1. தலைப்பு
கானாவூரில் தண்ணீரை இரசமாக்குதல்: இறைமைந்தரின் மாட்சி வெளிப்படல்
2. திருமறை பகுதி
யோவான் 2.1-11
3. இடம் & பின்னணி
கானா (Cana) என்னும் ஊர் கலிலேயாவிலுள்ள ஒரு இடம். இந்த அற்புதத்தை யோவான் மட்டுமே பதிவுசெய்துள்ளார். யோவான் அடையாளம் (Signs) என்ற வார்த்தையை தன் நூலில் பயன்படுத்தியுள்ளார். "A sign always sends a message." திருமறையில் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் அற்புதங்களில் இது தான் இயேசு செய்த முதல் அற்புதம் எனக் கருதப்படுகிறது. இயேசுவின் ஊழியததின் தொடக்க காலத்தில் இந்த அற்புதம் நடந்திருக்கும். இயேசு தம்முடைய சீஷர்களோடு யோர்தான் மலையிடுக்கின் ஸ்நானகனுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, 100 கிலோமீட்டர் பிரயாணம் செய்து கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண வீட்டிற்கு சென்ற போது செய்த அற்புதமாகும். இது அவர் செய்த உணவு சார்ந்த அற்புதங்களில் ஒன்றாகும்.
4. விளக்கவுரை
பாலஸ்தீனா நாட்டில் திருமணக் கொண்டாட்டம் பல நாள்கள் நீடிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது விருந்தினர் வருவதும் போவதுமாக இருப்பர். கானாவிலும் ஏற்கனவே நிகழ்ந்துகொண்டிருந்த திருமணத்தில்தான் இயேசுவும்அவருடைய தாயும் சீடர்களும் கலந்துகொள்கின்றனர். அங்கு எதிர்பாரா விதமாக திராட்சை ரசம் தீர்ந்து போனது. இதை அறிந்த மரியாள் இயேசுவிடம் தெரிவிக்க, இயேசு தன் தாயிடம் "என் வேளை இன்னும் வரவில்லை" என்று சொல்லி, இறை நேரத்திற்காக காத்திருக்கிறார். அப்போது, இயேசு சொல்லவதைச் செய்யுங்கள் என்று மரியாள் வேலைக்காரர்களிடம் சொன்னாள். இயேசுவின் வார்த்தையின் படியே ஆறு கற்ஜாடிகள் (மொத்தம் சுமார் 600 லிட்டர் கொள்ளளவு) எனும் சுத்திகரிப்பின் தொட்டிகள் தண்ணீரால் நிரப்பப்பட்டன. இது விருந்தாளிகள் சுத்திகரிப்புக்காக அதிக தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
இந்த சூழலில் இயேசு தண்ணீரை அமைதியாக சுவையுள்ள திராட்சை இரசமாக மாற்றினார். இது எவ்வாறு நடத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. இயற்கையான முறையில் தயாரிப்பதற்கென்று அதிக நாட்கள் எடுக்கக்கூடிய குளிர்பானம் திராட்சை ரசம். அதாவது ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகும். ஆனால் இயேசு கிறிஸ்து இங்கு அற்புதமாக தண்ணீரை திராட்சைரசமாக மாற்றினார்.
5. கருத்துரை
யோவான் 2: 11 "...இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்." இயேசு ஏன் அற்புதம் செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வசனம் உதவுகிறது. இந்த அற்புதம் மணமகன் மற்றும் மணமகளுக்கு திருமண பரிசு என்றாற் போல் இருந்தாலும், அதன் நோக்கம் அவரின் சீடர்களுக்கானது. கடவுளின் ஒரே மகனாக இப்பூமிக்கு வந்த இயேசுகிறிஸ்து தம் மாட்சியை (மகிமை) வெளிப்படுத்திய தருணம் தான் கானவூர் திருமணம். மகிமை என்பது என்ன? இயேசுவின் மனித இயல்பின் அவரது அனுமானத்தால் மறைக்கப்பட்ட அவரது தெய்வீக மற்றும் தெய்வீக குமாரத்துவத்தின் தன்மை; அத்தன்மை அவரது அற்புதமான செயல்பாடுகளால் இப்பூமியில் வெளிப்படுத்தப்படுள்ளது.
மோசே கடவுளால் அனுப்பட்டவர் என்பதை எகிப்தில் நிரூபிக்க நடந்த முதல் அற்புதம் தண்ணீரை இரத்தமாக மாற்றியது (யாத்திராகமம் 7:20-21). அவ்வாறே இயேசுவின் முதல் அற்புதம் தண்ணீரை, திராட்சரசமாக (இரத்தத்தின் அடையாளமாக) மாற்றியது அவர் இப்பூமிக்கு இறைமைந்தராக வந்துள்ளார் என்பதை நிரூபிக்கவும், அதன் வாயிலாக அவர் மேல் நம்பிக்கை கொள்ளவும் நடந்த அற்புதமாகும். நம்முடைய வாழ்விலும் கடவுள் செய்யும் அற்புதங்கள் அவரின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன என்பதை உணர்ந்து அவருக்கு மகிமையை செலுத்தி அவரை நம்ப வேண்டும்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments