விமானத்தில் ‘அங்கிள்’ என்று தன்னை அழைத்ததால், ஜூனியர் விமானியைத் தாக்கிய சீனியர் விமானி!’
சமீபத்தில் வெளியான இச்செய்தியைப் படித்ததும், `வேடிக்கையாக இருக்கிறதே' என்று நினைத்திருப்பீர்கள். இது, வேதனையானதும்கூட! இது செய்தியல்ல; கலாசார சீரழிவு. ஒருவரை ஒருவர் உறவு முறை சொல்லி அழைக்கும் நம் பாரம்பர்யம் சமாதியாவதைக் குறிக்கும் சம்பவம். இன்னொரு பக்கம், இன்று திரைப்படங்களில் காதலனை ‘பிரதர்’, ‘அண்ணா’ என்றெல்லாம் அழைத்து, கலாசாரக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர். அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் ‘அங்கிள்’, பெண்கள் அனைவரையும் ‘ஆன்ட்டி’ என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!
அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன், மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு. சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள். அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் ‘முறைக்கார’ உறவுகள். கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள். வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.
அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே! அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்.
இதில் விசேஷம் என்னவென்றால், நம் தமிழ்க் குடும்பங்கள் ரத்த சொந்தங்களுக்கு மட்டும் இந்த உறவை எழுதிவைக்கவில்லை. பக்கத்து வீட்டு ‘அத்தை’, எதிர்வீட்டு ‘சித்தப்பா’, கடைசி வீட்டு ‘அப்பத்தா’, தெரு முக்குக் கடை ‘அண்ணன்’ என்று அனைவரையும் முறை சொல்லிக் கூப்பிடும் அன்பு நிறை கலாசாரம் நம்முடையது. இதில் வயதின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான, பாதுகாப்பான, கண்ணியமான உறவுமுறைப் பெயர்களை அவரவர்க்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். உதாரணமாக, ஒரு பெண் தன்னைவிட வயதில் சற்று மூத்த ஆணை, ‘அண்ணே’ என்று அழைத்து, ஒரு பாதுகாப் பான பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். அதேபோல, தங்களைவிட வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும்கூட, ஆண்கள் பலர், திருமணமான பெண்களை ‘அண்ணி’, ‘மதினி’ என்று அழைத்து, தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.
ஆனால் ‘வெஸ்டர்ன்’ கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், ‘என் பிள்ளைக்கு தெரிஞ்ச ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்!’ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்றே பழக்குவது கொடுமை! இன்னும் கொடுமையாக, இன்று பல இளம்பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைப்பதைப் பார்க்கிறேன்.
நீங்களே யோசித்துப் பாருங்கள். ஓர் இளம்பெண், தெரியாத ஓர் இடத்தில், எதிர்ப்படும் ஓர் ஆணிடம் விலாசம் கேட்கிறாள். ‘சார் இந்த அட்ரஸ் சொல்லுங்க’ எனும்போது, அவரும் சம்பிரதாயமாக வழி சொல்வார். ‘அங்கிள்... இந்த அட்ரஸ் தெரியுமா?’ என்று கேட்டால், 30+ ஆசாமியாக இருந்தால், அந்த விமானி போல கோபப்படவும் வாய்ப்பிருக்கிறது. ‘அண்ணே... இந்த அட்ரஸ் எங்கனு சொல்றீங்களாண்ணே..?’ என்று கேட்டால், அந்த உறவுமுறைக்கான பொறுப்பை தான் ஏற்று, அக்கறையுடன் வழி சொல்லி அனுப்பி வைப்பார். சந்தேகமாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் இந்தச் சூழலைச் சொல்லி அவர்களின் மனதைக் கேட்டுப் பாருங்கள். அதேபோல, வெளியிடத்தில் ஓர் ஆண், பெண்ணிடம் பேசும் சூழலை ‘அக்கா’, ‘அண்ணி’ போன்ற அழைப்புகள் சுமூகமாக்கும். இதை நீங்களே உணரலாம்.
உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது, வெறும் வார்த்தை இல்லை. அது அந்த உறவுக்குத் தரும் மரியாதை. இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, இடைவெளியை நிர்ணயிப்பது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்... உறவு களையும், அதன் உன்னதங்களையும்!
ஒரு நிமிடம் பெற்றோர்களே..!
பெரியவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் அதிக விஷயங் களைக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, உங்களின் உறவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, ‘என் அப்பாவோட தம்பி எனக்கு சித்தப்பா’ என்று உறவு வழிகளை விளக்குங்கள்.
‘நீ அண்ணி என்றால், உன் கணவர் எனக்கு என்ன முறை வேண்டும்?’ என்று உறவுகளை விளையாட்டு விடுகதைகளாக குழந்தைகளுக்கு மனப்பாட மாக்குங்கள்.
குழந்தைகள் சொல்லும் உறவுமுறைகளைக் கவனித்து சரி செய்யுங்கள்.
பள்ளி, கடைகள் என்று, ‘சார்’ என்ற பொது உறவை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை யும் கற்றுக்கொடுங்கள்.
வயதில் பெரியவர்களை ‘வா, போ’ என்று அழைப்பது, பெயர் சொல்லி அழைப்பது போன்ற தவறான பழக்கங்களைத் திருத்துங்கள்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
0 Comments