ்து ஜெபித்ததை யோவான் 17:22 இல் வாசிகின்றோம்.

2. கடவுள் - மனிதன் உறவு (மனுஷி)
மூவொரு கடவுள் எக்காலத்திலும் மனுக்குலத்தின் மீது மாறாத அன்பு வைத்திருக்கின்றார் என்பது மாறாத உண்மை (தந்தையின் அன்பு - யோவான் 3.16; மைந்தனின் அன்பு - யோவான் 15.9; தூயாவியாரின் அன்பு - 15.26). அந்த அன்பிற்கு ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? அந்த அன்பிற்கு அடிபணிந்து, இறை ஐக்கியத்தில் நிலைத்திருந்து வாழ்வதே தகும். மூவொரு கடவுளின் திரித்துவ ஐக்கியத்தில் நாமும் கிறிஸ்துவின் திருப்பெயரால் இணைந்து கொள்வோம்.

3. மனிதன் - மனிதன் உறவு (மனுஷி)
தலையாகிய கடவுள் சபையை ஒரு சரீரத்திற்கு ஒப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 12:13 இல் வாசிக்கிறோம், "நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்." கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம், அவரைப் போல வாழ வேண்டும். இயேசு நமக்கு கற்பிப்பது: "நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது" (யோவான் 15:12).

நிறைவுரை
திரித்துவக் கடவுள் அன்பே உருவானவர். அந்த அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. அந்த இறையன்பால், நாம் அனைவரோடும் ஐக்கியம் கொண்டு வாழ்வதையே இறைவன் விரும்புகின்றார். கடவுள் மனிதரை நேசிப்பது போல நாமும் பிறரை நேசிக்க வேண்டும். அந்த ஐக்கியம் இருக்குமிடத்தில் கடவுள் வாசம் பண்ணுவதாக இன்றைய திருவசனம் வாக்குபண்ணுகிறது. ஆண்டவருடைய வார்த்தையைக் கைக்கொண்டு, அவரில் அன்பாயிருந்து, பிறரை நேசித்து வாழ ஆண்டவர் நமக்கு உதவிபுரிவாராக. திரித்துவக் கடவுளின் இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments