இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களை எட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப் பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம் உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.
குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவே இல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், சாதாரண பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார்.
ஆனால் அன்று அதிகாரத்தைத் தன் கரத்தில் வைத்திருந்த ரோமன் கத்தோலிக்க சபை ஆங்கிலத்தில் மட்டுமல்ல, வேறு எந்த மொழியிலும் வேதத்தை மொழி பெயர்க்க அனுமதிக்கவில்லை. அவ்வாறு வேதத்தை இலத்தீன் மொழியில் இருந்து இன்னுமொரு மொழியில் மொழி பெயர்ப்பது சட்டத்திற்கு எதிரான செயலாக கருதப்பட்டது. அக்காலத்தில் ஆண்டவருடைய ஜெபத்தையும், பத்துக் கட்டளைகளையும், அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கையையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் போதித்த காரணத்திற்காக ஏழு பேர் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தனர்.
எனவே
லண்டலில் மொழி பெர்ப்பு வேலை செய்ய முடியாதது என்று உணர்ந்த லிண்டேல் 1524 இல் ஜெர்மனிக்குப் போகத் தீர்மானித்தார். அரசருடைய அனுமதியையும் பெறாமல் ஜெர்மனியில் விட்டன்பர்க் என்ற இடத்தை அடைந்தார் டின்டேல். ஜெர்மனியை அடையுமுன் இரகசியமாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்திருந்தார் டின்டேல். விட்டன்பர்க்கில் இருந்து பாதுகாப்பு கருதி கொலோனை அடைந்த டின்டேல் தனது மொழிபெயர்ப்பை அச்சிடும் பணியில் ஈடுபட்டார்.
அச்சுப்பணி பாதி முடியுமுன்பே அது அச்சிடப்படுகின்றது என்பதை அறிந்த கத்தோலிக்கர்கள் டின்டேலுக்கு பெருந்துன்பத்தை விளைவித்தனர்.
இதனால் எதிரிகளிடம் இருந்து தப்பி டின்டேல் "வேர்ம்ஸ் " என்ற இடத்தை அடைந்தார். அங்கே இறுதியாக தனது வேத மொழி பெயர்ப்பை அச்சிட்டு முடித்தார். வேர்ம்ஸிலேயே டின்டேலின் முதல் புதிய ஏற்பாட்டுப் பிரதி வெளியானது கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இப்புதிய ஏற்பாடு இங்கிலாந்தை 1526 இல் அடைந்தது. ஜெர்மனியில் இருந்த இங்கிலாந்து வியாபாரிகள் மூலமாக டின்டேலின் புதிய ஏற்பாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தின் நகரங்கள், கிராமங்கள் எல்லாம் பரவத்தொடங்கியது. பிசப் டின்ஸ்டல் இப்பிரதிகளைக் கைப்பற்றி அழிக்க பெரு முயற்சி செய்தார். இதைக் கேள்விப்பட்ட டின்டேல், “புதிய ஏற்பாட்டை எரிப்பதன் மூலம் நான் எதிர்பார்க்காததை அவர்கள் செய்துவிடவில்லை; அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள். கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்” என்றார்.
இவ்வெதிர்ப்புகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரதிகள், அதன் மறுபதிப்புகள், திருத்தப்பதிப்புகள் என்று டின்டேலின் புதிய ஏற்பாடு இங்கிலாந்தின் நாடு நகரங்கள் எல்லாம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்க மதகுருக்கள் இதைத் தடுப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர். பணம் கொடுத்து அனைத்துப் பிரதிகளையும் வாங்கினால் அவை மக்களை அடைவதைத் தடுத்துவிடலாம் என்று முடிவு செய்து அவ்வாறே செய்தனர். இதனால் இப்பிரதிகளை இங்கிலாந்திற்குக் கொண்டு வந்த வியாபாரிகளால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடிந்தது. மதகுருக்கள் எரிப்பதற்கும் அதிக புதிய ஏற்பாடுகள் கிடைத்தன. டின்டேல் புதிதாக ஒரு திருத்திய புதிய ஏற்பாட்டை வெளியிடுவதற்குத் தேவையான பணமும் கிடைத்தது.
இப்புதிய ஏற்பாடு என்றுமில்லாத வகையில் இங்கிலாந்து மக்களின் கண்கள் திறக்கப்பட்டு மாற்றத்தை கொண்டு வந்தது.
இறுதியில் அவர் சிறைபிடிக்கப்பட்டு "பிரசல்ஸில்"என்ற ஒரு கோட்டையில் வைக்கப்பட்டார். சிறை பிடிக்கப்பட்டு பதினாறு மாதங்களுக்குப் பின்பு கி.பி ஆகஸ்ட் 1536 இல் டின்டேலுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தன் செயல்களுக்காக மன்னிப்பு கேட்கும்படி டின்டேலை அவரது எதிரிகள் வற்புறுத்தினர். அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் டின்டேலை சித்திரவதை செய்து உயிரோடு எரித்தனர். இறப்பதற்கு முன் டின்டேல், இங்கிலாந்து அரசரின் கண்கள் திறக்க வேண்டும் என்று ஜெபித்து மரித்தார்.
சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த அநேக கிறிஸ்தவர்களில் டின்டேலும் ஒருவர். வேதத்தை நாம் கையிலெடுக்கும் ஒவ்வொரு வேளையும் அவ்வேதத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் தம் உயிரைத் தந்த டின்டேலை நாம் நினைத்தாக வேண்டும்.
" உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை" .
சங்கீதம் 119 : 165
எத்தனை பேர் நம் மொழியில் கிடைத்திருக்கும் வேதத்தை நேசித்து வாசிக்கிறோம். சிந்திப்போம்
Acknowledgement
T.Rajan Joel
0 Comments