1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: திரித்துவ திருநாளுக்குப் பின்வரும் 12 ஆம் ஞாயிறு (மாற்றுத்திறனாளிகள் ஞாயிறு)
தேதி: 27/8/2023
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
யாத்திராகமம் 4. 10 - 17
2 கொரிந்தியர் 12. 1 -10
யோவான் 5. 1 - 9
சங்கீதம்: 37
2. திருவசனம் & தலைப்பு
மாற்றுத்திறனாளிகள் நமது கவனத்துக்குரியவர்கள்
யோவான் 5:7
(பவர் திருப்புதல்) அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
(திருவிவிலியம்) "ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.
3. ஆசிரியர் & அவையோர்
நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச்சீடர் (21:24) இவராகத்தான் இருக்க வேண்டும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இயேசுவைக் குறித்து அறிந்துகொள்ள, யூதர் மற்றும் கிரேக்கர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள இந்த நூல் எழுதப்பட்டது. “இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன” (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
ஏறத்தாழ கி.பி. 90ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு. கிறிஸ்துவுக்கு முந்திய பழையன (நியாயப் பிரமாணம்) கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன (கிறிஸ்துவின் பிரமாணம்) புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன.
5. திருவசன விளக்கவுரை
யோவான் நற்செய்தியில் யூதத் திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் உரைகளும் அவரைப் பற்றிய பிற செய்திகளும் தொகுக்கப்பட்டிருப்பனவாகத் தெரிகிறது:
முன்னுரைப் பாடல் 1:1 – 18
முதல் பாஸ்கா விழா 1:19 – 4:54
யூதர்களின் திருவிழா 5:1 – 47
இரண்டாம் பாஸ்கா விழா 6:1 – 71
கூடார விழா 7:1 – 10:21
கோவில் அர்ப்பண விழா 10:22 – 11:54
இறுதிப் பாஸ்கா விழா 11:55 – 20:31
பிற்சேர்க்கை 21:1 – 25
இதன் அடிப்படையில் யோவான் 5 ஆம் அதிகாரம் யூதர்களின் ஒரு முக்கியமான பண்டிகை நாட்களில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டது எனலாம். அதாவது, எருசலேமின் ஆட்டு வாசல் அருகே இருந்த, ஐந்து மண்டபங்கள் கொண்ட பெதஸ்தா குளத்தண்டையில் 38 ஆண்டுகளாய் பெலவீனமாக இருந்த மனிதனுக்கு இயேசு சுகம் கொடுத்தல். இந்த மனிதன் நடக்க முடியாதவனாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே தான் குளத்தில் கொண்டு போய் விட இன்னொரு ஆள் தேவைப்பட்டிருக்கலாம். இயேசுவும் இவனை சுகப்படுத்தும் போது "எழுந்து நட" என்று தான் சொன்னார்.
✒️யோவான் 5.3 ஐ வாசிக்கும் போது, மாற்றுத் திறனாளிகளின் எதிர்பார்ப்பின் மனநிலையை மற்றும் சுகத்தை தேடும் அவர்கள் மனதின் வலியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
✒️ யோவான் 5.7 ஐ வாசிக்கும் போது அவனை சுற்றியுள்ள சமூகம் எந்த அளவிற்கு அவன் மீது கவனம் செலுத்த அக்கறையற்றதாய் இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.
✒️ யோவான் 5.10 ஐ வாசிக்கும் போது, ஓய்வுநாள் என்று கூறி, அந்த மனிதனிடம் வாக்குவாதம் செய்யும் போது, எந்தளவிற்கு கேடுகெட்டதாய் அந்த மனித சமுதாயம் இருந்துள்ளது என்பதை உணர முடியும்.
✒️ யோவான் 5.8 ஐ வாசிக்கும் போது, இயேசு கிறிஸ்து அந்த மனிதன் நல்வாழ்வு பெறுவதில் அவர் கொண்டிருந்த போதக கவனவியலை (Pastoral Care) நாம் கற்றுக் கொள்ள முடியும்.
✒️ யோவான் 5. 14 ஐ வாசிக்கும் போது, ஆண்டவர் சரீர விடுதலை பெற்ற அந்த மனிதனின் ஆன்மீக வாழ்வின் மீதும் கவனம் கொண்டு அக்கறை செலுத்தினார் என்பதை அறிய முடியும்.
6. இறையியல் & வாழ்வியல்
பெதஸ்தா என்றால் "இரக்கத்தின் வீடு" என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, அந்த மனிதன் மீது தம் அக்கறையை வெளிப்படுத்தினார். கவனம் கொள்ளுதல் என்பது அவர்களைக் குறித்து அறிந்து கொள்வது, அவர்கள் தேவைகளை புரிந்து உதவி செய்வது எனலாம். "Caring is the one of the main aspects in the pastoral ministry."
மாற்றுத்திறனாளிகள் குறித்த நமது நிலைப்பாடு என்ன? அவர்களையும் நம்மைப் போல் மனிதராய் மதிக்க வேண்டும். அவர்களோடு நேரம் செலவிட்டு, அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளை பார்க்கும் போது, இயேசுவின் மனம் உருகியது போல், நம் மனம் உருக வேண்டும். எப்போதும், கிறிஸ்துவின் சாயல் நம் செயலில் வெளிப்பட வேண்டும்.
7. அருளுரை குறிப்புகள்
1. அங்கீகரித்து கவனம் செலுத்துவோம் (மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதராக கருதி மதித்தல்)
2. நேரத்தை செலவிட்டு கவனம் செலுத்துவோம் (மாற்றுத்திறனாளிகளோடு பேசுதல்)
3. உதவிகள் செய்து கவனம் செலுத்துவோம் (மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்தல்)
எழுதியவர்
மே.யே.கோல்டன் ரதிஸ்
சபை ஊழியர்
இராமையன்பட்டி.
0 Comments