இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அவர் பதவியேற்ற 1962 முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவரான பின்பு, நண்பர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் அவரை அணுகி அவரது பிறந்த நாளைக் (செப்டம்பர் 5 ஆம் தேதி) கொண்டாட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது, "எனது பிறந்த நாளை தனித்தனியாக கொண்டாடுவதற்கு பதிலாக, செப்டம்பர் 5 ஆம் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் அது எனது பாக்கியமாகவும், பெருமை மற்றும் மரியாதையாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து வரும் அத்தகைய வேண்டுகோள் ஆசிரியர்கள் மீது அவர் கொண்டுள்ள பாசத்தையும், கற்பித்தல் தொழிலில் அவர் கொண்டிருந்த அன்பை தெளிவாகக் காட்டியதுடன், ஆசிரியர்கள் சமூகத்தின் சிற்பியாகவும், அவர்கள் இல்லாமல் எந்த சமூகமும் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியாது என்பதை உணர்ந்து உணர்த்திய அந்த களங்கமற்ற உள்ளத்தின் வேண்டுதலின் விளைவே இந்த ஆசிரியர் தினம்.
இந்த நாளை வெறும் பெயரளவிலான ஆசிரியர் தினமாகக் கொண்டாடாமல், கற்பித்தலில் தலைசிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரில் நல்லாசிரியர் என்ற விருதை வழங்கி மத்திய, மாநில அரசுகள் கௌரவிக்கிறது.
வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.
ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் ஆசிரிய பெருமக்கள் மறக்க முடியாத நல் விளைவை ஏற்படுத்தியிருப்பார்கள்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
என்றார் திருவள்ளுவப் பெருகமனாரின் கூற்றுப்படி, சிறந்த மனிதராக, மனித நெறிப்படி வாழ வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள்.
மாணவர்களுக்கு தேவையான ஊக்குவிப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களை நல்ல முறையில் பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதமான பணியாற்றும் ஆசிரிய பெருமக்களும் மேயேகோ_இன் இனிய ஆசிரிய தின வாழ்த்துகள். இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments