Ad Code

ஜேம்ஸ் எட்வர்ட் கிம்டன் Bro.James Edward kimpton RTU - G.kallupatt

யார் இந்த கிம்டன் தாத்தா?

அவர் ஒரு ஆங்கிலேயர் ஆனாலும் தமிழ் அழகாக பேசுவார்.

ஆர்.டி.யூ நிறுவனத்தின் நிறுவனர்.

ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற அநாதைக் குழந்தைகளை வளர்த்தார்.

இலவச கல்வி, இலவச சத்துணவு வழங்கினார்.

இலவச மருத்துவ மனையை ஏற்படுத்தினார்.

வீடற்றோர்க்கு வீடு கட்டிக் கொடுத்தார்.

தண்ணீர் வசதிகள் இல்லாத சுற்றுவட்டார கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுத்துள்ளார்.

இதுபோன்ற அவர் செய்த பல சேவைகளில் சிலவற்றையே மேலோட்டமாக நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

தேவையில் உள்ள எளியோருக்கு அவர் பலவகையான சேவைகள் செய்தார்.அதில் சில

 1 .கிராம நல்வாழ்வுத் திட்டம் 1982.
                                   கல்லுப்பட்டியில் உள்ள ஆற்றுப் பகுதியில் பெரிய கிணறு தோண்டி, குழாய்கள் மூலம் குடிநீரை எடுத்து, மேல்நிலைத் தொட்டிகள் அமைத்து கல்லுப்பட்டி,தும்மலப்மட்டி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கல் திட்டம்.

2 .கிராமப்புற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி.நடமாடும் தையல் பயிற்சி.

3.இலவச கம்யூட்டர் பயிற்சி.

4 .கிராம புறக் குழந்தைகளுக்கு பகுதிநேர பள்ளிகள்.

5.சிமெண்டினாலான வீடு கட்ட தேவையானப் பொருட்கள் தயாரிப்பு பிரிவு.

6.நடமாடும் மருத்துவ மையம்

7 .தொழுநோயாளிகளுக்கான பணிகள்.போலியோ,காச நோய்,தொழுநோயால் அந்த காலகட்டத்தில் 1985 அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கான மருத்துவ உதவி.

8.இலங்கை அகதிகளுக்கான பணிகள்.
(1980 இல் 70 க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் திடீரென ஆர்.டி.யூ வில் தஞ்சம் அடைந்துள்ளனர்.உடனடியாக அவர்களுக்கு உணவு, மருத்துவம் கொடுத்து பாதுகாத்தார் நமது தாத்தா.அப்போதைய மதுரை மாவட்டம் ஆட்சியரின் முயற்சியால் தமிழக அரசு இலங்கை அகதிகளுக்கு மலைப்பாங்கான பகுதிகளில் இடம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது.அவர்களுக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுத்தார் நமது கிம்டன் தாத்தா. ( புஷ்பராணி நகர் என அப்பகுதிக் பெயரிட்டார்.) வீடுகட்ட தேவையான பொருட்களை மலைப்பாங்கான பகுதிக்கு எடுத்துச் சென்றது மிகவும் கடினமான பணியாக உணர்ந்தாலும் இலங்கை அகதிகளின் மகிழ்ச்சியில் இன்னல்களை மறந்தார்.

9 .எச்.ஐ.வி குழந்தைகளுக்கான பணிகள்.சுனாமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காப்பகம்.

10 .மகளிர் சுய உதவிக் குழுக்கள்.தமிழக அரசு செயல்படுத்தும் முன்பே ஆர்.டி.யூ வின் மூலம் துவங்கப்பட்டது.

11. நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள்.

12.முதியோர் உதவித் தொகையுடன் கூடிய 3 நேர உணவு வழங்கும் திட்டம்.

14.ஏழை மாணவர்குக்கு கல்வி உதவித்தொகை.

15.பகல்நேர குழந்தைகள் காப்பகம்.
சத்துணவு, சத்துமாவு திட்டம்.

ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து; தொழில் கல்வி அளித்து பல மருத்துவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என பல உயர்நிலையைக் கொடுத்துள்ளார்.

என எண்ணற்ற சேவைகளை செய்துள்ளார்.

கிம்டன் தாத்தா எப்படி இவ்வளவு சேவைகளை செய்தார்?? அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவரோ?? என்ற கேள்வி நமக்குள் வரலாம்.

உண்மையில் கிம்டன் தாத்தா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.அவர் இங்கிலாந்து வடக்கு வேல்ஸ்- கான்வே என்ற சிற்றூரில் தந்தை சார்லஸ் கிம்டன், தாய் டொரிஸ் தம்பதிகளுக்கு மகனாக 23/05/1925 பிறந்தார்.அவருக்கு 3 சகோதரர்கள்,1 சகோதரி.முதல் உலகப் போரின் போது இங்கிலாந்தில் பசி வறுமை சூழல்.வசதிகளற்ற வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.அவரது இளமைக்காலம் மிகவும் வறுமை சூழ்ந்த காலம்.நடந்தே பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று வருவாராம்.

அவர் மிக வறுமை சூழலில் வளர்ந்தவர் என்பதால் ஏழை மக்களின் கஷ்டளை எளிதில் புரிந்து கொள்கிறார்.

ஒவ்வொரு அவர் செய்த சேவைக்கு முன்னதாக அவர் பலரிடம் ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவும்படி கேட்ப்பார் ; கடிதம் வாயிலாக தேவையின் விவரங்களை விளக்கிக் கூறுவார்.அதில் ஏமாற்றமும் அவமானங்களும் அடைந்தாலும் ஆதரவற்றவர்களுக்கு உதவியே ஆக வேண்டும் என நினைத்து முயற்சிகளை மனம் தளராமல் மேற்க் கொள்வார்.( நாம் பார்த்திருக்கலாம் கிம்டன் தாத்தா அவரின் அலுவலகத்தில் எப்போதும் எதாவது எழுதிக் கொண்டே இருப்பார்.) ஒவ்வொரு நலத்திட்ட செயல்பாடுகளுக்கு முன் கிம்டன் தாத்தா நமக்காக கையேந்தி உதவிகள் கேட்டுள்ளார்.

இப்படியாக
வீடற்ற ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுத்துள்ளார் அவைகளின் எண்ணிக்கை 8800 தாண்டும்.

2460 கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
சுற்றுவட்டார கிராமங்களில் சமுதாய கூடங்கள்,
சாலைகள் அமைத்தல்
அரசுப் பள்ளிகளில் சீரமைப்பு.
தினமும் 2000 பேருக்கான சத்துணவு,
4 குழந்தைகள் காப்ப
கம்,
8 தங்கும் விடுதிகள்,
8 பால்வாடிகள் என அமைத்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறையை மாற்றினார்.

19,20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதமான மனிதர் நாம் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தார் என எண்ணும்போது வியப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.

ஒரு மனிதன் தன் சொந்தங்களை விட்டு,வேறொரு நாட்டில் வாழ்வதென்பது உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த வேதனையை தரும்.அதுவும் இங்கிலாந்து - இந்தியா.தட்ப்ப வெப்பநிலை, உணவு என எல்லாமே மிகவும் வேறுபட்ட நிலை.இந்த சுழ்நிலைகளை ஆதரவற்ற குழந்தைகள், எளிய மக்களுக்காக ஏற்றுக் கொண்டார்.

1939 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் தெலசால் சகோதர துறவற சபையில் சேர்ந்தார் நமது கிம்டன் தாத்தா.
( தெலசால் சகோதர துறவற அவை என்பது அதிகமாக சமூக பணி, ஏழைகளுக்கு உதவுதல்; அவர்களின் வாழ்க்கை முறையை சிறு தொழில் கற்றுக் கொடுப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவது முக்கிய பணி.)

1964 இல் இந்தியா- தமிழ்நாடு- மதுரை நாகமலை க்கு சேவை செய்ய வந்தார்.
பின் 1974 - மே மாதத்தில் வத்தலக்குண்டு - கெங்குவார்பட்டி யில் உள்ள தூய வளனார் கிராமம் ( Boys village ) சேவை செய்ய வந்தார்.

அப்போது கெங்குவார்பட்டி , கல்லுப்பட்டி மக்கள் **சாத்தான்** தங்கியுள்ளது; ""மதம் மாற்ற வந்துள்ளது"" என நமது தாத்தாவை பழித்து பேசுவார்களாம்.இதனையெல்லாம் தன் சேவை மூலம் மாற்றினார் நமது கிம்டன் தாத்தா.இப்பொழுது இந்த ஊர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள் "" நம்மோடு வாழ்ந்த தெய்வம் என்றே சொல்வார்கள்.

 அந்த காலகட்டத்தில் வத்தலக்குண்டு தூய தோமா பங்கு கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கிம்டன் தாத்தா செல்வார்.பங்குத் தந்தையாக இருந்த பணியாளர் மைக்கேல் நான்கு சிறுவர்களை பராமரிக்க முடியுமா?? என கேட்டுள்ளார்.அந்த நான்கு குழந்தைகளும் 7 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்.பெற்றோர்கள் காச நோயால் இறந்துவிட்டனர் எனவும் கூறியுள்ளார்.
.அதற்க்கு கிம்டன் தாத்தா ""இவர்களை பராமரிக்க இயலாது.கொஞ்சம் பெரிய குழந்தைகள் என்றால் நான் கண்டிப்பாக இக்குழந்தைகளைப் பராமரிப்பேன் "" எனக் கூறி "முடியாது" என சொல்லி கிளம்பிவிட்டார்.பாதி தூரம் சென்ற பிறகு ""நானே அந்த ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை என்றால் யார் ஆதரவு கொடுத்து பராமரிப்பது ?? என்ற கேள்வியுடன் திரும்பி வந்து அந்த குழந்தைகளை அழைத்துச் சென்று, அவர்களை பராமரிக்க ஒரு ஆதரவற்ற , கைவிடப்பட்ட கைபெண்ணை வேலைக்கு அமர்த்தி, அவர்களை வளர்த்து அவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றினார் நமது கிம்டன் தாத்தா.இவ்வாறு உருவானதே ""**அடையாததை அடைவீர்""** REACHING THE UNREACHED. ( RTU ). 
இன்று 4 குழந்தைகள் காப்பகத்தில் 70 கற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, ஒரு வீட்டிற்கு 6 முதல் 8 குழந்தைகள் ஒரு அம்மா என 1000 குழந்தைகள் மிக அழகான குடும்ப சூழலில் வளர தாயுணர்வுடன் உருவாக்கியுள்ளார் நமது கிம்டன் தாத்தா.

