ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன தன் வருகைக்கு முன்பாக நடக்கும் காரியங்களில் ஒன்றான கள்ள உபதேசங்கள் நம் காலத்திலும், நம்மை சுற்றிலும் பெருகிவிட்டன என்றால் மிகையாகாது. இவற்றைக் குறித்து திருச்சபையின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?
1. இன்றைக்கு கள்ள உபதேசத்தை பற்றிய அறிவு விசுவாசிகளிடம் இல்லை! ஏன் ஊழியக்காரர்களிடம் கூட இல்லை! சபைகளில் இதைக் குறித்து எச்சரிக்கை உபதேசங்கள் கொடுக்கப்பட வேண்டும். என் ஜனங்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது. ஜனங்கள் வஞ்சிக்கபடுவதற்கு முக்கிய காரணம் சபையின் மேய்ப்பர்களே. இவர்கள் தான் தங்கள் மந்தைக்கு உத்தரவாதம் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.போலிப்போதனைகளை கிறிஸ்தவர்கள் இனங்கண்டுகொள்ள வழிகாட்ட வேண்டும்.
2. மிக முக்கியமாக, துர்உபதேசங்களை பின்பற்றும் நபர்களை ஆலயங்களில் எந்தவொரு ஆராதனையிலும் (காலை, மாலை, உபவாசம், விழிப்பு ஜெபம், பண்டிகை மற்றும் சிறப்பு கூட்டங்கள்) ஆராதனை நடத்த, செய்தி அளிக்க வாய்ப்புக் கொடுக்க கூடாது.
3. இத்தகய மாறுபாடான வேதத்துக்கு புறம்பான வஞ்சிக்கப்பட்ட உபதேசத்திலிருந்து உங்கள் சபை ஜனங்களை பாதுகாப்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பணி. எனவே இவைகளை குறித்து ஒரு தெளிவான தீர்மானம் எடுங்கள். சபை கமிட்டிகளில் இதைக் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட வேண்டும்.
4. இணையத்தளங்களில் கள்ள உபதேசங்களைக் குறித்த விழிப்புணர்வை அதிகமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால், இன்றைய டெக்னாலஜி காலத்தில் இவர்கள் தங்கள் துர்உபதேசங்களை பரப்ப பயன்படுத்துவது இணையத்தங்களே. இணையதளங்களில் புல் மேய்ந்து கொண்டு நூதன உபதேசங்களை பதிவிடுகிறார்கள். சபை விசுவாசிகள் இதில் சிக்கிக் கொள்ளாதபடிக்கு கவனமாக இருக்க ஆலோசனை கொடுக்க வேண்டும்.
5. ஆலயங்களில் இவர்களுக்காக சிறப்பு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களும் விழிப்புணர்வு பெறுவார்கள். துர்உபதேசக்காரர்களும் மனம்மாற வாய்ப்புகள் கிடைக்கும்.
6. இதற்கு முக்கிய காரணம் பரவலாகக் காணப்படும் வேதஅறியாமையே. வேதஅறியாமை போதகர்களையும், ஆத்துமாக்களையும் இருட்டில் வைத்திருந்து வேதப்புரட்டுக்களும், போலிப்போதனைகளும் நம்மினத்தில் தலைவிரித்தாடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆகவே சரியான முறையில் வேதத்தை திருச்சபை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சாதாரண செய்திகளுக்கு பதிலாக வேத ஆராய்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
7. விசுவாசத்துக்குரிய அடிப்படை சத்தியங்களை கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருக்கவேண்டும். பொதுவான வேத அறிவுக்கு மேலாக, அடிப்படையான விசுவாசத்திற்குரிய சத்தியங்களை கிறிஸ்தவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இவற்றைத் திருச்சபைகள் தெளிவாக அறிந்துவைத்திருந்து முக்கியமாக சபை அங்கத்தவர்களுக்குப் போதிக்கவேண்டும்.
Acknowledgement
Y. Golden Rathis.
0 Comments