1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: லெந்து முதல் ஞாயிறு
தேதி: 26/2/2023
வண்ணம்: கருநீலம்
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்: 51
2. திருவசனம் & தலைப்பு
தூய்மையாக்கும் கிறிஸ்து
சங்கீதம் 51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
3. ஆசிரியர் & அவையோர்
பாடகர் தலைவர்க்கு தாவீதின் புகழ்ப்பாவாக இந்த 51 ஆம் சங்கீதம் உள்ளது. தாவீதின் தனிப்பட்ட இறைவேண்டல் திருப்பாடல் ஆகும். பின்னாட்களில் யூதர்கள் இதை பாவ அறிக்கை ஜெபமாக பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
தாவீது உரியாவின் மனைவி பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது ஆகும். தாம் செய்த பாவத்துக்கு மனம் வருந்தி தாவீது "கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்" என வேண்டுகிறார்.
5. திருவசன விளக்கவுரை
ஈசோப்பு என்பது ஒரு "பரிசுத்த மூலிகைச் செடி" ஆகும். இதன் மூலிகைக் குணம் சரீரத்தின் வெளிப்படையான, உள்ளான காயங்களை ஆற்றி குணப்படுத்துவது. அதன் சாறு உள்ளுறுப்புக்களுக்கு பெலன் தர வல்லது. இஸ்ரவேலர் தங்களின் புனிதச்செயல்களில், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஈசோப்புப் செடியால் தொட்டு, எடுத்துத் தெளித்து, மற்ற பொருட்களையும், மனிதரையும் சுத்திகரிப்பார்கள் (பழைய ஏற்பாட்டு லேவி முறைமை). பாவத்தில் ஈடுபட்ட தாவீது ராஜா, நாத்தான் தீர்க்கதரிசியினால், உணர்த்தப்பட்டார். பாவ உணர்வடைந்த தாவீது ராஜாவின் உணர்ச்சிமிகு மன்றாட்டுப் பாடலில் தாவீது, ஈசோப்பினால் தான் கழுவப்பட்டு சுத்திகரிக்கப்பட விரும்பினார்.
6. இறையியல் & வாழ்வியல்
இன்றைக்கு நாம் புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்கின்றோம். நாம் ஈசோப்பினால் சுத்திகரிக்கப்பட வேண்டுமா? இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது (எபி 9:19-22). இறை மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும் (1 யோவான் 1:7) கிறிஸ்து இயேசு ஒருவரே தூய்மையாக்க முடியும்.
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும் எனத்தொடங்கும் இப்பாடலானது தவத்திருப்பாடல்களுல் ஒன்றாகும். இலத்தீனில் இதன் துவக்கவரியான Miserere Mei என்னும் பெயரால் இது அறியப்படுகின்றது. இது தாழ்ச்சி மற்றும் மனமாற்றத்தின் அடையாளமாக பல வழிபாட்டிமுறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, நம் பாவங்களை உணர்ந்து, தூய்மையாக்கும் கிறிஸ்துவை நம்பி, "ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்" என்று மன்றாடுவோம். எல்லாம் வல்ல கடவுள் நம்மை தூய்மையின் பாதையில் நடத்திச் செல்வாராக.
7. அருளுரை குறிப்புகள்
தூய்மையாக்கும் கிறிஸ்து
1. உணர்வடைதல் (தவறை ஏற்றுக்கொள்ளல்)
2. அறிக்கை செய்தல் (கிறிஸ்துவின் மூலம் கடவுளிடம் ஒப்புரவாகுதல்)
3. மனந்திரும்புதல் (பாவத்தை விட்டுவிடுதல்)
0 Comments