Ad Code

பதினெட்டு வருட கூனியை விடுதலையாக்கல்: நிமிரச்செய்யும் இறைமைந்தர் • Daughter of Abraham • Miracles of Jesus

1. தலைப்பு
பதினெட்டு வருட கூனியை விடுதலையாக்கல்: நிமிரச்செய்யும் இறைமைந்தர்

2. திருமறை பகுதி
லூக்கா 13:10-17

3. இடம் & பின்னணி
லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார். ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் இந்த அற்புதம் நடைபெற்றது. ஆனால் எந்த ஊரில், எப்போது என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

4. விளக்கவுரை
இயேசு ஒரு ஓய்வுநாளில் தேவாலயத்தில் பிரசங்கம் பண்ணிக்கொண்டு இருக்கும் போது, 18 வருடமாகப் பலவீனப்படுத்தும் ஆவியோடுள்ள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். 18 வருடம் என்பதால், இது பிறவியில் அந்த பெண்ணுக்கிருந்த கூன் அல்ல என்பது தெளிவு. அந்த ஆவியானது அவள் நிமிரக் கூடாதடி, அவளைக் கட்டி வைத்திருந்தது. அன்றிலிருந்து அவளால் நிமிர்ந்து பார்க்க முடியாதவளாக இருந்தாள். ஆனால், இயேசுவோ, “உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்" என்று சொல்லி தன்னுடைய கைகளை அந்தப் பெண்ணின் மேல் வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து பார்த்துத் தேவனை மகிமைப்படுத்தினாள்.

5. கருத்துரை
அந்தப் பெண் தன்னைக் குணமாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆலயத்துக்குள் வரவில்லை. ஆனால், இயேசு அந்தப் பெண்ணை தனிப்பட்ட விதத்தில் சந்தித்தார்.உலகத்திலுள்ளவர்கள் அந்தப் பெண்ணின் கூனைப் பார்த்து, அது இயற்கையாக ஏற்பட்ட கூன் என்று எண்ணினார்கள். ஆனால் கர்த்தரோ, அது சாத்தானின் கட்டு என்பதை அறிந்தார். இந்த அற்புதத்தை இயேசு ஓய்வுநாளில் செய்ததால், ஜெப ஆலயத் தலைவன் கோபத்துடன் ஜனங்களிடம் ஓய்வு நாட்கள் அல்லாத நாட்களில் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றான். ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்டத்தை போக்குவதை விட ஜெபஆலயத் தலைவனுக்குச் தன் சமயக் கட்டுப்பாடே பெரிதாகத் தோன்றியது.

இயேசு ஜெப ஆலயத் தலைவனைப் பார்த்து மாயக்காரனே என்று அழைத்து, இயேசு அவர்களைப் பார்த்து ஓய்வு நாளில் உங்கள் வீட்டிலுள்ள மிருகஜீவன்களைத் தொழுவத்தில் இருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையா என்று கேட்டார். அவர்களால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. இயேசு இந்தப் பெண்ணை ஆபிரகாமின் குமாரத்தி என்ற அந்தஸ்தத்தை கொடுத்து அவள் வாழ்வை நிமிரச் செய்தார். 18 வருடமாக ஆபிரகாமின் குமாரத்தியான இவளை இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்து விடுவது நல்லதில்லையா என்று வாதிட்டு ஒடுக்கப்பட்ட மக்களை நிமிரச் செய்யும் தம் முற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்தினார்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments