திருமுறையில் சொல்லப்பட்டுள்ள சோவான் சமவெளி எங்கே உள்ளது? எதைக் குறிக்கிறது? சங்கீதம் 78:12, 43 வசனங்கள் இஸ்ரவேலர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படி வற்புறுத்துவதற்காக, பார்வோனுக்கு முன்பாக, மோசே அற்புதங்களைச் செய்த இடமாக "சோவான் வயலை" அடையாளப்படுத்துகிறது. ஏசாயா 19:11, 13, ஏசாயா 30:4 மற்றும் எசேக்கியேல் 30:14 ஆகியவற்றிலும் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. சோவான் வெளியில் அதிசயம் நடக்குமா?
சங்கீதம் 78.12 சொல்லுகிறது: "எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில் அவர்களின் மூதாதையர் காணுமாறு அவர் வியத்தகு செயல்கள் (அதிசயங்கள்) பல புரிந்தார்." எகிப்து அரசர்களின் குடியிருப்பு பகுதியான இந்த இடம் யூதர்களால் அடிமைத்தன வாழ்வின் இடமாகவும், செழிப்புமிக்க சமவெளியாக இருப்பினும், அவர்களுக்கு வனாந்திர வாழ்வின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் அது அவர்களின் முன்னோர் 430 ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்த இடம். ஆனால், அங்கும் கடவுளால் சோவான் வெளியிலும் அதிசயங்களைச் செய்யமுடிந்தது. சோவான் வெளியில் செய்த அதிசயங்கள் என்ன என்னவென்று சங்கீதம் 78.43-53 இல் சொல்லப்பட்டுள்ளது.
2. பிதாக்களுக்கு முன்பாக செய்ததை மறந்து விட்டீர்களா?
சங்கீதம் 78.11 சொல்லுகிறது: "அவர்தம் செயல்களையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் (அதிசயங்கள்) அவர்கள் மறந்தனர்." கிட்டத்தட்ட இஸ்ரவேலர் விடுதலை பெற்ற பின்பு, 400 ஆண்டுகள் கழித்து
ஆசாப் எழுதின இந்த சங்கீதங்கள் (77-80) போதக சங்கீதங்கள் (Pastoral Songs). தன் காலத்து மக்களுக்கு கடவுளின் வல்லமையை எடுத்துரைக்கும் படியாக, இந்த சங்கீதத்தில் கடவுள் செய்த அதிசயங்களை எல்லாம் பட்டியலிட்டு ஞாபகப்படுத்துகிறார். அதில் ஒன்று தான் சங்கீதம் 78.12 & 43 இல் சொல்லப்பட்டுள்ள சோவான் வெளி அதிசயங்கள்.
3. இறைவனை உறுதியாய் பற்றிக்கொள்ளவில்லையா?
சங்கீதம் 78.8 இல் வாசிக்கிறோம்: "தங்கள் மூதாதையரைப்போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும் இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார்." சோவான் வெளியில் கடவுள் செய்த அதிசயங்களை நேரில் கண்ட இஸ்ரவேல் மக்களே, இறைநம்பிக்கையிலிருந்து வழிதப்பிவிட்டனர். நெருக்கமான சூழ்நிலைகளில் நாம் எப்படி இருக்கின்றோம்? சிந்திப்போம்.
நிறைவுரை
அன்புக்குரியவர்களே... அதிகாரத்தில் இருப்போரால் பாடநுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா? வனாந்திரம் போன்ற நிலையில் திகைத்து நிற்கிறீர்களா? சோர்ந்து போக வேண்டாம். சோவான்வெளி போன்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்களா? சங்கீதங்களால் அவரைத் துதித்து (78.04), நம்முடைய கண்களே காண, கடவுளால் அதிசயங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். இறையாசி உங்களோடிருப்பதாக.
1 Comments