ஈரோட்டின் தந்தை என்றழைக்கப்படும் அந்தோணி வாட்சன் பிரப் அவர்கள் (Anthony Watson Brough 1861- 1936) இங்கிலாந்து நாட்டில் உள்ள லியோடன்ஸ்டன் பகுதியில் 5-1-1861-ம் ஆண்டு எஸெக்ஸ் நகரில் (Leytonstone, Essex) அந்தோணி பிரப்புக்கும் எம்மா லாவுக்கும் பிறந்தார். 1885-ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. இவரது மனைவி ரோசட்டா ஜேன் ஜூலி. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் 1886-ல் குருப்பட்டம் பெற்றார்.
கிறிஸ்தவ மறை பணியாளராக இருந்த பிரப், 1894-ம் ஆண்டு அவரது மனைவியுடன் தமிழகத்துக்கு வந்தார். லண்டன் மிஷனரி சொசைட்டி மூலம் அவர் கிறிஸ்தவ மறை போதனை பணிக்காக தமிழகத்தில் 1894-ல் கோவையிலும் பின்னர் 1897 முதல் 1933 வரை ஈரோட்டிலும் லண்டன் மிஷன் சபையில் போதகராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.
இந்தநிலையில் ஈரோட்டை சேர்ந்த இந்து மற்றும் முஸ்லிம் பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு உரிய வசதியான ஆஸ்பத்திரிகள் இல்லாதிருந்தது. குறிப்பாக பிரசவத்தின் போது பெண் டாக்டர்கள் இல்லாமல் பெண்கள் கடும் சிரமங்களை சந்தித்ததை கண்டு மனம் வெதும்பினார். 1900-ம் ஆண்டு ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியை தொடங்கினார்.
ஈரோட்டின் நகர்மன்ற தலைவராக 1904-ம் ஆண்டு பொறுப்பு ஏற்ற அவர் ஈரோடு நகர கட்டமைப்பு பணிகளில் ஆர்வம் காட்டினார். ஈரோடு நகர் பகுதியில் மண் சாலைகளாக, மாட்டு வண்டி சாலைகளாக இருந்த பல சாலைகளின் கட்டமைப்பை மாற்றினார். தற்போதைய அரசு ஆஸ்பத்திரி மேம்பாலம் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையான சாலையை தனது சொந்த செலவில் அமைத்ததாக தெரிகிறது. ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்த கிறிஸ்தவ பணியாளரான இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
1927-ம் ஆண்டு கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் கட்ட முடிவு செய்தார். கட்டிடக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரப், இந்தோ சராசனிக் என்று அழைக்கப்படும் இந்திய மொகலாய கூட்டு கட்டிடக்கலையில் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார். பிரப் பணிக்காலத்தை தொடர்ந்து ஆலய பொறுப்பு ஏற்ற கிறிஸ்தவ பணியாளர் எச்.ஏ.பாப்லி ஆலயத்துக்கு பிரப் நினைவு என்ற பெயரை சூட்டினார்.
ஈரோடு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய 29 ஆண்டுகளில் 94 பள்ளிக்கூடங்கள், 20 கிறிஸ்தவ ஆலயங்கள், 2 ஆஸ்பத்திரிகள் கட்டி பொதுமக்களுக்கு அளித்தார். பிரப் 1934-ல் ஓய்வுபெற்றார். 1936-ல் இங்கிலாந்தில் சாமர்செட் பகுதியில் நார்ட்டன் (Somerset, England) ஊரில் மறைந்தார். வெஸ்ட்பரியில் கான்ஃபோர்ட் இடுகாட்டில் (Canford Cemetery) அடக்கம் செய்யப்பட்டார். (Westbury-on-Trym, Bristol, England.) அவரின் மரணத்தை தொடர்ந்து ஈரோடு நகர்மன்ற சபை கூடி, அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர் கட்டிய சாலைக்கு பிரப் சாலை என்றும் பெயர் சூட்டியது.
0 Comments