Ad Code

தமிழ் மொழியில் புதிய ஏற்பாடு 📖 பிறந்த தினம் இன்று - ஜுலை 15 | First Tamil New Testament

 மொழியில் புதிய ஏற்பாடு 📖 பிறந்த தினம் இன்று, ஜூலை 15, 1715.

சீகன் பால்க் என்ற திருத்தொண்டரின் மிஷனெரிப் பணிக்கு விரோதமாய் தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும், மையும் சீகனுக்குக் கொடுத்து உதவினர்.

புதிய கிறிஸ்தவ விசுவாசிகள் பின்னோக்கிப் போகாமல் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க, போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார்.

எனவே, சீகன், 1708 ஆம் ஆண்டு, அக்டோபர் 17 ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். மொழி அவருக்குப் புதிது. அதோடு இந்தியாவில் அப்போது யாரும் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார்.

பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மொழி பெயர்த்திருந்தார், சீகன்பால்க். (சீகன்பால்க் வேதாகமத்தில் முடிக்காமல் விட்டுச் சென்ற பழைய ஏற்பாட்டுப் பகுதிகளை, சென்னையில் மிஷனெரியாகப் பணிபுரிந்த ஜெர்மானியர் பெஞ்சமின் சூல்ச் ஐயர் (Rev. Benjamin Schultze) முடித்து அச்சேற்றினார்). இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. 

இந்தியச் சரித்திரத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி புதிய ஏற்பாட்டை அச்சேற்ற, அநேகத் தடைகள் ஏற்பட்டன.

 ‘கிறிஸ்தவ அறிவு விளக்க சங்கம்’ (SPCK - Society for the Propagation of Christian Knowledge) அச்சு எந்திரமும், ஜெர்மன் நாட்டு நண்பர்கள் அச்செழுத்துக்களும் கொடுத்து உதவினர். ஆனால் அவற்றைக் கொண்டு வந்த கப்பலை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் அவை சென்னை நகர கவர்னரால் மீட்கப்பட்டன. மேலும் அச்சு எந்திர முதலாளி, வரும் வழியிலையே இறந்து போனார். எனவே அச்சு வேலை தெரிந்த டேனிய வீரன் ஒருவனைக் கண்டு பிடித்து, 1713 இல், அச்சிலேற்றும் வேலையை ஆரம்பித்தனர். ஜெர்மனியிலிருந்து வந்த எழுத்துக்கள் பெரிதாக இருந்தன. அதோடு காகிதப் பற்றாக்குறை வேறு. எனவே தரங்கம்பாடியிலேயே சிறிய எழுத்துக்களை திரும்பவும் வார்த்தனர்.

இவ்வளவு கடின உழைப்பிற்குப் பின், 1715 ஜூலை 15 ஆம் நாள் தமிழ் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. 

இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமமே!
முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் "சீகன்பால்க் தான்".

Post a Comment

0 Comments