Ad Code

மீனின் வாயில் நாணயம்: இறைமைந்தரின் நல்லெண்ணம் | Miracles of God's Son

1. தலைப்பு
மீனின் வாயில் நாணயம்: இறைமைந்தரின் நல்லெண்ணம் 

2. திருமறை பகுதி
மத்தேயு 17:24-27

3. இடம் & பின்னணி
இயேசு கப்பர்நகூமில் இருந்த போது, வரி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு அருகில் தான் கலிலேயா கடல் (ஏரி) உள்ளது. 

4. விளக்கவுரை
வரி வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி கட்டுகிறாரா?” என்று கேட்க, அதற்கு அவர், “கட்டுகிறார்" என்று சொன்னார். மீண்டும் பேதுரு வீட்டுக்குள் போன போது அவர் பேசுவதற்கு முன்பே இயேசு அவரிடம், “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கிற ராஜாக்கள் சுங்கவரியை அல்லது தலைவரியை யாரிடம் வசூலிக்கிறார்கள்? அவர்களுடைய மகன்களிடமா, மற்றவர்களிடமா?” என்று கேட்க, அதற்கு பேதுரு, “மற்றவர்களிடம்” என்று சொன்னார்; அப்போது இயேசு, “அப்படியானால், மகன்கள் வரி கட்ட வேண்டியதில்லையே என்று சொல்லி, அவர்கள் நம்மேல் குற்றம் சொல்லாமல் இருப்பதற்காக, நீ கடலுக்குப் போய்த் தூண்டில் போட்டு, முதலில் சிக்கும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்; அதில் ஒரு வெள்ளிக் காசு இருக்கும். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடுத்துவிடு” என்று அனுப்பினார். ஒரு வெள்ளிக் காசு/ நான்கு டிராக்மா (அல்லது ஷேக்கல்) நாணயம் இரண்டு நபர்களுக்கு கோவில் வரி (இரண்டு டிராக்மா நாணயம்) செலுத்த போதுமானதாக இருக்கும் . இது பொதுவாக ஒரு டைரியன் ஷெக்கல் என்று கருதப்படுகிறது

இயேசு முன்னறிவித்தபடியே பேதுரு மீனைப் பிடித்தார் என்று சொல்லாமல் முடிகிறது. ஆனால், தூண்டில் போடும் போது மீன் கிடைப்பது, அந்த மீனின் வாயில் வெள்ளிப் பணம் இருப்பது எல்லாம் ஏற்கெனவே இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. பேதுரு இயேசுவின் கட்டளைக்குக் கீழ்படிந்து கடலில் போய் மீனைப் பிடித்து அதன் வாயிலிருந்து வெள்ளிப் பணத்தை இயேசு கூறியபடி எடுத்து இயேசுவுக்கும், தனக்கும் வரிப்பணத்தைக் கட்டினார். ஏனென்றால், 'ஆம்" என்ற பேதுருவின் கூற்று "இயேசு இதுவரை வரி செலுத்தும் பழக்கத்தில் இருந்தார் என்பதை" தெளிவுபடுத்துகிறது 

5. கருத்துரை
இயேசுகிறிஸ்து வரிசெலுத்துவதைக் குறித்து வரிப்பணம் வாங்குகிறவர்களிடம் விவாதம்பண்ணாமல், பேதுருவிடம் விவாதம் பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து ஏன் வரிசெலுத்தவேண்டும் என்பதற்கான காரணத்தை பேதுருவும் புரிந்து கொள்ளவேண்டும். "நாம் புண்படுத்தாதபடி, ஏரிக்கு சென்று எடுத்து, என் மற்றும் உனது வரியாக அவர்களுக்குக் கொடு" என்று இயேசு பேதுருவிடம் சொன்னதிலிருந்து, இயேசு எவ்விதம் அக்கறை உள்ளவராக இருந்திருக்கிறார் என்பது புரிகிறது. மீனின் வாயிலிருந்த பணம் கிறிஸ்துவுக்கும் பேதுருவுக்கும் வரிப்பணம் செலுத்துவதற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கிறது. தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நாம் பேராசைப்படக்கூடாது. மேலும், இயேசுகிறிஸ்து வரிப்பணம் வாங்குகிறவர்களுக்கு இடறலாக இருக்க விரும்பவில்லை. தம்முடைய சீஷர்களும் அவர்களுக்கு இடறலாக இருக்க இயேசு அனுமதிக்கவில்லை.  

இயேசுகிறிஸ்து யூதமார்க்க முறைமையின்படி செலுத்த வேண்டிய எல்லா வரிகளையும் செலுத்தினார். அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து ஜீவித்தார். இது நமக்கு ஒரு முன்மாதிரியான காரியம் (ரோமர் 13:1-8). விசுவாசிகளாகிய நாமும் பல சந்தர்ப்பங்களில் மிகுந்த ஞானத்தோடு நடந்துகொள்ளவேண்டும். நமது கருத்தை மாத்திரமே வலியுறுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களுடைய கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்கவேண்டும். நாம் பயந்து போய் நமது உரிமைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆயினும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுமில்லை
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ) 

Post a Comment

0 Comments