ஹோலி பைபிள் (Holy Bible) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற இரண்டு பகுதிகளால் (Parts) ஆனது.
இந்த வேதாகமம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய கண்டங்களை மையமாக கொண்டுள்ளது. இதில் உள்ள 66 புத்தகங்களையும் 40 ஆசிரியர்கள் 1600 வருட இடைவெளியில் எபிரேயு (Hebrew), கிரேக்கு (Greek), அரமேயு (Aramaic) மொழிகளில் எழுதியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவை குறித்தே எழுதியிருப்பது வேதாகமத்தின் விசேஷமே.
பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியவர் மோசே. இவற்றை எபிரேயு மொழியில் தோரா (Torah) என்பர், தமிழில் பஞ்சாகமம் என்கிறோம், ஆங்கிலத்தில் பென்டாடுக் (Pentateuch) என்று கூறுகின்றனர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம்.
பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபு புத்தகத்தையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி. மு. 1446-1406) குறிப்பிடுகின்றனர். பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா. இது எழுதப்பட்ட காலம் கி. மு. 400.
புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி. பி. 45-ல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் சமீபமாய் எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம். இது கி.பி. 95-ல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14.
பழைய ஏற்பாட்டிற்க்கும் புதிய ஏற்பாட்டிற்க்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள். கடவுளின் குரல் அப்போது இல்லை. எஸ்றா புத்தகத்தின் 6-வது அதிகாரத்திற்க்கும் 7-வது அதிகாரத்திற்க்கும் இடைப்பட்ட காலகட்டத்திலே (கி. மு. 516-458) வாழ்ந்த கன்ஃப்யூசியசும் புத்தரும் மரித்துப் போனார்கள்.
வேதாகமத்தில் எஸ்தர் 8:9 தான் நீளமான வசனம். சிறிய வசனம் யோவான் 11:35 -ல் உள்ள "இயேசு கண்ணீர் விட்டார்" என்பதே. வேதாகமத்தில் நீளமான வார்த்தை ஏசாயா 8:1 இல் உள்ள
”மகேர்–சாலால்–அஷ்–பாஸ்” என்பதே.
சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117. நடு வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. நடு வார்த்தை கர்த்தர் என்பது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119. சங்கீதம் 21 கடந்த காலத்தையும், சங்கீதம் 22 நிகழ்காலத்தையும், சங்கீதம் 23 எதிர்காலத்தையும் குறிப்பதை படித்து உணரலாம்.
2 இராஜாக்கள் 19 -ஆம் அதிகாரமும் ஏசாயா 37-ஆம் அதிகாரமும் பிரதி எடுத்தது போல் ஒரே மாதிரியானவை. 1 கொரிந்தியர் 13 -ஆம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.
வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது (2 தீமோத்தேயு 1:5).
வேதாகமத்தில் 133 வகையான விலங்குகள் குறிக்கப்பட்டுள்ளன. மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாயை பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது. பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை. கழுதை பேசிய நிகழ்ச்சி கர்த்தரின் நகைச்சுவை உணர்வு என்று பலர் எழுதி இருந்தாலும் உலகில் அவர் படைத்த எல்லோரும் பேசுகிறார்கள் என்பதுதான் உண்மை. வெளிப்படுத்தின விசேஷத்தில் எக்காளம் பேசுவதாக சொல்லப்படுகிறது.
வேதாகமத்தின் படி, மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவர் 969 வருஷம் வாழ்ந்தார் (ஆதி. 5:27). கர்த்தரோடு சஞ்சரித்தவர்கள்
(Walked with God) ஏனோக்கும் நோவாவும். வேதாகமத்தின் படி, இருவர் மரிக்கவேயில்லை. அவர்களில் ஒருவர் ஏனோக்கு (ஆதி. 5:22-24), இன்னொருவர் எலியா (2 இராஜா. 2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். பெரும்பாலான தீர்க்கதரிசிகளின் இறப்பு வேதனை மிகுந்தது. சில தீர்க்கதரிசிகள் சமாதானத்தோடே மரித்தனர், உதாரணமாக தானியேல், நாத்தான், செப்பனியா, மல்கியாவை சொல்லலாம்.
வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன். மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன். மிகுந்த சாந்தகுணமுள்ளவராய் இருந்தவர் மோசே (எண். 12:3).
கர்த்ருக்கு பிரியமானவன் தாவீது ( 2 சாமுவேல்). மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். இவர் தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவர். மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத், இவனது உயரம் ஒன்பதரை அடி. குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.
எபிரெயன் (Hebrew) என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவர் ஆபிரகாம். எபிரெயர்கள் (Hebrews) முதன் முதலாக யூதர்கள் (Jews) என அழைக்கப்பட்டது 2 இராஜா.16:6-ல் தான். கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் என்னும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது (அப். 11:26; 26:28; 1 பேதுரு 4:16).
எபிரேயு மொழியில் இயேசுவுக்கு யெஷுவா (Yeshua) என்பதுதான் பிதா இட்ட பெயர். தமிழ் உச்சரிப்பு அதே மாதிரி இருக்கும். இயேசுவை கிரேக்க மொழியில் யீஸுஸ் (Iesous) என்றும், ஆங்கிலத்தில் ஜீஸஸ் (Jesus) என்றும், மலையாளத்திலும் மராத்தியிலும் யேஷு (Yeshu) என்றும், தெலுங்கிலும் கன்னடத்திலும் யேசு (Yesu) என்றும், இந்தியில் யீஷு (Yeeshu) என்றும் அழைக்கின்றனர். தமிழ் உச்சரிப்பில் இயேசு/ஏசு என்று பொதுவாக உலகம் முழுதும் அழைக்கப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் சில மொழிகளிலும் அவர் ஜீசஸ் (Jesus) என்றே அழைக்கப் படுகிறார். ஆனாலும், எம்மொழியிலும் நம் ஜெபத்தை கேட்கிறவர் கர்த்தர்.
வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து என்னும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அதில் மூன்று முறை *1 யோவான்* புத்தகத்திலும், ஒருமுறை *2 யோவான்* புத்தகத்திலும் வருகிறது. *வெளிப்படுத்தின விசேஷம்* புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து என்னும் வார்த்தை பயன்படுத்தப் படவேயில்லை.
கள்ளத்தீர்க்கதரிசி என்ற வார்த்தை நான்கு சுவிசேஷங்களிலும், வெளிப்படுத்தின விசேசத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஜான் விக்ளிஃப் முதன்முதலில் முயற்ச்சித்தார். அதை 1338 -ல் ஜான் புர்வே நிறைவு செய்தார். உலகில் முதன்முதலாக 1450 -ல் குட்டன்பெர்க் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்தான். பைபிள் அதிகாரங்களாகவும் வசனத்திற்கு எண்கள் போடப்பட்டும் 1560 ஆம் ஆண்டு வெளிவந்தது ஜெனிவா பைபிள் பதிப்பில்தான். அமெரிக்க அச்சகத்தால் 1663 ஆம் ஆண்டில் இந்திய மொழியில் பைபிள் அச்சடிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் முதன்முதலாக தமிழில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள் ஆகும். பைபிள் உலகில் உள்ள 1200 மொழிகளில் முழுவதுமாகவோ, பகுதியாகவோ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகில் அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் பைபிள்தான்.
ஒரு சாதாரண மனிதன் 70 மணி நேரத்தில் பைபிளை தொடர்ந்து படித்து முடித்து விடலாம். ஒரு நாளைக்கு 3 அதிகாரமும் ஞாயிற்றுக் கிழமை 5 அதிகாரமுமாக படித்தால் ஒரு வருடத்தில் படித்து விடலாம். ஒரு நாளைக்கு 14 அதிகாரம் படித்தால் 3 மாதத்தில் படித்து விடலாம். முயற்சித்துதான் பாருங்களேன்!
2 Comments