Ad Code

செராம்பூர் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் கொண்டாட்டம் • Pongal Celebration in Serampore Tamil Society

இறையருளால் செராம்பூர் கல்லூரியில் இறையியல் பயிலும் தமிழ் மாணாக்கர்களின் ஐக்கியமான செராம்பூர் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் ஆசரிக்கப்படுவது சங்கத்தின் மரபு. பல்வேறு மொழி பேசும் பல மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும் இணைந்து இவ்விழாவில் பங்குபெறுவது தனிச்சிறப்பு. குறிப்பாக 2022-2023 கல்வியாண்டில், ஜனவரி 19 & 20 (வியாழன் & வெள்ளி) ஆகிய இரண்டு நாட்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழா கொண்டாடப்பட்டது. 

ஜனவரி 19 ஆம் தேதி மாலை 2.30 மணிக்கு பேராசிரியர். அருட்திரு. லால்டிலேன்கிமா அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்ய, கல்லூரி முதல்வர் திரு. வன்சன்லூரா அவர்கள் விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். முதலில் கல்லூரி முதல்வர் அவர்கள் பானை உடைத்தல் போட்டியில் களம் இறங்கிட, அனைத்து பேராசிரியர்களும் விளையாடினார்கள். இரண்டு தமிழ் நண்பர்கள் தீப்பந்தம் வைத்து நடனமாடினார்கள். தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டி, பலூன் உடைத்தல் போட்டி, செங்கல் சுமத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், லக்கி கேம்ஸ் போன்றவை நடத்தப்பட்டன. அனைத்து மாநில மாணவர்களும் மிக உற்சாகமாக போட்டிகளில் பங்குபெற்றனர். முடிவில், பேராசிரியர். அருட்திரு. கே.கே. சத்திரி அவர்கள் நிறைவு ஜெபம் செய்து ஆசி வழங்கினார்கள்.

ஜனவரி 20 ஆம் தேதி காலை 7.45 மணிக்கு CLRC Hall இல் வைத்து, தமிழர் திருநாள் வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டின் துவக்கமாக, திருமதி. சூசன்னா சர்கார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்கள். வழிபாட்டு நடத்துநர் திரு. கோல்டன் ரதிஸ் அவர்கள் மற்றும் இறுதியாண்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து வழிபாட்டை நடத்தினர். தமிழ்நாட்டு கலாச்சார நிகழ்ச்சி, வீடியோ காட்சி மற்றும் செராம்பூர் தமிழ்ச் சங்கக் கருப்பாடல் ஆகிய சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. செராம்பூர் பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர் அருட்திரு. ஜஸ்டின் மோசஸ் அவர்கள் இறைவார்த்தையைப் பகிர்ந்து கொண்டார்கள். கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர். அருட்திரு. S.S. சர்கார் அவர்கள் நிறைவு ஜெபம் செய்து ஆசி வழங்கினார்கள். பின்பு, அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் வழிபாட்டில் பங்குபெற்றனர்.

ஜனவரி 20 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு, விடுதி உணவறையில் வைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசு வழங்கும் விழா மற்றும் தமிழர் திருநாள் விருந்து நடைபெற்றது. சைவம் மற்றும் அசைவம் என பதினொரு விதமான உணவுகள் பரிமாறப்பட்டது. அனைவருக்கும் தமிழ் நாட்டு அல்வா மற்றும் பாதாம் பால் கொடுக்கப்பட்டது. விடுதி வளாகத்தில் வீடியோ காட்சிகள் மூலம் தமிழ்நாட்டு பாரம்பரியம் மற்றும் கலைகள் காட்டப்பட்டது. இத்தகைய இரண்டு நாட்கள் விழாவிற்கான ஏற்பாடுகளனைத்தும், அனைத்து தமிழ் நண்பர்களாக இணைந்து செராம்பூர் தமிழ்ச் சங்கம் சார்பாக செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments