Ad Code

இறைமைந்தரின் அற்புதங்கள்: முகவுரை • The Miracles of God's Son: An Introduction

1. தலைப்பு
இறைமைந்தரின் அற்புதங்கள்: முகவுரை 

2. திருமறை பகுதி
யோவான் 20: 30

3. இடம் & பின்னணி
தூய யோவான் நற்செய்தி நூலின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளது. இறைமைந்தர் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களைக் குறித்து யோவான் நற்செய்தியாளரின் கருத்தாக இது இருக்கிறது.

4. விளக்கவுரை
அற்புதம் அல்லது புதுமை என்பது வியப்பைத் தரும் வகையில் சிறப்பானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது மற்றும் அறிவியலின் விதிகளால் விளக்கப்பட முடியாத நிகழ்ச்சி என்று வரையறுக்கப்படுகிறது. கிரேக்க புதிய ஏற்பாட்டில் அற்புதம் (Miracle) என்பதைக் குறிக்கும் வண்ணம் நான்கு வார்த்தைகள் உள்ளன: works (ergon), wonders (teras), powers (dunamis), & signs (semeion). இவ்வாறு நான்கு வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள காரணம், எந்த ஒரு தனிப்பட்ட வார்த்தையும் அற்புதத்தின் அனைத்து முக்கியத்துவத்தையும் விளக்கிவிட முடியாது. மேலும் இந்த வார்த்தைகள் வெவ்வேறு வகையான அற்புதங்களை சித்தரிக்கவில்லை. 

இயேசு கிறிஸ்து தனது பூமிக்குரிய ஊழியத்தின் போது ஏராளமான அற்புதங்களைச் செய்தார். அவற்றில் சில தான் புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மத்தேயு 27, மாற்கு 22, லூக்கா 23 மற்றும் யோவான் 7 அற்புதங்களைப் பதிவிட்டுள்ளனர். மொத்தமாக கணக்கிடும் போது, சிலர் 37 என்றும் சிலர் 40 என்றும் சிலர் அதற்கும் மேல் என்று பட்டியலிடுகிறார்கள். அப்போஸ்தலர் யோவானின் குறிப்புப்படி, இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் வேறு பல அரும் அடையாளங்களையும் செய்துள்ளார். அவையெல்லாம் தாம் தம் நூலில் எழுதப்படவில்லை என்பதையும் யோவான் ஒத்துக்கொள்கிறார். 



நம்முடைய புரிதலுக்காக இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. உணவு சார்ந்த அற்புதங்கள்
2. குணமளிக்கும் அற்புதங்கள்
3. இயற்கை சீற்றங்களை அடக்குதல்
4. பிசாசுகளை விரட்டுதல்
5. உயிரடையச் செய்தல்

5. கருத்துரை
அதாவது எல்லாம் வல்ல கடவுளுக்கு அடங்கியிருக்க அற்புதங்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. வரலாற்று நிகழ்வுகளான இயேசுவின் அற்புதங்கள் அவருடைய இறைத்தன்மை, மற்றும் மனிதத் தன்மை (Divine & Human) இயல்புகளை உறுதிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. எல்லாவற்றின் மீதும் இயேசுகிறிஸ்து அதிகாரம் படைத்தவர் என்பதை அற்புதங்கள் வலியுறுத்துகின்றன. அற்புதத்திற்கான எபிரேய வார்த்தை (mowpheth- miracle, token or omen) இறைச்செயல் அல்லது இறைவல்லமையின் சிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் அற்புதங்களை வெறும் அதிகாரம் மற்றும் சர்வ வல்லமையின் செயல்களாகக் கருதாமல், அன்பு மற்றும் கருணையின் செயல்களாகக் (Love & Concern) கருதப்படுகின்றன. இயேசுவின் ஒவ்வொரு அற்புதமும் குறிப்பிட்ட போதனைகளை (Teachings) உள்ளடக்கியது என்றும் சொல்லலாம். மேலும் இயேசுவின் அற்புதங்கள் அவர் திருப்பணியாற்ற பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி எனலாம். சுருங்கக்கூறின், இறைமைந்தரின் அற்புதங்கள் வெளிப்படுத்துபவை:

1. இறைமைந்தரின் தன்மை (Nature)
2. இறைமைந்தரின் வல்லமை (Power)
3. இறைமைந்தரின் கருணை (Mercy)
4. இறைமைந்தரின் போதனை (Teaching)
5. இறைமைந்தரின் ஊழியமுறைமை (Mission Method)

அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
         (மேயேகோ)





Post a Comment

0 Comments