உச்சி வெயிலில்கூட சிலருக்கு வேர்க்காது. ஏசி குளிரிலும் கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி இருப்பது சிலரது வழக்கம். பொதுவாக வியர்வை என்றாலே, நினைவுக்கு வருவது அருகில் இருப்போரை முகம்சுளிக்க வைக்கும் அதன் வாசனைதான்.
*வியர்வை ஏன் வருகிறது?*
*எல்லோருக்கும் அது ஏன் ஒரே மாதிரியாக இல்லை?*
*நாளமில்லாச்சுரப்பி நிபுணர் (Endocrinologist) ராம் மகாதேவன் அவர்கள் கூறும் விளக்கம்...*
“நமது உயிரைக் காப்பதில் வியர்வைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. வெப்பத்தால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், உடலில் உள்ள உப்பு மற்றும் தண்ணீரின் அளவை சமநிலையில் வைக்கவும், உடலில் இருந்து வியர்வை வெளிப்படுகிறது. இது நம் உடலைக் காக்கும் ஒரு வழிமுறை.
நாம் ஓடும்போதும், நடக்கும்போதும், வேலை செய்யும்போதும் சக்தி செலவாகும். இதனால், உடலுக்குள் திடீரென அதிகரிக்கும் வெப்பநிலையைச் சமாளிக்க தானியங்கி நரம்புகளின் வழியாக அசிட்டையில்கொலின் (acetylcholine) என்ற திரவம் சுரந்து மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் (hypothalamus) என்ற பகுதிக்கு சிக்னல் வரும். உடனே, மூளையானது வியர்வை சுரப்பிகளுக்கு சிக்னல் தர, வியர்வை சுரப்பிகள் மூலமாக நீரும் உப்பும் நம் உடலில் இருந்து வெளியேறும்.
*“வியர்வை வெளியேறும்போது எதனால் நாற்றம் வருகிறது?”*
வியர்வைக்கு வாசனை கிடையாது. நமது உடலில் எக்ரைன் (eccrine gland ), அப்போக்ரைன் (apocrine gland) என இரு வகையான வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. உடல் முழுவதும் பரவலாக இருக்கும் வியர்வைச்சுரப்பி எக்ரைன். அக்குள் மற்றும் மடிப்புகள் போன்ற இடங்களில் இருக்கும் சுரப்பிகள் அப்போக்ரைன். இந்த சுரப்பிகள் எண்ணெய் சுரப்பிகளின் அருகே அமைந்திருக்கின்றன.
சீபம் (oil secreting glands) எனப்படும் எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வரும் எண்ணையுடன் வியர்வையும் கலந்து அதனுடன் பாக்டீரியாவும் சேர்வதால்தான் வியர்வை நாற்றம் வருகிறது. குழந்தைகளுக்கு வியர்க்கும் போது நாற்றம் வராது. ஆண், பெண் இருபாலாரும் பருவமடையும் காலகட்டத்தில் இருந்துதான் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பது, முடி வளர்வது போன்ற ரசாயன மாற்றங்கள் நடக்கும். அப்போதுதான் வியர்வையுடன் நாற்றம் வர ஆரம்பிக்கிறது.
💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡
0 Comments