Ad Code

எழும்பிப் பிரகாசி • யோவான் 5.35

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: திரித்துவதிருநாளுக்குப் பின்வரும் 24 ஆம் ஞாயிறு
தேதி: 10/11/2024
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
சங்கீதம்: 

2. திருவசனம் & தலைப்பு 
  எழும்பிப் பிரகாசி யோவான் 5:35
     (பவர் திருப்புதல்) அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்: நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். 
     (திருவிவிலியம்) யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். 

3. ஆசிரியர் & அவையோர் 
யோவான் நற்செய்தி நூல் அப்போஸ்தலர் யோவான் என்பவரால் எழுதப்பட்டது. முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் தன்மை குறித்த குழப்பங்கள் இன்றி அவரை அறிந்து கொள்ள எழுதப்பட்டது. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
நற்செய்தி நூலுக்கு இறுதி வடிவம் கி.பி. 90-100 கொடுக்கப்பட்டிருக்கலாம். முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை திரித்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இயேசுவே இறைமகனாகிய மேசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். 

5. திருவசன விளக்கவுரை 
“அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்” என்று இயேசு யோவான்ஸ்நானனைக் குறித்தே சொல்லுகிறார். அவன் இயேசுவாகிய மங்காத நித்திய ஒளியை அறிமுகம் செய்யும்படி அவருக்கு முன்னோடியாக வந்தவன். அந்த பிரகாசத்தினால், அவனது பிரசங்கத்தினால் ஈர்க்கப்பட்டு மக்கள் அவனிடத்தில் வந்தார்கள்.

எரிந்து பிரகாசித்த விளக்காக அறியப்படும், திருமுழுக்கு யோவான் அறிவிலும், அன்பின் சத்தியத்திலும் எரிந்தவன், அவரிலும், அவரின் வெளிச்சத்திலும் பிரகாசமாயிருந்தவன். சத்தியத்தை பிரகடனபடுத்தியவன். வாழ்விலும், உரையாடலிலும் தூய்மையாயிருந்தவன்.

விளக்கு வெறுமனே இருப்பின் அது பயன்தராது மாறாக அது எரிந்து பிரகாசிக்க வேண்டும் அப்பொழுதுதான் அதை நாடி செல்வோர் பயன் பெறுவர். அதைப்போலவே யோவானின் வாழ்வு அமைந்திருந்தது. படித்தவர்கள் முதல் பாமரர் வரை அவரை நாடி சென்று வாழ்வு பெற்றார்கள். அந்த வரிசையில் உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவும் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது மேலும் சிறப்பு. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து இங்கு தனக்கு வழியை ஆயத்தம் பண்ணினவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்கிறார், அதை குறித்து சாட்சியும் தருகிறார். 

அதே சமயம் யோவானின் ஆரம்பகால ஊழியத்தில் உற்சாகத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட ஜனங்கள், அதிலும் குறிப்பாக யூதர்கள் இறுதியில் அவரை சிறைவாசம் அனுபவிக்க செய்தனர். யோவானோடு இணைந்து பக்தி வாழ்விற்கு சான்றாய் இருக்க வேண்டியவர்கள் அவரை பகைத்து சாவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். எப்படி மெழுகுவர்த்தி அல்லது விளக்கு தன்னைக் கரைத்து பிறர் வாழ்வில் ஒளி கொடுக்கிறதோ அதைப்போலவே யோவான் ஸ்நானனின் வாழ்வும் அமைய பெற்றுள்ளது.

6. இறையியல் & வாழ்வியல்
இன்றைக்கு வெளிச்சத்தை விரும்பும் நாம் பலருக்கு ஒளி கொடுக்க முன்வருவது இல்லை. ஏனென்றால் அது கடினமானது. நம்மைத் தியாகம் செய்ய அர்ப்பணிக்காமல் அதை செயல்படுத்த முடியாது. கருவியாம் விளக்கு மெழுகுவர்த்தி வெளிச்சம் கொடுக்க நெருப்பு வேண்டும். அதனால் அது உருக வேண்டும். அதுபோல் நம் வாழ்வில் பிறருக்கு ஒளி கொடுக்க முடியும். ஒளி என்பது நாம் செய்யும் நன்மைகள் (போதனை, வழிகாட்டல், உதவுதல், கல்வி கற்பித்தல், etc) ஆகும். 

7. அருளுரை குறிப்புகள்
      எழும்பிப் பிரகாசி
(பிறருக்கு மகிழ்வு தரும் நன்மையின் கருவியாக செயல்படுதல்)
1. விளக்கு இல்லாமல் பிரகாசம் இல்லை
(விளக்கு - நாம் தான் கருவி)
2. எரிதல் இல்லாமல் பிரகாசம் இல்லை
(நெருப்பு - அனல் மூட்டுபவர் / எண்ணெய் / காற்று - கடவுள்)
3. உருகுதல் இல்லாமல் பிரகாசம் இல்லை
(உருகுதல் - தியாகம்)

Written by 
Mr. Y. Golden Rathis B.A, B.Sc, B.Th, B.D.,
CSI Diocese of Tirunelveli 

Post a Comment

0 Comments