தூக்கம் என்பது எத்தனை பெரிய வரம் என்பதை தூக்கமின்றித் தவிக்கிறவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். அதிலும் படுத்த உடன் தூக்கம் என்பது கிடைத்தற்கரிய வரம். போதுமான தூக்கமில்லாதது எப்படி பிரச்னைக்குரிய விஷயமோ, அப்படித்தான் தேவைக்கு அதிகமான தூக்கமும். அத்தகைய அதீத தூக்கத்தை ‘நார்கோலெப்ஸி‘ என்கிறது தூக்க அறிவியல்!
சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதன் ஹீரோ விஷாலுக்கு ‘நார்கோலெப்ஸி’ என்ற தூக்க நோய் இருப்பதாகச் செல்கிறது கதை.
அளவுக்கு அதிக தூக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பார் அவர். அதிர்ச்சி, ஆனந்தம், சோகம் என எந்த உணர்ச்சி கிளர்ந்தெழுந்தாலும் உடனே மயங்கி விழுவார்... சாரி தூங்கி விழுவார். அதென்ன நார்கோலெப்ஸி? அந்தப் பிரச்னை அப்படி என்ன தான் செய்யும்? தூக்கப் பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவரும், நித்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்லீப் சயின்ஸஸின் இயக்குனருமான "என்.ராமகிருஷ்ணனிடம்" பேசினோம்...
‘‘நமது மூளையில் உள்ள ஹைப்போக்ரெட்டின் (hypocretin) மற்றும் ஒரெக்சின் (Orexin) ஆகிய ரசாயனங்களின் அளவு சரியான நிலையில் இல்லாத போது ஏற்படும் பிரச்னையே நார்கோலெப்ஸி. நம் நாட்டில் நார்கோலெப்ஸியின் பாதிப்பு மிக மிகக் குறைவு. ஜப்பானில் மிக அதிகம்.
*நார்கோலெப்ஸியின் அறிகுறிகள் 4 விதங்களில் வெளிப்படும்..*
1. அதீத தூக்கம்.
2. கேட்டப்ளெக்ஸி (Cataplexy) அதாவது, அதிகபட்ச சந்தோஷம் அல்லது அதிகபட்ச வருத்தம் என உணர்வுகள் உச்சம் தொடும் போது துவண்டு போய் கீழே விழுவது. இந்த உணர்வானது 2 நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனக்கு நடப்பது என்னவென்று தெரியும். ஆனாலும், அதைக் கட்டுப்படுத்த முடியாது.
இன்னும் சொல்லப் போனால், துவண்டு விழப் போகிற நேரத்தில் அவர்களை சிரிக்கச் சொன்னால் கூட சிரித்து விட்டு, பிறகே கீழே விழுவார்கள். இந்த அறிகுறி இருந்தாலே நார்கோலெப்ஸி இருப்பதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி விடலாம். ஆனால், நார்கோலெப்ஸி பாதித்த எல்லோருக்குமே இந்த அறிகுறி இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. 10 முதல் 20 சதவிகிதத்தினரிடம் மட்டுமே காணப்படும் இந்த அறிகுறி.
3. ஸ்லீப் பராலிசிஸ் (Sleep paralysis) தூங்க ஆரம்பிக்கும் போதே கை, கால்களை நகர்த்த முடியாமை. ஆனால், இவர்களுக்கும் தன்னைச் சுற்றிலும் நடக்கிற விஷயங்கள் எல்லாம் தெரியும்.
4. ஹிப்னாகோகிக் ஹாலுசினேஷன் (Hypnagogic hallucinations ) தூங்க ஆரம்பிக்கும் போது, கண் முன்னே யாரோ நடமாடுவது போலவும், ஏதோ சம்பவங்கள் நடப்பது போலவும் உணர்வார்கள்.
இந்த 4 அறிகுறிகளும் சேர்ந்து காணப்படுகிறவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், நார்கோலெப்ஸி பாதித்த எல்லோருக்கும் எக்கச்சக்கமான தூக்கம் இருக்கும். பொதுவாக இந்த பாதிப்பானது 15 வயது முதல் 25 வயதில் ஆரம்பிக்கும். அரிதாக சிலருக்கு 50 வயதில் கூட வரலாம். மரபணு காரணமாக சிலருக்குப் பரம்பரையாகவும் இது தொடரலாம்.
சரி... இந்தப் பிரச்னையைக் குணப்படுத்திவிடலாமா என்றால் முடியாது என்பது தான் உண்மை.
நீரிழிவு, ரத்த அழுத்தம் மாதிரி இதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்... அவ்வளவுதான். அதீத தூக்கத்தைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொடுக்கலாம். அந்த மருந்துகளின் அளவானது பாதிக்கப்பட்டவரின் உடல்நலம், அவரது தூக்கப் பாதிப்பின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டியது.
0 Comments