1. தலைப்பு
நீர்க்கோவையுள்ள மனிதனுக்கு சுகம்: பாடம் கற்பிக்கும் இறைமைந்தர்
2. திருமறை பகுதி
லூக்கா 14:1-6
3. இடம் & பின்னணி
லூக்கா மட்டுமே இந்த அற்புதத்தை பதிவு செய்துள்ளார். பிரசித்தி பெற்ற ஒரு பரிசேயருடைய வீட்டில் இயேசு விருந்துக்கு சென்ற போது, இந்த அற்புதம் செய்யப்பட்டது.
4. விளக்கவுரை
ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்ற போது, அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். அப்போது, இயேசு திருச்சட்ட அறிஞரையும் (வேதபாரகர்) பரிசேயரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்க, அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். பிறகு, அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?”என்று வினவ, அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.
5. கருத்துரை
இயேசு இந்த அற்புதத்தை விருந்து வீட்டில் செய்ததின் நோக்கம் தெளிவாக இப்பகுதியில் புரிகின்றது. ஓய்வுநாள் குறித்த தெளிவான பாடத்தைக் கற்றுக்கொடுக்க தான் இந்த அற்புதம். ஆகவே தான் இயேசு கேள்வி கேட்டு விட்டு அற்புதம் செய்து, பின்பு அவரே விளக்கம் கொடுத்தார். இயேசு குற்றம் கண்டுபிடிக்க வந்தவர்களைப் பார்த்து ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டதற்கு, அவர்கள் பேசாமல் இருந்தனர். இயேசு சொன்ன உவமையின் மூலம், தேவையுள்ளவர்களுக்கு ஓய்வுநாளில் உதவி செய்வதில் எந்தத் தவறும் இல்லையென்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments