Ad Code

வேதநாயகம் சாஸ்திரியார் வாழ்க்கை வரலாறு | Vethanayagam Sasthiriyaar Life History

முகவுரை
வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864), தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். கிறிஸ்தவக் கவிஞரான இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன. அவரது வாழ்வைக் குறித்து இப்பதிவில் பயில்வோம்.

இளமைப் பருவத்தில் சாஸ்திரியார் 
வேதநாயக சாஸ்திரியார் திருநெல்வேலியில் 1774 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் தேதி ஞானப்பூ அம்மையாருக்கும், கவிஞர் அருணாசலம் என்ற தேவசகாயம்பிள்ளைக்கும் மகனாக பிறந்தார். அருணாசலம் கிறிஸ்தவராகி தனது பெயரை தேவசகாயம் என்று மற்றிகொண்டார். வேதநாயகத்திற்கு அவர்களுடய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால் குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்" என்று அழைத்தனர்.

இளமையிலே அவர் தாயார் இறந்துவிட்டமையால், பாட்டனார் அவரைத் தம் வீட்டிற் கொண்டுபோய் வளர்த்தார். தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் “எமனுக்குப் படிப்பு வந்தாலும் உனக்கு படிப்பு வராது!” என்று கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றான். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ் அவருடைய நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தஞ்சையில் சாஸ்திரியார்
பன்னிரண்டாம் வயதில் வேதநாயகம் பண்பு நெறியிலே தலைப்பட்டார். அவரை அந்நெறியில் உய்த்த பெருமை சுவார்ட்ஸ் என்னும் ஜெர்மன் நாட்டு இறைப்பணியாளருக்கே உரியதாகும். "விளையும் பயிர் முளையிலே தெரியும்“ என்னும் முதுமொழிக்கிணங்க வேதநாயகத்தின் எதிர்காலச் சிறப்பை யெல்லாம் அவரது இளமைக் கோலத்திலே கண்ட சுவார்ட்ஸ் ஐயர் தம்மோடு அவரைத் தஞ்சைக்குக் கொண்டு செல்ல விரும்பி, தந்தையின் அனுமதி பெற்றுத் தம்முடன் அழைத்துச் சென்றார். அன்று முதல் வேதநாயகத்துக்குத் தாயும் தந்தையும், தகை சான்ற சற்குருவும் அவரேயாயினர்.

சுவார்ட்ஸ் ஐயர் விருப்பப்படி, பிளேக் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் தரங்கம்பாடிக் கல்லூரியில்  மாணவராகச் சேர்ந்து அங்கு இரண்டு ஆண்டுகள் வேத நூல், வான நூல் முதலிய அறிவு நூல்களைக் கற்றார் வேதநாயகம். தரங்கம்பாடிப் படிப்பு முடிந்தவுடன் தஞ்சைக்குத் திரும்பி வந்தார் வேதநாயகம். அவரது கல்விப் பயிற்சியையும் ஒழுக்கத்தையும் கண்டு களிப்புற்ற சுவார்ட்ஸ் ஐயர் தஞ்சையில் ஒரு வேதக் கல்லூரி நிறுவி, அதற்கு பத்தொன்பதாம் வயதான வேதநாயகத்தைத் தலைமையாசிரியராக நியமித்தார். 

அரசவைக் கவிஞரான சாஸ்திரியார்
குற்றாலக் குறவஞ்சி,” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சி” என்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். இப்பாடல் நூலைத் தன் நண்பன் இளவரசன் சரபோஜி பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார்.

தன்னோடு பயின்ற இளவரசர் சரபோஜி 1820 ஆம் ஆண்டு மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். பின்னர் வேதநாயகம் அரசவையில் பணியமர்த்தப்பட்டார். அரசவைப் புலவர் எனும் அந்தஸ்தையும் பெற்றார். மகாராஜா சரபோஜி IV தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான். இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். தன் கிறிஸ்தவ பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான். வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலையில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை என்று தைரியமாக கூறினார்.

கிறிஸ்தவக் கவிஞராக சாஸ்திரியார்
அரசவை கவிஞராயினும் தன்னை கிறிஸ்துவின் புகழ் பாடும் இறைடியாராக வெளிப்படுத்துவதையே சாஸ்திரியார் விரும்பினார். அதன்படியே தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றார். ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றிய வேதநாயகம் கிருஸ்தவ வேதாகமங்களின் சாரத்தைப் பாடினமையால் 'சாஸ்திரியார்' என்று பாராட்டப் பெற்றார். தென்னிந்தியத் திருச்சபைகளில் பொதுவாக உபயோகிக்கப்படும், தமிழ்க் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில், அதிகமான பாடல்கள், வேதநாயக சாஸ்திரியாரால் எழுதப்பட்டவை, என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவுரை
தொண்ணூறு ஆண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்து இறைத் தொண்டு புரிந்தவர் வேதநாயக சாஸ்திரியார். அண்ணாவியார், ஞானதீபக் கவிராயர், வேத சிரோன்மனி, ஞான, கவிச்சக்கிரவர்த்தி, ஞானதீபக் கவிராயர், சுவிசேஷ கவிராயர் மற்றும் வேத சாஸ்திரிகள், என்ற பட்டங்களுக்கும் சொந்தக்காரரான இவர் 24.01.1864இல் காலமானார். இவரது கல்லறையில் 120 நூல்களை இவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. வேதநாயக சாஸ்திரியார் படைத்த,

மனுவுருவானவனைத் தோத்தரிக்கிறேன்-மோட்ச
வாசலைத் திறந்தவனைத் தோத்தரிக்கிறேன்;;
கனிவினைத் தீர்த்தவைனத் தோத்தரிக்கிறேன்-
யூதக் காவலனை ஆவலுடன் தோத்தரிக்கிறேன்;
வேறு எவரையும் தோத்தரியேன்.”

என்ற மற்றொரு கவியிலும், அவரது சிறந்த பக்தி வைராக்கியம் தெளிவாக விளங்குகின்றதல்லவா? சாஸ்திரியார் அச்சமின்றித் தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. 
Acknowledgement
Meyego.

Post a Comment

0 Comments