Ad Code

யெகோவாவின் சாட்சிகளும் அவர்களின் விசுவாசமும் அதற்கு திரியேக தேவ சாட்சியின் பதில்களும் • Response to the False Teaching of Jehovah Witness

யெகோவாவின் சாட்சிகள் என்ற கூட்டத்தினர் தற்போது நமது திருச்சபை விசுவாசிகளின் கவனத்தை ஈர்த்து அவர்களை அவிசுவாசத்திற்குள் தள்ளுகிறனர் என்பதை அறிந்ததினால் திட்டமாய் அவர்களின் வரலாற்று தன்மை மற்றும் விசுவாசத்தை பகுத்தறிந்து விசுவாசிகளுக்கு கொடுப்பது ஒரு உபதேசிகனின் கடமை. அதன்படி இந்தக் கூட்டத்தின் ஆரம்பத் தலைவர் Charles Russell என்னும் ஒரு அமெரிக்கராவார். அவர் கி. பி. 1852லிருந்து 1916 வரை வாழ்ந்து வந்தார். திரித்துவ விசுவாசம், இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம், கிறிஸ்துவின் பலியான மரணம் (Atonement) சரீரத்தின் உயிர்த்தெழுதல், நித்திய நரகம் என்பவைகளைப்பற்றி கிறிஸ்துவ சபை உபதேசங்கள் வேத புத்தகத்தை ஒத்ததல்ல என்று ரஸல் கூறியதால் இப்பேர்ப்பட்ட ஒரு குழு உலகினில் உண்டாயிற்று.
பென்சில்வேனியாவில் 1884ல் பதிவு செய்த “சீயோன் வாச் டவர் டிராக்ட் சொஸைடி” கூட்டத்தைச் சேர்த்தவர்களே இப்பொழுது "யெகேவா சாட்கிகளின் கூட்டம்'' என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறார்கள். 1914, அக்டோபர் 31 ந தேதி பாஸ்டர் ரஸல் மரித்தவுடன் Mr. Joseph Franklin Rutherford இந்த கூட்டத்தில் தலைமை இடத்தை ஏற்றுக்கொண்டார்.
ரஸலின் அநேக கணக்குகளும் மற்றும் பல தீர்க்கதரிசனக்களும் பிழையாக இருந்தது என்று 1914ல் பலருக்கும் தெரிந்ததால் இந்த சபையின் வளர்ச்சியும் தளர்ந்து போயிற்று. ரூதர் போர்டின் உபதேசங்களும் ரஸலின் உபதேசங்களும் பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. அதனாலும் இச்சபையின் வளர்ச்சி அவர்கள் விரும்பியபடி வளரவில்லை.
எந்த ஒரு துர் உபதேசங்களுக்கும், அபத்தமான காரியங்களுக்கும் செவி கொடுத்து மக்கள் அதை விரும்பி ஏற்க சாத்தான் மக்களை தூண்டி ஏவுகிறான் என்பதற்கு இக் கூட்டம் ஓரு நல்ல சான்றாகும். இக்கூட்டத்தின் உபதேசங்களை நல்ல படியாக நாம் ஆராய்ந்து பார்த்தால் பரி. பேதுரு சொல்வது போல “அவன் சொன்னவைகளில் சில காரியங்கள், அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது. கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்றவேதவாக்கியங்களை புரட்டுகிறது போலத் தங்களுக்கு கேடு வரத்தக்கதான இவைகளையும் புரட்டுகிறார்கள்” என்பது அப்படியே நித்திய ரட்சகராகிய கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாமும் சொல்ல வேண்டியிருக்கிறது.
1942ல் ரூதர் போர்டு மரித்தபோது Nathan H. Knorr என்னும் ஒருவர் இதற்கு தலைவராக மாறினார். இவருடைய இத்தக் கூட்டம் “யெகோவாவின் சாட்சிகள்” என்று மிகவாக அறியப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட யெகோவாவே தெய்வம் என்றும் தாங்கள் மட்டுமே அந்த ஏக தெய்வத்தை வெளிப்படுத்துகிறவர்கள் என்ற நிலையிலே அந்த யெகோவாசாட்சிகள் இருக்கிறார்கள். இவர்கள் கிறிஸ்து சமயத்தைப் பின்பற்றாததினால், அரசு இவர்களை கிறிஸ்தவர்கள் திருமணச் சட்டத்தில் சேர்க்கவில்லை. அதனால் இந்தக் கூட்டத்தார் பதிவுத் திருமணமே செய்து வருகிறார்கள். ஆபிரகாம் காலம் தொட்டு இன்று வரையில், பழைய ஏற்பாட்டின் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற யெகோவாவின் ஆராதனைக்காரராகிய யூதரில் ஒருவர் கிறிஸ்தவர்களிடையே வந்து கிறிஸ்துவின் தெய்வத்துவத்தைப் பற்றின புதிய ஏற்பாட்டின் உபதேசங்கள் பிழையானது என்று கூறினால் ஒரு கிறிஸ்தவனாவது அதை ஏற்றுக் கொள்வானா? அப்படியானால், யூதரைப்போல் கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை மறுதலிக்கும் கிறிஸ்தவரல்லாத இவர்களின் உபதேசங்களுக்கு கிறிஸ்துவர்களாகிய நாம் எப்படி செவி கொடுக்க முடியும்?
இவ்வளவையும் கூறியபின் இவர்களுடைய உப தேசங்களைப் பற்றி வேத புத்தகத்தின் துணை கொண்டு நாம் சிந்திக்கலாம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் யெகோவா சாட்சிகளாக இருக்க வேண்டுமென்று புதிய ஏற்பாட்டில் ஒரு உபதேசமும் கிடையாது. மற்றபடி நாம் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்பது தான் புதிய ஏற்பாட்டின் தெளிவான உபதேசங்கள். “நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” அப். 1-8. இவர்களுடைய முக்கிய உபதேசங்களெல்லாம் வேத புத்தகத்திற்கு எதிரானது. அதற்கு உதாரணமாய் சில காரியங்களை மட்டும் எடுத்து காண்பிக்க நான் விரும்புகிறேன்.
(1) கிறிஸ்துவினுடைய தெய்வத்துவம்:- 
யெகோவா சாட்சிகளின் போதனையின்படி யேசு கிறிஸ்து தெய்வமல்ல. அவர் படைக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவார். இந்த உபதேசங்களை ஏற்றுக் கொள்வதற்கு திரித்துவ உபதேசத்தை முழுவதும் அவர்கள் தள்ளிவிட வேண்டியதாயிருந்தது. “திரித்துவ உபதேசத்தின் மூலகர்த்தா சாத்தானே” (Let God Be True Page 82) இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தைப்பற்றிய உபதேசங்கள் வேத புத்தகத்தில் தெளிவாய் கூறப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தாரின் சொந்த மொழி பெயர்ப்பான வேத புத்தகத்தில் கூட கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேத வாக்கியங்கள் கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பரி. தோமா “என் ஆண்டவரே என் தேவனே” என்று யோவான் 20: 28ல் கூறுகிறார். கொலே 2 : 9ல் “தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் சரீரப்பிரகாரம் அவருக்குள் வாசமாயிருக்கிறது” என்று வாசிக்கிறோம்.
பரி. பவுல் தீத்துவிற்கு எழுதும்பொழுது கிறிஸ்துவை “மகா தேவனும் இரட்கருமாகிய இயேசு கிறிஸ்து” என்று தீத்து 2:13ல் கூறுகிறார்.
வேத புத்தகத்தில் பல பாகங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய தெய்வத்துவத்தைத் தெளிவாகக் கூறுகின்றன. ஏசாயா 9:6ல் அவர் “வல்லமையுள்ள தேவன்” என்று நாம் பார்க்கிறோம்.
மத்தேயு 1:23ல் கடவுள் நம்மோடிருக்கிறார் என்று பொருள் உள்ள இம்மானுவேல் என்று பேரிடுவாயாக என்று பார்க்கிறோம்.
யோவான் 10:3ல் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று கிறிஸ்துவே கூறியிருக்கிறார். அவர் தேவனை தமக்கு சமமாக்கினபடியால் யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி அதிகமாய்த் தேடினார்கள் என்று யோவான் 5: 18ல் பார்க்கிறோம்.
யோவான் 1:1ல் அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று பார்க்கிறோம்.
