SMC Lenten Meditation 2024
தியானம்: 10 / 40 - இரட்சகர் / உலக மீட்பர்
எழுதியவர்: திரு. டெ. டைட்டஸ்
தலைப்பு: இரட்சகர் / உலக மீட்பர்
யோவான் 4:42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே, கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
வசன இருப்பிடங்கள்:
மத்தேயு 1.21
லூக்கா 2.11
யோவான் 4.42
தலைப்பின் அர்த்தம்:
இரட்சகர் அல்லது மீட்பர் என்றால், காப்பாற்றுபவர் என்று நேரடி பொருள். ஆங்கிலத்தில் Saviour என்று இது 37 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
விளக்கவுரை
ஒருவரை இன்னொருவர் காப்பாற்றி, மீட்பது தான் இரட்சிப்பு. சிறப்பாக, இந்த வார்த்தை இயேசு கிறிஸ்து, மக்களை பாவத்தின் தண்டனையில் இருந்து காப்பாற்றி மீட்பதைக் குறித்து வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயேசு ஒருவரே இரட்சகர்
இயேசு என்ற பெயரிலேயே அவர் பூமிக்கு வந்ததின் நோக்கம் புலப்படுகிறது (மத்தேயு 1:21). பாவத்தில் விழுந்த மனுக்குலத்தை மீட்க தான் இயேசு மனிதனாக வந்தார். அவராலேயே அன்றி வேறு ஒருவராலும் இந்த மகத்தான இரட்சிப்பை கொடுக்க முடியாது.
உயிரைக் கொடுத்த இரட்சகர்
"எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்" என்பதில் இருந்து நம்மை இரட்சிக்க தன் உயிரையே அவர் கொடுத்துள்ளார். நாம் காப்பாற்றப்பட, இயேசு பரிதாபமான சூழ்நிலைக்கு தன்னை அர்ப்பணித்தார். கலாத்தியர் 3:13 ஐ வாசிக்கும் போது, "நமக்காக சாபமாகி நம்மை மீட்டுக் கொண்டார்" என்பதை புரிந்துகொள்ள முடியும்.
நிகழ்கால விடுதலை தரும் இரட்சகர்
கிபி முதலாம் நூற்றாண்டு மக்களை மட்டும் இயேசு காப்பாற்ற வில்லை. அவர் அன்று சிலுவையில் சம்பாதித்த இரட்சிப்பு இன்றும் நமக்கும் உரியது. லூக்கா 2:11 இல் அழகாக கொடுக்கப்பட்டு
இருக்கிறது; "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்." இன்று அவரை ஏற்கும் ஒவ்வொரு நபருக்கும் இது பொருந்தும் என்று நான் நம்புகின்றேன்.
முடிவுரை :
இயேசு கிறிஸ்து மரிக்கும் முன்னதாகவே, அவருடைய உபதேசங்களை மட்டுமே கேட்டு, அவரை "உலக இரட்சகர்" என்று அறிக்கை செய்த சமாரியர் குறித்து யோவான் 4:42 இல் வாசிக்கிறோம். அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு உலக இரட்சகர் /மீட்பர் என்று விசுவாசித்தார்கள். இன்றைக்கு நாம் சிலுவையில் நமக்காக அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் ஜீவனை விட்டு, மீண்டும் உயிரோடு எழுந்த பின்பான காலத்தில் வாழ்கிறோம். அவர் தான் நம் மெய்யான மீட்பர் என்ற சிந்தை நம்மில் உள்ளதா? நம்மை மீட்கும் படியாய் பலியான இயேசுவை மறுபடியும் எத்தனை முறை துக்கப்படுத்துகிறோம்? அவரே என் இரட்சகர் என்ற அனுபவம் நம்மில் உள்ளதா? இந்த உன்னதமான அனுபவத்தோடு வாழ்வோமாக. ஆமென்.
0 Comments