Ad Code

பெரும்பாடுள்ள பெண்ணுக்கு விடுதலை: இறைமைந்தரின் வல்லமை Jesus Heals a Woman who Touched His Cloth

1. தலைப்பு
பெரும்பாடுள்ள பெண்ணுக்கு விடுதலை: இறைமைந்தரின் வல்லமை

2. திருமறை பகுதி
மத்தேயு 9:20-22 
மாற்கு 5:25-34
லூக்கா 8:42-48

3. இடம் & பின்னணி
இயேசு யவீரு என்ற ஜெபஆலயத்தலைவனின் மகள் மரணத்தருவாயில் இருப்பதால் அவளைக் குணமாக்கச் சென்று கொண்டிருக்கும் போது, பெரும்பாடுள்ள பெண் இயேசுவை தேடி வந்த போது இந்த அற்புதம் நடைபெற்றது.

4. விளக்கவுரை
பன்னிரண்டு வருஷங்களாக அந்த வியாதியோடு மிகவும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்த பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவினிடத்தில் வந்தாள். தன் செல்வத்தையெல்லாம் செலவழித்தும், அனேக வைத்தியர்களைப் பார்த்தும், அந்த வியாதியிலிருந்து அவளுக்குச் சுகம் கிடைக்கவில்லை. பெரும்பாடுள்ள உதிரப் போக்கின் போது அவள் யாரையாவது தொட்டால் தீட்டாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். 

ஆனால், அவள் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டதை நம்பி தான் தீட்டாக இருந்தாலும் இன்றைக்கு நான் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டுச் சுகமடைவேன் என்று வந்தாள். இயேசுவைச் சுற்றி திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருந்த போதும், தன்னுடைய நம்பிக்கையைத் தளரவிடாமல் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்தாள். யாருமறியாமல் இயேசுவின் அருகில் சென்று, இயேசுவுக்குத் தெரியாதபடி, இயேசுவிடம் எதுவும் கூறாமல் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டவுடன், அந்தப் பெண்ணின் உதிரத்தின் ஊறல் நின்றது. அந்தப் பெண் அந்த அற்புதத்தைச் சுதந்திரத்தாள். தெய்வீக ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொண்டாள். 

சீஷர்கள் இயேசுவிடம் இத்தனை திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உம்மைத் தொட்டது யார் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற கேள்வியைக் கேட்டனர். இயேசு ஜனங்களுக்கு முன்பாக அதை அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இயேசு அவள் எடுத்த முடிவையும், அவளுடைய விசுவாசத்தையும், செயலையும் பார்த்தார். எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றும், சமாதானத்தோடு போ என்றும், உன் வேதனையெல்லாம் நீங்கி விட்டது என்றும், இனி நீ சுகமாயிருப்பாய் என்றும் கூறினார். 

5. கருத்துரை
இந்த அற்புதத்தில், தொட்ட உடனேயே, இயேசுவிடமிருந்து வல்லமை புறப்பட்டு அவளைக் குணமாக்கியது. என்ன ஆச்சரியம்! அவள் தொட்ட மாத்திரத்தில் தானே அவள் உதிரம் ஊறுவது நின்றது, ஒரு புதிய பெலத்தை பெற்றாள். 'உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, கேட்ட இயேசுவுக்கு முன்பாக இறை மைந்தரின் வல்லமையை அனுபவித்த அந்தப் பெண் சாட்சி பகர்ந்தாள். இறை வல்லமையை நாள்தோறும் அனுபவிக்கும் நாம் அதை எப்படி சாட்சி பகருகிறோம்? நாம் வாழ்வு இறை மைந்தரின் வல்லமைக்கு நற்சாட்சியாக அமையட்டும்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments