Ad Code

ஆசிரியரிடமிருந்து... சிறுகதை | From the Author _ Story | Importance of the Holy Bible

மெட்டில்டா என்றொரு கல்லூரி மாணவி இருந்தார். இவருடைய தந்தைக்கு பிறந்தநாள் நெருங்கி வந்துகொண்டிருந்தது. இதனால் இவர் தன்னுடைய தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று மிகத்தீவிரமாக யோசித்தார்; இறைவனிடத்தில்கூட இது குறித்து இவர் வேண்டினார். அப்பொழுதுதான் ‘திருவிவிலியத்தைப் பரிசாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்று இவருக்கு வெளிப்படுத்தப்பட்டது.

‘தந்தையின் பிறந்தநாள் பரிசாகத் திருவிவிலியத்தைக் கொடுத்து விடலாம்... ஆனால், அதில் என்ன எழுதிக் கொடுக்கலாம்?’ என்று மெட்டில்லா மீண்டும் யோசிக்கத் தொடங்கினார். ‘மெட்டில்டாவிடமிருந்து’ என்று எழுதிக் கொடுக்கலாமா...? என்று நினைத்தார். ‘அப்படி எழுதிக் கொடுப்பது அவ்வளவு சிறப்பில்லை’ என்று நினைத்த அவர், அந்த எண்ணத்தைக் கைவிட்டார். பின்னர், ‘உங்கள் குட்டி இளவரசியிடமிருந்து’ என்று எழுதிக் கொடுக்கலாமா...? என்று நினைத்தார். ‘ஏழு கழுதை வயதாகின்றது; இன்னும் என்ன குட்டி இளவரசி!’ என்று நினைத்து, அந்த எண்ணத்தையும் கைவிட்டார்.

இப்படியே இவர் சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது, தற்செயலாகத் தன் தந்தை வைத்திருந்த புத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவ்வாறு பார்க்கும்பொழுது, ஒரு புத்தகத்தில் ‘From the Author’ (ஆசிரியரிடமிருந்து) என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மெட்டில்டா, தன் தந்தைக்கு அளிக்கவிருந்த பிறந்தநாள் பரிசான திருவிவிலியத்தின் முதல் பக்கத்தில் ‘ஆசிரியரிடமிருந்து’ என்று எழுதிக் கொடுத்தார். அதை அன்போடு வாங்கிப் பார்த்த மெட்டில்டாவின் தந்தை, ‘எனக்கு இந்தத் திருவிவிலியத்தை எழுதிய இதன் ஆசிரியரான கடவுளிடமிருந்தா இந்தப் பரிசு வந்திருக்கின்றது; அப்படியானால், இத்திருவிவிலியத்தை நான் எந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமோ, அந்தளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்தவேண்டும்’ என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

இதற்குப் பின்பு அவர் திருவிவிலியத்தைக் கருத்தூன்றி வாசிக்கத் தொடங்கினார். திருவிவிலியம் அவரைத் தொட்டது. இதனால் அவர் ஒரு நற்செய்திப் பணியாளராக மாறி, நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அவ்வாறு அவர் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும்பொழுது, “திருவிவிலியம் என்பது மற்ற நூல்களைப் போன்ற ஒரு சாதாரண அல்ல, அது கடவுள் மானிடர் யாவருக்கும் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பயன்படுத்தினால் ஏராளமான ஆசிகள் கிடைக்கும்” என்றார்.

ஆம். திருவிவிலியம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகவும் மேலான ஓர் அன்புப் பரிசு. இதை நாம் நம்பிக்கையோடு வாசித்து, அதன்படி வாழ்ந்தால், நாம் மிகுந்த கனிதருவோம் என்பது உறுதி.



Post a Comment

0 Comments