(1) யோவான் 5:20ல் இவரே மெய்யான தேவனும் நித் திய ஜீவனுமாய் இருக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மட்டுமே, கிறிஸ்துவின் தெய்வத்துவத்தைப் பற்றிய இக்கூட்டத்தாரின் உபதேசங்கள் பிழையானது என்று சாதாரண மக்கள்கூட அறிய போதுமானது.
கிறிஸ்துவினுடைய தெய்வத்துவத்தை மறுதலிக்கிற இவர்கள் அந்திக் கிறிஸ்துவர்களும் பொய்யர்களுமாவார்கள் என்று பரி. யோவான் கூறுகிறார் (1 யோவான் 2 : 22-23)
(2) யேசு கிறிஸ்துவின் ஒப்புரவாக்குதலின் மரணம் :- மனிதனாகிய கிறிஸ்துவின் ஒப்புரவாக்குதலின் மரணத்தால் ஒருவருக்கும் நித்திய ஜீவனின் நிச்சயமோ அனுக்கிரகமோ கிடைப்பதில்லை. (Studies in the scriptures Vol.I Page 50) எல்லாக் காரியங்களிலும் ஆதாமுக்கு சமமான கிறிஸ்துவின் பலியானது மனிதர்களுக்கு அவரவர்கள் செய்யும் சொந்த முயற்சியால் நித்திய ஜீவனை அடைவதற்கு உதவியாக இருக்கிறது என்று அவர்கள் தெளிவாய் கூறுகிறார்கள்.
பரி. யோவான் 3:14-16 வாக்கியங்களில் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை அடைவான் என்று தெளிவாய்க் கூறப்பட்டிருக்கிறது. ரட்சிக்கப்படும்படிக்கும் நித்திய ஜீவனை அடைந்து கொள்ளும் பொருட்டும் இயேசு கிறிஸ்துவின் நாமமே அல்லாது வேறொரு நாமமும் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது எவ்வளவு தெளிவான சத்தியமாக இருக்கிறது (அப். 4: 12, யோவான் 3:36, 5:24)
III. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்:-
இதை அப்படியே முழுதுமாக யெகோவா சாட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கூறுவதாவது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் உடல் உயிர்த்தெழாமல் அங்கேயே இருந்திருந்தால் தன் சீஷர்களின விசுவாசம் தகர்ந்து போயிருக்கும். அது காற்றில் மறைந்து போனதோ தேவ அன்பின் அடையாளமாக எங்கேயோ மறைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கிறதோ என்று ஒருவர்க்கும் தெரியவில்லை என்கிறார்கள். அப்பேர்பட்ட அறிவு நமக்கு அவசியமில்லாதது. (Studies in the Scriptures Vol II Page 129)
மேலே கூறிய வியாக்கியானங்கள் வேத புத்தகத்திற்கு எவ்வளவு எதிரானது என்பதை மனதில் கொள்ள எந்தக் கிறிஸ்துவர்களுக்கும் எளிதானதே. கிறிஸ்து சரீரப் பிரகாரமாய் உயிர்த்தெழுந்தார் என்றும், அநேக சமயங்களில் பிரத்தியட்சமாய் சீஷர்கள் முன் தோன்றினார் என்ற காரியங்களுக்கும் பிரத்தியேக வசனங்கள் தேவை இல்லை. கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் தமது அடியார்களுக்குத் தோற்றமளித்த சரீரம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிருஷ்டிக்கப்பட்டது என்று யெகோவா சாட்சிகள். கூறுகிறார்கள் (Let God Be True Page 143) மேலும் அவர்கள் மனுஷீகமாய் அவர் உயிர்த்தெழவில்லை. ஆவியால் உயிர்த்தெழுந்தார் (Let God Be True Page 272). வேத புத்தகத்திலே உயிர்தெழுதல் என்று கூறுவது சரீர உயிர்த்தெழுதலைக் குறிக்குமே தவிர வேறொன்றையும் குறிக்காது. பரி. லூக்கா 24:36-40 உள்ள வாக்கியங்களை வாசித்தால் இதற்கு வேறு வியாக்கியானங்கள் தேவை இல்லை. பரி. பேதுருவின் எல்லாப் பிரசங்கங்களிலும் தான் எழுதிய எல்லா நிருபங்களிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதலைப் பற்றி வெகுதெளிவாக எடுத்துப் பேசினார் (பேதுரு 1: 3-5. 1 பேது 1: 21 வாக்கியங்கள் இதற்கு ஆதாரமாய் இருக்கிறது.)
