Ad Code

இறைமக்களின் இறைப்பணி அப்போஸ்தலர் 6:3 Laity Sunday Sermon

திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு:  திரித்துவ திருநாள் பின்வரும் 19 -ஆம் ஞாயிறு
தேதி: 04-10-2026
வண்ணம்: பச்சை 
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: எண்ணாகமம் 11:26-30 
புதிய ஏற்பாடு: அப்போஸ்தலர் 6:1-7
நற்செய்தி பகுதி: யோவான் 15:12-19 
சங்கீதம்: 92

2. திருவசனம்
2.1 தலைப்பு: இறைமக்களின் இறைப்பணி 
2.2 இருப்பிடம்: அப்போஸ்தலர் 6:3
2.3 திருவசனம்:
(பவர் திருப்புதல்)   ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 
(திருவிவிலியம்) ஆதலால் அன்பர்களே உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
இறைமக்களும் கர்த்தருடைய ஊழியர்கள் என்ற எண்ணம் உண்டாக வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் இறைமக்கள் ஞாயிறு (Laity Sunday) ஆசரிக்கப்படுகிறது. 

4. வசன குறிப்புகள்
4.1 நூலாசிரியர்: லூக்கா

4.2 அவையோர் : 
இரு கருத்துகள் உண்டு. தியோபிலஸ் (அப்1:1) கனம் பொருந்திய மனிதனுக்கு எழுதப்பட்டது. மற்றொன்று Theos - கர்த்தர் Phileo - அன்பிற்குரிய, கர்த்தருக்கு பிரியமான மக்களுக்கு எழுதப்பட்டது 

4.3 வசன பின்னணி:
ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட முதல் சோதனையை தான் இந்த அதிகாரத்தில் நாம் காண்கிறோம். அவர்களுக்குள் தலைதூக்கிய ஊழல், கருத்து வேறுபாடுகள் மற்றும் பிளவுகளை உண்டாக்கும் சூழல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தச் சூழல்களை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு கையாண்ட விதத்தைத் தான் இந்த வசனத்தில் நாம் காண்கிறோம். 

5. திருவசன விளக்கவுரை
ஆண்டவர் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டவும், மக்கள் அனைவரும் இரட்சிப்பைக் கண்டடையவும் ஏற்படுத்தியது தான் சபையும், சபை சார்ந்த அனைத்து சமுதாய பணிகளும். சபை பணிகள் செய்வதற்கு ஊழியர்களும் , அதன் கிளை ஊழியமாக இருக்கும் சமுதாய நல பணிகள் செய்ய ஊழியர்களுக்கு உறுதுணையாக இறைமக்களைக் கொண்டு செய்ய கர்த்தர் ஆதி அப்போஸ்தலர்கள் மூலம் திட்டங்கள் தந்தார். 

அவர்கள் முதலாவது, சொல்லிலும் செயலிலும் நடத்தையிலும் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும் (μαρτυρέω - to bear witness). ஆவியின் கனிகளால் நிரப்பப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலோடு நடைமுறை வாழ்வில் சரியான விதத்தில் செயல்படுத்தும் முன் ஞானம் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். பரத்திலிருந்து கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பரமனாம் இயேசுவின் சித்தத்திற்கு ஏற்றபடி பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும். (καθίστημι- to set in order). 

6. இறையியல் & வாழ்வியல்
சபையும் சபை சார்ந்த பணிகளும் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களுக்கும், தம்முடைய மக்களுக்கும் கொடுத்திருக்கிற உன்னதமான ஆண்டவருடைய பணியாகும். இந்த பணியினை செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகிற கர்த்தரிடத்தில் தகுதியாக்கிக் கொண்டு, முன்மாதிரிகளாகவும், முன் ஞானம் கொண்டவர்களாகவும், முழு அதிகாரத்தையும் கர்த்தருக்கென்று அர்ப்பணித்து செயல்படுத்துகிறவர்களாகவும் வாழ வேண்டும். 
7. அருளுரைக் குறிப்புகள் : 
அ). முன் மாதிரியுள்ள வாழ்வு 
ஆ). முன் ஞானம் கொண்ட வாழ்வு
இ) முழு அதிகாரத்தையும் கர்த்தருக்கென்று அர்ப்பணித்த வாழ்வு

எழுதியவர்
கிறிஸ்து ராசையா 
சபை ஊழியர் 

Post a Comment

0 Comments