மண்ணில் : 27.11.1866
விண்ணில் : 03.07.1941
ஊர் : ஆஸ்டெர்கோட்லாண்ட்
நாடு : சுவீடன்
தரிசன பூமி : சீனா
ஜோஹன் ஆல்ஃபிரட் சுவீடன் நாட்டிலிருந்து சீனா தேசத்துற்கு சென்ற ஒரு பாப்டிஸ்ட் மிஷனரி. 1866 ஆம் ஆண்டில் பிறந்த அவர் தனது பத்தொன்பதாம் வயதில் பிரசங்கிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் ஸ்டாக்ஹோமில் உள்ள பெத்தேல் வேதாகம கல்லூரியில் பயின்றார். ஒரு முறை அங்கு வந்த ஆங்கில மிஷனரியான ஹட்சன் டெய்லருடைய பிரசங்கத்தின் காரணமாக மிஷனரி சேவை செய்ய ஆல்ஃபிரட் ஈர்க்கப்பட்டார்.
கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, நார்வேயின் ஃபிரடெரிக்ஷால்ட் என்ற இடத்தில் போதகராக பணியாற்றினார். அங்கு அவர் மிஷனரி சேவை செய்ய வாஞ்சை கொண்டிருந்த ஹெட்விக்கை மணந்தார். ஆனால் பின்பு அவர்கள் எதிர்பாராத விதமாக மிஷனரிகளாக சீனா செல்ல அழைப்பு வந்தபோது அவர்கள் தங்கள் வீட்டையும், சொந்த மக்களையும் விட்டு வெளியேற வேண்டுமா, தங்கள் திருச்சபையின் எதிர்காலம் என்ன, பெற்றோர்கள் என்ன சொல்லுவாங்களோ என்ற யோசனைகள் அவர்களுக்கு தடையாயிருந்தன. மிகுந்த போராட்டத்திற்கும் ஜெபத்திற்கும் பிறகு, ஒரு மிஷனரியாக வேண்டும் என்ற முந்தைய விருப்பத்தை நினைவில் கொண்டு, ஆண்டவரின் சித்தத்தைச் செய்ய தங்களை அர்ப்பணித்துகொண்டார்கள்.
இருவரும் 1894 ஆம் ஆண்டில் சீனா வந்து, ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள கியோஹ்சீனில் (தற்போது ஜியாஜோ) குடியேறினர். அங்கு அவர்கள் மிகுந்த சிரமத்துடன் கடினமான சீன மொழியைக் கற்றுக்கொண்டநர். 45 ஆண்டுகளுக்கும் மேலான அவர்களின் மிஷனரி பணியில், அவர்கள் சக மிஷனரிகளுடன் சேர்ந்து, கியோஹ்சீன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கிறிஸ்தவ சபைகளை நிறுவினர். அதுமட்டுமல்லாமல் ஜொஹான் ஆல்ஃபிரட் பட்டியலில் கியோஹ்சீனில் முதல் தபால் நிலையத்தை நிறுவுதல் மற்றும் பேரழிவு நிவாரணத்திற்கு உதவுவது போன்ற பாராட்டத்தக்க பணிகளும் அடங்கும்.
சீனாவில் இந்த மிஷனரி தம்பதியினர் போர்க்காலம், இயற்கை பேரழிவுகள், தங்கள் உயிர்களுக்காக தப்பி ஓடுவது, அவர்கள் இல்லாத நிலையில் சொந்த நாட்டில் உள்ள அன்பானவர்களை இழப்பது, உடல் நிலை சரியில்லாத நேரங்கள் போன்ற பல கடினமான அனுபவங்கள் வழியாய் சென்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவர்களை வெறுப்பதும் துன்புறுத்துவதும் அங்கு ஒரு தீவிர நிலையை எட்டியுள்ளது. சீனாவில் 1899-1901 வரை வெளிநாட்டு எதிர்ப்பு மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு இயக்கமான "பாக்சர்ஸ் ரிபெல்லியன்" (பாக்சர்ஸ் கிளர்ச்சி) எண்ணற்ற மிஷனரிகளையும், சீனாவின் கிறிஸ்தவர்களையும் படுகொலை செய்தது. பல துன்பங்கள் மற்றும் ஆபத்துகள் இருந்தபோதிலும், அந்த மிஷனரி தம்பதியினர் தங்கள் மிஷனரி வேலையைத் தொடர்ந்து, கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியர்களாக சேவை செய்தனர்.
தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சீனாவில் கழித்து, பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய ஆல்ஃபிரட் அவர்களை அங்குள்ள சபையின் உறுப்பினர்களான சீனாவின் மக்கள் ‘தி ஓல்ட் பாஸ்டர்' (பழைய போதகர்) என்று அன்பாக அழைத்தனர். பல புத்தகங்களை எழுதிய ஆல்ஃபிரட், 'பாக்சர்ஸ் ரிபெல்லியன்' மற்றும் சீனாவில் கிறிஸ்தவர்களை துன்புறுத்துவது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுதினார். 1941 ஆம் ஆண்டில் அவருடைய மரணத்திற்கு பிறகு சீன கிறிஸ்தவர்கள் ஜோஹன் ஆல்ஃபிரட் அவர்களுக்காக ஒரு நினைவு கல்லை அமைத்தனர்.
0 Comments