உயிர்த்தெழுதல் இல்லையென்று கிறிஸ்துவின் காலத்திலேயே சதுசேயர்கள் சாதித்தார்கள் என்றும் கிறிஸ்து அவர்களுக்கு சரியாக உத்திரவு அளித்தார் என்றும் மாற்கு 12: 18-27ல் வாசிக்கிறோம்.
IV. இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை :-
யெகோவா கூட்டத்தாரின் சாட்சி கணக்கின்படி மனுஷ சரீரத்தில் மீண்டும் கிறிஸ்து வெளிப்படுவார் என்பது தெய்வத்தின் ஏற்பாடுகளுக்கு எதிரான தொன்றாகும் (Studies in the Scriptures Vol. II Page 122).
1914 புற ஜாதிகளுடைய காலம் முடிவடைந்தது என்றும் கிறிஸ்துவின் இராச்சியம் ஸ்தாபிதமாகிவிட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 1874 லிலேயே கிறிஸ்து வந்தார் என்றும் 1914ல் அந்த ராஜ்யத்தின் கிரியைகள் முழுவதுமாக ஆரம்பிக்கப்பட்டது என்றும் அவர்கள் பிரசங்கிக்கிறார்கன் (Id Page 170) 1918ல் பிரேதக் கல்லறையில் தூங்கிக்கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் ஆத்மீக சரீரத்தில் உயிர் பெற்றவர்களாக கிறிஸ்துவினோடே சேர்ந்தார்கள் என்றும் கூறுகிறார்கள் (See Ch:15 Let God Be True) இன்னும் விவரமாய் இதைப்பற்றி கூறவேண்டுமானால் 1874ல் கிறிஸ்து தன் ஆயிர வருட அரசாட்சிக்காக இந்த பூமிக்கு வந்துவிட்டார் என்று பாஸ்டர் ரஸல் கூறினார். அப்படியானால் கி.பி. 2874 வரை கிறிஸ்து இப்பூமியில் தன் ஆட்சி பரிபாலனத்தை நடத்த வேண்டும் அல்லவா. ஆனால் 1914ல் ஒரு உலகப் போர் உண்டானதால் அந்த ஆண்டிலேதான் இயேசுவின் ஆட்சி முழு சக்தியில் வெளிப்படுத்தப்பட்டதென்றும் அந்தப்போர் வெளி 20:8 வாக்கியத்தில் கூறியுள்ள. கோகும்மாகோகும் என்பவருமாய் கூட்டு சேர்ந்து உண்டானது என்றும் உபதேசித்தார். அது கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்கும் உள்ள போர் ஆனதால் அந்தப் போரில் உலக ராஜாக்களுக்கு வெற்றியில்லை என்றும் கூட கற்பித்தார்கள். அதனால் உலக முழுவதில் உள்ள எல்லா இராஜ்யக்காரர்களும் இவர்களுடைய சபைக் கட்டிடங்களை மூடி அவர்கள் பிரசங்கம் செய்வதைத் தடையும் செய்தார்கள். முதல் உலகப் போர் நேசநாடுகளுக்கு வெற்றியாதலால் இந்தக் கூட்டத்தின் பிரசங்களுக்கும் போதகங்களுக்கும் அமெரிக்க அரசாங்கம் மீண்டும் அனுமதியளித்தது. ஆனால் மறுபடியும் 1938லும் இவர்கள் காரியாலயங்கள் மூடப்பட்டு இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இஸ்ரவேலருக்கும் அரபியருக்கு இப்பொழுதுள்ள சண்டையைப் பற்றி முன்புபோல இவர்கள் பழைய பிரசங்கங்களைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவும் மற்ற வல்லரசுகளும் இதில் நேரில் தலையிடாததால் இவர்கள் மேல் ஒருவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதினால் தான் அவர்கள் நம்மிடையே முழுமூச்சாக வேலை செய்கிறார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய இவர்களுடைய உபதேசங்கள் வேதப் புத்தகத்தின் ஆதாரத்தைக் கொண்டதல்ல என்பதை நாம் மனதில் வைப்போமானால் வியாக்கியான விளக்கங்கள் ஒன்றும் நமக்குத் தேவை இல்லை. இரண்டு தேவதூதர்கள் சாட்சி பகர்ந்தும், அப்போஸ்தலரும் சீஷர்களும் முழுதுமாய் விசுவாசித்து பிரசிங்கித்து வந்ததுமான ஒரு தெளிவான சத்தியத்தை ஒரு வெட்கமுமில்லாமல் மறுதலித்துச் சாதிக்கும் இந்த உபதேசக்காரர்களுக்கு எப்படி முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
1914 முதல் இயேசுக் கிறிஸ்துவின் ஆட்சி இந்த உலகத்தில் வெளிப்பட்டது என்று நினைப்பதற்கு ஏதாவது முக்கிய விசேஷங்கள் சம்பவித்ததுண்டா? போர்கள் 1914லிலும் 1938லும் மட்டுமல்ல இன்றுவரை தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
V. பரிசுத்த ஆவி :-
திரித்துவத்தை மறுக்கின்ற இவர்கள் பரிசுத்த ஆவியின் தன்மையையும் மறுக்கிறார்கள். பரிசுத்த ஆவியை தெய்வமாக விசுவாசிக்கும் அப்போஸ்தகருடைய விசுவாசத்தை கிறிஸ்தவர்களாகிய நாமும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அப். 5: 3ம் வாக்கியங்களை நாம் வாசித்தால் பரி பேதுரு பரிசுத்த ஆவியைக் கடவுள் என்று தெளிவாக கூறியிருக்கிறதைக் காணலாம். பரிசுத்த ஆவி தெய்வமாயிருந்ததினால் பரிசுத்த ஆவிக்கு எதிராக அனனியாவும் சப்பீராளும் பாவம் செய்ததால் கடவுளிடத்தில் பாவம் செய்தார்கள் என்று பரி. பேதுரு 4 ம் வாக்கியத்தின் கடைசியில் கூறியிருக்கிறார்.
VI. நித்திய நியாயத் தீர்ப்பு:-
அழிவில்லாத ஒரு ஆன்மா மனிதனுக்கு இருப்பதால் அவன் மிருகத்தைக் காட்டிலும் வித்தியாசமுள்ளவன் என்பது வேத புத்தகத்திற்கு ஓத்ததல்ல என்று இக்கூட்டத்தார் போதிக்கிறார்கள் (Studies in the Scriptures Vol. I Page 60) இக்கூட்டம் ஒருவித யோசனையும் இல்லாமல் மிருகங்களைப் போலவே மனிதர்களுக்கும் இந்த உலகத்திற்கு அப்பால் ஒன்றுமில்லை என்று சொல்லுவது மிகவும் ஆச்சரியமான காரியம். மனிதர்களை மிருகங்களுக்கு ஒப்பாகக் கருதியும் அப்படியே போதித்தும் வரும் ஒரு கூட்டத்தில் அப்படிப்பட்டவர்களே சேரவும் முடியும்.
வெளி. 20:10, 15, மத்தேயு 25: 46 என்னும் வாக்கியங்கள் இந்த தவறான உபதேசத்தை முறியடிக்கிறது.
பாதாளம் (Sheol) என்று கூறுவது கல்லறை என்றே அர்த்தம் கூறுகிறார்கள். ஆனால் Sheol என்ற பதம் 65 தடவை வேத புத்தகத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாக்கியங்களிலெல்லாம் மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் பேசக்கூடிய ஒரு தன்மையில் இருக்கிற ஒரு இடத்தையே காண்பிக்கிறது. உதாரணமாய் எசேக்கியேல் 32:2 ஏசாயா 14:9-10 என்ற வாக்கியங்களை வாசித்தால் அதை நாம் தெளிவாய்க் காணலாம்.
மரித்தவர்கள் மிருகங்களைப் போல மரணத்தோடு முடிவடைந்து போகிறார்கள் என்று அவர்கள் கூறுவதை இயேசுகிறிஸ்து நிராகரித்திருக்கிறார். மத்தேயு. 22: 32ல் வாசித்துப் பார்த்தால் விளங்கும்.
VII. திரித்துவம்:-
முன்பு கூறியதிலிருந்து இயேசு கிறிஸ்து தெய்வமாகவும், பரிசுத்த ஆவியும் தெய்வமாகவும் தெரிந்து கொண்டதால் திரித்துவ உபதேசமும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தக் கூட்டத்தார் சாட்சி கொடுக்கும் யெகோவா (நம்முடைய மொழியில் பிதாவாகிய கடவுள்) கடவுள் என்று அவர் கூறுவதால் திரித்துவ உபதேசம் முழுதுமாய் உறுதி செய்யப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தில் அவர்கள் மொழி பெயர்ப்பிலேயே மூன்று இடங்களிலே தேவன் "நாம்" என்று தன்னைப்பற்றி பன்மையில் குறிப்பிடுகிறார். ஆதி 1:26, 3:22, 11: 7 ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலும் "நாம்" என்று உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது, ஏசாயா 6:8. தெய்வம் பிரிக்க முடியாத ஏகத்துவம் என்ற இவர்களுடைய உபதேசத்தை வேத புததகத்திலுள்ள முதலாம் புத்தகத்தில் முதலாம் அதிகாரத்தில் உள்ள வாக்கியங்களிலேயே மறுத்துக் கூறப்பட்டிருக்கிறது. தீர்க்கதரிசியின் புத்தகங்களும் திரித்துவ உபதேசத்தை எடுத்துக் காட்டியிருக்கின்றன.
குமாரனாகிய கடவுள் இவ்வாறு கூறுவதாக ஏசாயா தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்" (ஏசாயா 48 : 16)
ஏசாயா 63:9-10 வாக்கியங்களில் பிதாவாகிய தேவனையும், அவர்களுடைய எல்லா நெருக்கங்களிலும் நெருக்கப்பட்ட இரட்சரையும், அவர்கள் கலகம் பண்ணி விசனப்படுத்தின பரிசுத்த ஆவியையும் வெகு தெளிவாக வெவ்வேறாக நமக்கு பிரித்துக் காட்டியிருக்கிறார். திரித்துவ உபதேசத்தை யெகோவா சாட்சிகள் மறுதலிக்கிறதினால் கிறிஸ்துவின் மூலம் உள்ள மீட்பிற்கு உள்ளாகாமல் இவ்வுலகத்தை விட்டுப் போகும் காட்சி கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையை அளிக்கிறது. சில சில்லரை உபதேசப் பிழைகளோ அல்லது ஆசாரங்களைக் கைக்கொள்ளுவதில் ஏதோ சிறிய வேறுபாடுகளோ சில சபைகளில் காணப்படுவது வெகு சாதாரணம். ஆனால் இக்கூட்டத்தின் நோக்கம் கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையான உபதேசங்களைத் தகர்த்து கிறிஸ்து மதத்தையே இவ்வுலகினில் இல்லாமல் செய்வதுதான் என்பதை எல்லா கிறிஸ்து சபை அங்கங்களும் மனதில் கொண்டு நடக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
இறப்போடு அழியக்கூடிய பறவை விலங்கினங்களுடன் தங்களையும் ஓப்பிட்டு நித்தியமாய் அழிந்துபோகும் இந்த கூட்டத்தினரிடையில் நாம் கிறிஸ்துவை சாட்சி பகரவேண்டியது அவசியம். நம்முடைய பட்டணங்களிலே இவர்களுடைய உபதேசத்தால் கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களிடையே நாம் விரைவாக கடந்து செல்வோமாக. இப்படிப்பட்டவர்களுக்கு கிடைக்கப்போகும் பயங்கர தண்டனையைப்பற்றி அவர்களுக்கு அறிவிக்க நாம் காலம் தாழ்த்தக் கூடாது. எபிரெயர் 10:29 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்."
பரலோக சிம்மாசனத்தைவிட்டு, இந்த மண்ணுலகத்தில் அவதரித்து, அவமானமுள்ளதும் நிந்தையுள்ளதும் துன்பமுள்ளதுமான சிலுவை மரணத்தைச் சகித்து தன்னுடைய திவ்விய ரத்தத்தை மனித வர்க்கத்திற்காகவே ஊற்றிய அன்பராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஆண்டவர் அவர்கன் கண்களைத் திறக்க வேண்டுமென்று நாம் பிரார்த்திப்போமாக.

எழுதியவர்
சுஜித் . S
03/01/2023

Post a Comment

0 Comments