பிறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு
கானா, யூதேயா, ரோமப் பேரரசு
(Cana, Judaea, Roman Empire)
இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு
அல்பனோபோலிஸ், ஆர்மேனியா
(Albanopolis, Armenia)
ஆர்மேனியாவில் தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.
நினைவுத் திருவிழா: ஆகஸ்டு 24
சித்தரிக்கப்படும் வகை:
கத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல்
வரலாறு:
புனிதர் பர்த்தலமேயு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும், 21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர், பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு அறிமுகம் செய்விக்கப்படுகிறார். இவர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் "டாலமியின் (Ptolemy) மகன்" எனவும், "உழுசால் மகன்" எனவும் பொருள்படும். எனவே இது குடும்பப் பெயர் என்பர்.
யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்.
மேலும் மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.
தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா மற்றும் பல இடங்களில் மறைப்பணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. இந்தியாவில் இவர் மறைப்பணியாற்றினார் என்பதற்கான இரண்டு பண்டைய சாட்சியங்கள் உள்ளன. நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்த சரித்திர ஆசிரியரும், ஆயரும், இறையியலாளருமான “யூசேபியஸ்” (Eusebius of Caesarea) ஒருவர் ஆவார். அதன்பின்னர், நான்காம் நூற்றாண்டின் இறுதியில், துறவியும், திருச்சபையின் மறை வல்லுனருமான புனிதர் “ஜெரோம்” (Saint Jerome) ஆவார்.
பண்டைய நகரமான கல்யாண் (Kalyan) என்று அறியப்பட்ட கொங்கன் கடலோரப் (Konkan coast) பகுதியில் உள்ள பம்பாய் (Bombay) பகுதியே புனிதர் பர்த்தலோமின் மறைப்பணிக்கான துறை என்று அருட்தந்தை: (பெருமலில்” (Fr.C. Perumalil SJ) மற்றும் “மோராசெஸ்” (Moraes) கூறுகிறார்கள்.
பாரம்பரியபடி, இவர் ஆர்மேனியாவில் (Armenia) உள்ள “அல்பநோபிளிஸ்” (Albanopolis) எனுமிடத்தில் உயிரோடு தோலுரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், ஆர்மேனிய அரசனான “போலிமியஸ்” (Polymius) என்பவனை கிறிஸ்தவ மறைக்கு மனம் மாற்றியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அரசனது சகோதரனான “அஸ்ட்யாஜெஸ்” (Astyages) பர்த்தலமேயுவின் மரண தண்டனைக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பதின்மூன்றாம் நூற்றாண்டில், இவர் மறைசாட்சியாக மரித்த இடத்தில், பெரிய ஆர்மேனியாவின் “வஸ்புரகன்” (Vaspurakan Province) பிராந்தியத்தில் புனித பர்த்தலமேயு (Saint Bartholomew Monastery) துறவு மடம் கட்டப்பட்டது. இது தற்போது தென்கிழக்கு துருக்கியில் (Southeastern Turkey) உள்ளது.
0 Comments