Ad Code

நோஸி மெண்டாலிட்டி • Nosey mentality

நாம் பணியாற்றும் அலுவலகம் முதல் வீடுவரை சிலர் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பர். மற்ற சிலரோ அடுத்தவரது வேலை, தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஆராய்வதையும் அதுகுறித்து கருத்து கூறுவதையும் வழக்கமாகக் கொண்டு இருப்பர். இதுபோன்ற நபர்களை நாம் வாழ்வில் ஒருமுறையேனும் கடந்து வந்திருப்போம். அதே சமயம் இவர்களை அறவே தவிர்க்கவும் முடியாது. எனவே இதுபோன்றவர்கள் அருகில் வந்தாலே இவர்களைக் கண்டு பதறி ஓடவே பலரும் நினைப்பர்.

இதற்கு ஆங்கிலத்தில் 'நோஸி மெண்டாலிட்டி' (Nosey mentality) என்று பெயர். இது எதனால் சிலருக்கு உண்டாகிறது, இதற்கான உளவியல் காரணங்கள் என்னென்ன எனத் தெரிந்துகொண்டால், உங்களுக்கு இவர்கள்மீது கோபம் ஏற்படாமல் பரிதாபம் ஏற்பட்டுவிடும். அவை என்னென்ன எனப் பார்ப்போமா?

பெரும்பாலும் நோஸி-க்களுக்கு சமூக கலந்துரையாடல் ஆற்றல் மிகக் குறைவாகவே இருக்கும். எந்த இடத்தில் எதைப் பேசினால் மற்றோர் மனது புண்படும் என இவர்களுக்குத் தெரியாது. உதாரணமாக குழந்தையில்லா தம்பதி முன்னர் குழந்தை வளர்ப்பு குறித்து பேசுதல், அடர் நிற சருமம் கொண்டவர்கள் முன்னர் கருமை என்றாலே அவலட்சணம் எனப் பேசுதல், உடற்பருமனானவர்களுக்கு எடை குறைக்க சிறந்த தீர்வு கூறுகிறோம் என நினைத்து அவர்களது மனம் நோகும்படி உடல் எடையை விமர்சித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். குறிப்பாக நகைச்சுவை என்கிற பெயரில் எதையாவது பேசி இவர்கள் மற்றோரை புண்படுத்துவதை சகிக்க இயலாது.

இவர்கள் எதனால் இவ்வாறு உள்ளனர் எனக் கேட்டால் பதில் ஒன்றுதான். மனிதன் ஓர் நாகரிக விலங்கு. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் தோன்றிய காலம் முதலே சுற்றத்தார் குறித்து கேட்டறிவது என்பது மனிதனின் இயல்பான குணம். இதனால் என்ன பயன் என்று கேட்டால் இதன்மூலம் ஒருவர் தனது தனித் திறமை, சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றை மற்றோருடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த ஒப்பிடும் குணம் நாம் அனைவருக்குள்ளும் இருக்கும். ஆனால் நோஸி-க்களுக்கு இந்த குணம் அதிகளவில் இருக்கும்.

இதனால் இவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அடுத்தவரை காயப்படுத்த நேரிடும். ஆனாலும் இவர்கள் தனது தவறை உணராமல் தொடர்ந்து இதே செயலை மீண்டும் மீண்டும் செய்தவண்ணம் இருப்பர். நோஸி-க்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்த பயம், பாதுகாப்பின்மை அதிகமாகவும் திட்டமிடல் அறிவு குறைவாகவும் இருக்கும். இவர்களது இந்த குறைக்கான தீர்வை இவர்களாகவே தேடிக்கொள்வது சிறந்தது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் தங்களை ஒதுக்கும்போது இவர்களில் சிலர் தனது குறையை கண்டறிந்து திருத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments