1. தலைப்பு
அரச அலுவலர் மகன் நலமடையும் புதுமை: இறைமைந்தரின் வார்த்தையின் வலிமை
2. திருமறை பகுதி
யோவான் 4:43-54
3. இடம் & பின்னணி
சமாரியவில் இயேசு இரண்டு நாட்கள் தங்கி ஊழிய செய்த பின்பு, கலிலேயா வந்தார். யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்களில் இதுவும் ஒன்றாகும். யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் என யோவான் பதிவிட்டுள்ளார்.
4. விளக்கவுரை
இயேசு கலிலேயா வந்தார் என்று கேள்விப்பட்ட ராஜாவினுடைய மனிதர் ஒருவர், சாகும் தருவாயில் தன் மகனை சுகமாக்க இயேசுவை அழைத்து செல்லுமாறு அவரிடத்தில் வந்தார். (இவர் ஏரோது அந்திப்பாவின் அரண்மனையிலுள்ள முக்கியமான அதிகாரியாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.) இயேசு அவரிடம், "நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் நம்பமாட்டீர்கள்" என்றார். அரச அதிகாரி அவரிடம், "ஐயா, என் குழந்தை இறப்பதற்கு முன் கீழே வாருங்கள்" என்றார். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் மகன் பிழைப்பான் என்றார். அந்த மனிதன் இயேசு சொன்னதை நம்பி கப்பர்நகூமுக்கு திரும்பிச் செல்லும் வழியில், அவருடைய வேலைக்காரர் அவரைச் சந்தித்து, மகன் பிழைத்திருக்கிறான் என்று சொன்னார்கள். அவர் எப்போது குணமடையத் தொடங்கினார் என்று அவர்களிடம் கேட்க, அவர்கள் அவரிடம், "ஏழாம் மணி நேரத்தில் ஜுரம் அவரை விட்டு வெளியேறியது" என்றார்கள். அந்த நேரத்தில்தான் இயேசு தன்னிடம், "உன் மகன் பிழைப்பான்" என்று கூறியதை அவர் உணர்ந்தார். பின்பு, அவரும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நம்பினர்.
5. கருத்துரை
இயேசுவின் மீது அந்த நபருக்கு நம்பிக்கை இருந்தது. இல்லாவிட்டால், அவன் இயேசுவைச் சந்திக்க கப்பர்நகூமிலிருந்து கானாவுக்குச் சென்றிருக்க மாட்டான். மேலும் அங்கு வந்த அவர், இயேசு தன் மகனைக் குணப்படுத்த முடியுமா என்று அவர் வந்து கேட்கவில்லை. மாறாக அவர் அங்கு சென்று தனது மகனைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கெஞ்சினார். ஆனால், இயேசு உடல் ரீதியாக அங்கு செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒருவேளை இயேசு அதை தூரத்தில் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனிடத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் இயேசு கிறிஸ்து சொன்னவுடம் உடனே கீழ்படிந்து தன் ஊருக்கு திரும்பி சென்றதால், தன் மகனின் சுகத்தை பெற முடிந்தது. இயேசு இருந்த கானாவூருக்கும் கப்பர்நகூமுக்கும் கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தூரமாகும். இயேசுவின் வார்த்தையை நம்பிச் சென்ற அந்த அதிகாரியின் மகன் சுகம் பெற்றான். இந்த அற்புதம் இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறது.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments