1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறிஸ்து பிறப்பு திருநாளுக்கு பின்வரும் மூன்றாம் ஞாயிறு
தேதி: 14/01/2024
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
எசேக்கியேல் 36. 25 - 38
தீத்து 3.1 - 10
மத்தேயு 3.11 - 17
சங்கீதம்: 14
2. திருவசனம் & தலைப்பு
ஞானஸ்நானம்: புது வாழ்வு
தீத்து 3:5
(பவர் திருப்புதல்) நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
(திருவிவிலியம்) நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
3. ஆசிரியர் & அவையோர்
அப்போஸ்தலர் பவுல் எழுதிய கடிதங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கடிதம் தீத்து என்ற உடன் ஊழியருக்கு எழுதப்பட்டது. தீத்து என்பவர் பிற இனத்துக் கிறிஸ்தவர். அவர் பவுலுடன் அந்தியோக்கியாவிலிருந்து எருசலேம் சென்றார் (கலா 2:1; திப 15:2); பவுலின் மூன்றாம் பயணத்தின்போது உடன் சென்றார் (2 கொரி 1:13; 7:6; 13:4). அவர் கிரேத்துத் தீவின் ஆயராக விளங்கும்போது இத்திருமுகம் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அங்கே மூப்பர்கள், ஆயர்களை நியமிக்கும் பொறுப்பு இவரிடம் இருந்தது.
4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
பவுலின் இறுதிக் காலக் கட்டத்தில் இந்த எழுதப்பட்ட கடிதங்களில் இதுவும் ஒன்று (AD 63). கிரேத்துத் தீவில் திருச்சபை வளர்ச்சி குன்றிய சூழ்நிலையில், அதை சரி செய்ய ஆலோசனை கொடுக்கும் வண்ணம் இது எழுதப்பட்டிருக்கலாம். கிரேத்துச் சபையிலுள்ள முதியவர், இளைஞர், அடிமைகள் ஆகியோருக்கு எப்படிப் போதிப்பது குறித்தும் கிறிஸ்தவ நல்லொழுக்கத்துடன் அமைதியுடனும் அன்புடனும் இருத்தல், பகைமை, வாக்குவாதம், பிளவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் ஆகியவை குறித்துப் பேசுகிறார். கிரேத்து மக்கள் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளக் கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பலியே முன் மாதிரி என்கிறார்.
5. திருவசன விளக்கவுரை
தீத்து 3.5
1. நீதியின் கிரியைகள்: நாம் செய்யக் கூடிய நல்ல காரியங்கள் நம்மை இரட்சிப்பின் அனுபவத்துக்குள் கொண்டு போகாது.
2. தமது இரக்கம்: கடவுளின் கோபத்தால் அழிக்கப்பட வேண்டியவர்கள் நாம். ஆனால் தம் உன்னத அன்பால் இரக்கம் கொண்டார்.
3. இரட்சிப்பு: கிறிஸ்துவின் மரணம் மூலம் நம்மை மீட்டார்.
4. மறுஜென்மமுழுக்கு: நம் மீட்புக்கு திருமுழுக்கு வெளிப்புற அடையாளம். திருமுழுக்கு மூலம் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.
5. பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல்: தூய ஆவியார் நம்மை உணர்த்தி தூய்மையாக வாழ உதவி செய்கிறார். இது புதிதாக்குதலின் அனுபவம்.
6. இறையியல் & வாழ்வியல்
கிறிஸ்தவ திருமுழுக்கு இரண்டு கிறிஸ்தவ சாக்கிரமெந்துகளில் முதலாவது உள்ளது. தண்ணீர் இங்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. திருமுழுக்கின் வாயிலாக, ஒருவர் கிறிஸ்துவை நம்புகிறார் என்றும், அவர் என் இரட்சகர் என்றும், கிறிஸ்துவின் சரீரத்தில் ஐக்கியம் என்றும் வெளிப்படுத்துகிறார்.
திருமுழுக்கு என்பது உள்ளான மாற்றத்தின் வெளிப்புற அடையாளமே தவிர, வெளிப்புற செயலால் உட்புற மாற்றம் ஏற்படுவது அல்ல. இன்றைக்கு இந்த வெளிப்புற செயல்பாடுகள் குறித்தே பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தண்ணீர் தெளித்தல், முழுக்காட்டுதல், ஆலயத்தில் கொடுத்தல், ஆற்றில் கொடுத்தல், மூன்று முறை தெளிப்பு/ முழுக்கு மற்றும் சபையில் சேர்க்கும் முன் கொடுத்தல் போன்ற வெளிப்புற செயல்பாடுகள் திருமுழுக்கில் முக்கியமான சாராம்சத்தை தீர்மானிப்பவை அல்ல. மாறாக, ஒருவரின் ஜென்ம சுபாவம் செத்து, நீதிக்கு பிழைப்பது ஆகும். திருமுழுக்கு என்பது மறு ஜென்மம் எடுப்பது போன்றதாகும்.
குழந்தை திருமுழுக்கை திருச்சபை அங்கீகரிக்க காரணம் என்னவென்றால், குழந்தைகளும், கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் என்றும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஐக்கியமானவர்கள் என்றும் விசுவாசத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்றும் குழந்தை திருமுழுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்கள் சிறுவயதில் இருந்தே இந்த நம்பிக்கையில் வளர்க்கப்பட, பெற்றோர் இவர்கள் சார்பாக உறுதி எடுத்து, திடப்படுத்தலில் அதை அவர்களே உறுதிபடுத்திக் கொள்ள உதவி செய்கின்றனர்.
7. அருளுரை குறிப்புகள்
ஞானஸ்நானம்: புது வாழ்வு
தீத்து 3:5
1. இரக்கத்தால் கிடைத்த வாழ்வு
2. இரட்சிப்பின் வாழ்வு
3. இறைசாட்சியின் வாழ்வு
0 Comments