ஹீபர் (1783-1826) சபை குருவாக பயிற்சி பெற்று நல்லதொரு ஆயராக ஐரோப்பாவின் பல இடங்களுக்கு சென்று அருமையான பிரசங்கங்களை செய்து அநேகரை ஆண்டவருக்குள் வழி நடத்தினார்.
1823ம் ஆண்டு இந்தியாவிற்கு பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்டு மிகுந்த ஆவலுடன் புறப்பட்டு வந்தார். 1823ம் ஆண்டு, ஜீன் மாதம் 1ஆம் தேதி லாம்பர்த் அரண்மனையில் அபிஷேகம் செய்யப்பட்டார். பின்னர், நாட்டின் பல பாகங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டார். சென்ற இடங்களிலெல்லாம் திடப்படுத்தல் ஆராதனைகளை நடத்தி அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
சென்னையில் வேப்பேரி என்ற இடத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார். தமிழ் மொழியிலேயே யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தார். குறைந்த நாட்களில் மிகுந்த சாதனைகளைச் செய்தார். சிறந்த கிறிஸ்தவ பக்தராக, சுவிசேஷ வாஞ்சை படைத்தவராக, சிறந்த கவிஞராக, மக்கள் உள்ளத்தை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்தும் நல்ல ஆயராக, தனது பணிகளை செவ்வனே நிறைவேற்றினார்.
வயது 44, ஏப்ரல் 3 இதே நாள், 1826ஆம் வருடம். அகிலமெங்கும் சென்று அற்புதமான பாடல்களால் அரும்பணியாற்ற ஆவல் கொண்டிருந்த ஹீபரின் இதயம் துடிக்க மறுத்தது. மக்களை துக்கத்தினுள் ஆழ்த்தி தூயாத் தூயவரின் சர்வ வல்ல நாதரின் பாதம் சேர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் இவர் நினைவு கல்லூரியும், உயர்நிலை பள்ளிகளும், சென்னையில் விடுதியொன்றும் இவர் புகழை அறிவித்துக்கொண்டிருக்கின்றன.
தூய, தூய, தூயா, சர்வ வல்ல நாதா.. இப்பாடல் கிறிஸ்தவ பெருமக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆன்மீக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் அற்புத பாடல் இது. இப்பாடலை இயற்றியவர் பிஷப் ஹீபர். இளமையிலேயே கவி நயத்தை கடவுளின் நாம மகிமைக்காக பயன்படுத்தியவர். இவர் எழுதிய 11 பாடல்கள் ஆங்கிலத் திருச்சபையின் பாடல் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
0 Comments