Ad Code

நாயீனூர் கைம்பெண் மகனுக்கு உயிர்கொடுத்தல்: வாழ்வு அளிக்கும் இறைமைந்தர் • Jesus Miracles 11 • 6/3/2023

1. தலைப்பு
நாயீனூர் கைம்பெண் மகனுக்கு உயிர்கொடுத்தல்: வாழ்வு அளிக்கும் இறைமைந்தர் 

2. திருமறை பகுதி
லூக்கா 7:11 - 17

3. இடம் & பின்னணி
லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்துள்ள 6 அற்புதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அற்புதம் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூமுக்கு தென்மேற்கில் இருக்கிற, நாயீன் என்னும் ஊரில் இயேசு செய்தது. கப்பர்நகூமிலிருந்து நாயீன் ஊருக்கு செல்லும் வழியில் ஏராளமான கல்லறைக் குகைகள் இன்றும் இருக்கின்றன. 

4. விளக்கவுரை
நாயீன் ஊரில் ஒரு கைம்பெண் இருந்தாள். அவளுக்கு ஒரே மகன். அவன் இறந்து போனான். இறந்தவனை அடக்கம் பண்ண பாடையை சுமந்துகொண்டு மக்கள் கூட்டமாக கல்லறைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இயேசு எதிரே வந்தார். தலைவிரி கோலமாக கதறி அழுது கொண்டு வந்த கைம்பெண்ணைக் கண்டு, அவள் மீது மனதுருகினார். அந்தப் பெண்ணைப் பார்த்து, அழாதே என்றார். கிட்ட வந்தார். பாடையைத் தொட்டார். சுமந்தவர்கள் நின்றார்கள். இயேசு ‘வாலிபனே எழுந்திரு’ என்றார். மரித்தவன் உயிரோடு எழுந்தான், பேசினான். அவனைத் தாயாரிடம் ஒப்புவித்தார். அவளைத் தேற்றினார்.

5. கருத்துரை
நாம் வாழும் உலகில், கணவனை இழந்தவள் ஆறுதலும், தேறுதலும் அடைவது கடினம் தற்போது அந்த ஒரே மகனும் இறந்துவிட்டான். இந்த இழப்பை எப்படி அவளால் தாங்க முடியும்?. அவள் எதிர்காலம் கேள்வி குறியாயிற்று. ஆனால் இந்த சூழலில் இயேசு அவளுக்கு வாழ்வு அருளினார். மகிழ்ச்சியோடு வாழ உதவி செய்தார். இயேசுவின் மகத்துவத்தை மக்கள் கண்டனர். ஆம், இயேசு வாழ்வு தருபவர். அவரே வழி, சத்தியம், மற்றும் வாழ்வு (யோவான் 14.6). அவரை நம்பி வாழ்வும். நல் வாழ்வு அருள்வார்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)



Post a Comment

0 Comments