இவர் சாதி, மதம்,மொழி,இனம் என எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்.

இவர் செய்த சேவைகள் **சாதனைகள்** என்று சொல்வதில் கடந்து பல ஆதரவற்ற குழந்தைகள் ; ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றி ; ஆனந்தமான வாழ்க்கையை கொடுத்தவர்.ஏழைகளின் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் தலைமுறை முன்னேற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தார்.
அவரின் 'வீடற்றோர்க்கு வீடு' என்ற திட்டத்தால் இன்று இயற்கை சீற்றத்திலிருந்தும், விஷப்பூச்சிகளின் தொந்தரவில் இருந்தும் பாதுகாப்பாக வாழும் குடும்பங்கள் ஏராளம்.
 
கிம்டன் தாத்தாவைப்பற்றி சொல்ல வேண்டுமெனில் அது நிறைவுறா சாதனை பயணம்.

இன்றும் சற்றும் குறையாத கிம்டன் தாத்தாவின் சேவைகள் ஆர்.டி.யூ என்ற புனித பூமியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
**ஆர்.டி.யூ **என்பது என்றுமே ஆதரவற்றவர்களுக்கு கிடைக்கும் சேவைகள் நிறைந்த **அட்சய பாத்திரம்**.

அவர் மறைந்ததோ 2017 அக்டோபர் 5 இரவு 8.15 ஆக இருக்கலாம்.ஆனால் இன்றும் அவர் ஆர்.டி.யூ வில் இருப்பதாகவே உணரப்படுகிறது.
அவர் அமர்ந்திருக்கும் அவரது அலுவலகம் - ஆர்.டி.யூ. வளாகம் கடந்து போகும் முன் நமது கண்கள் தானாக அவரை தேடும் ( தாத்தா அறைக்கு உள்ளே அல்லது வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்திருப்பார்). அந்த நொடியில் நம்மில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .

புகழை விரும்பாத; மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.

 2009 ஆண்டே அவர் தனது இறப்பிற்குப் பின்னர் செய்ய வேண்டிய எளிய முறையை உயில் மூலம் குறிப்பிட்டிருந்தார். "" நான் இறந்த பிறகு சாதாரண ஏழைக்கு செய்வது போல் வெள்ளைத் துணியில் சுற்றி,தென்னைத் தட்டியிலும், மூங்கில் கம்பாலும் ஆன 4 பேர் தூக்கிச் செல்லும் சிறு படுக்கையில் எடுத்துச் சென்று சவப்பெட்டி இல்லாமல் நான் வாழ்ந்த இந்த மண்ணில் என்னை அடக்கம் செய்யுங்கள்"" என ( கிம்டன் தாத்தாவின் மத முறைப்படி மரப்பெட்டியில் தான் உடலை வைத்து அடக்கம் செய்வர்) கேட்டுக் கொண்டார். அதன் படியே மிகவும் எளிமையாக நல்லடக்கம் செய்யப்பட்டது.இப்படியொருவர் மிகவும் வணக்கத்திற்குரியவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றின் சிறிது படிக்கின்ற போதே மிகவும் பிரமிப்பாக உள்ளது.
தனது சொந்த வாழ்க்கை என தன்னல வாழ்க்கை வாழாமல்; தனது சொந்தங்களுக்கு என எதனையும் செய்யாது, வாழ்நாள் முழுவதும் ஆதரவற்றவர்களுக்காக; ஏழை எளிய மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வது என்பது மனிதர்களால் முடியாததும், கிம்டன் தாத்தாவினால் முடிந்ததுமாக உள்ளது.

இப்படியொருவரின் புகழை பலரும் அறியச் செய்ய வேண்டும்.
போற்றப்பட வேண்டிய மகான் நமது தாத்தா. குக்கிராமங்களில் பல முன்னேற்ற சேவைகளைச் செய்து ஏழை, எளிய மக்களின் துயரத்தை நீக்கினார் நமது கிம்டன் தாத்தா.
"
கிம்டன் தாத்தா" யாருடனும் ஒப்பிட முடியாத மாமனிதர்,

அவரின் சேவை வாழ்க்கையைப் போற்றி மேன்மைப்படுத்துவது நமது கடமை. .

Post a Comment

0 Comments