Ad Code

நட்பு • ஈர்ப்பு வித்தியாசம் என்ன? டீன் ஏஜ் ஆலோசனை • Friendship vs Attraction

மாணவப் பருவத்தில் நட்பு (Friendship) மற்றும் ஈர்ப்பு (Attraction) ஆகியவற்றுக்கு இடையே ஏற்படும் குழப்பம் மிகவும் இயல்பானது. முன்பெல்லாம் நண்பர்கள் கைகோர்த்து நடப்பதோ அல்லது தோள் மீது கை போட்டுக்கொள்வதோ ஒரு சாதாரண விஷயமாக இருந்தது. ஆனால் இன்று, "Bromance" என்ற பெயரிலும், சமூக வலைதளங்களின் தாக்கத்தாலும், நெருக்கமான நண்பர்களை உடனே தவறாக, முத்திரை குத்தும் போக்கு (Labeling) அதிகரித்துவிட்டது. நட்பு மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றுக்கு இடையேயான குழப்பத்தைத் தீர்க்க, மாணவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்வது எப்படி?

1. உணர்ச்சிகளின் இயல்பு (Understanding the Nature of Feelings)
பள்ளி வயதில் ஒரு நண்பர் மீது அதீத அன்பு ஏற்படுவது இயல்பானது. இதை 'Platonic Love' (தூய்மையான நட்பு) என்று அழைப்பார்கள்.
 
1.1 ஆதரவு: ஒரு நண்பர் உங்களுக்குக் கஷ்ட காலத்தில் உதவும்போது அல்லது உங்களைப் புரிந்து கொள்ளும்போது அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகலாம். இது அந்த நபர் அளிக்கும் "பாதுகாப்பான உணர்வு" மீதான ஈர்ப்பே தவிர, அது பாலின ஈர்ப்பு அல்ல.

1.2 பாராட்டு: ஒரு நண்பரின் திறமை (விளையாட்டு, படிப்பு அல்லது அழகு) உங்களைக் கவரலாம். அந்தத் திறமையைப் பார்த்து வியப்பதற்கும், அவரைப் போலவே மாற நினைப்பதற்கும் (Identification) இடையில் குழப்பம் வரலாம்.

1.3 வித்தியாசம்: ஈர்ப்பு பெரும்பாலும் ஒருவரின் தோற்றம், பேச்சுத் திறன் அல்லது மற்றவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து ஏற்படுவது. இது உடனடித் தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் நட்பு என்பது ஒருவரின் குணம், உங்கள் மீதான அக்கறை மற்றும் காலப்போக்கில் உருவான புரிதலின் அடிப்படையில் அமைவதாகும். சில காலம் அவரிடம் பேசாமல் அல்லது அவரைப் பார்க்காமல் இருந்து பாருங்கள். ஈர்ப்பு என்றால், காலப்போக்கில் அந்த வேகம் குறைந்துவிடும் அல்லது வேறு ஒரு நபர் மீது கவனம் திரும்பிவிடும். நட்பு என்றால், எவ்வளவு காலம் கழித்துப் பேசினாலும் அதே புரிதலும் மரியாதையும் நீடிக்கும்.

2. 'Mirroring' - பிரதிபலிப்பு மனநிலை
வளரிளம் பருவத்தில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒருவரைப் போலவே இருக்க விரும்புவார்கள்.
• தன்னைப் போலவே சிந்திக்கும் அல்லது செயல்படும் ஒருவரைப் பார்க்கும்போது, "அவர் என்னைப் போலவே இருக்கிறார்" என்ற நெருக்கம் உண்டாகும்.
• இந்த நெருக்கத்தை 'காதல்' என்று தவறாகப் பெயரிடுவதுதான் குழப்பத்திற்குத் தொடக்கம். இது உண்மையில் ஒரு ஆழமான சகோதரத்துவ அல்லது தோழமை உணர்வு மட்டுமே.
• எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றும், அவரிடம் எதையும் வெளிப்படையாகப் பகிர முடியும் என்றும் தோன்றினால், அது ஆழமான நட்பு. "ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் தன் கவலைகளைப் பகிர்வதும், ஆறுதல் தேடுவதும் பலவீனம் அல்ல, அது ஆரோக்கியமான நட்பின் அடையாளம்." 

3. சமூக ஊடகங்களின் மாயை (The Social Media Trap
தற்போது இணையத்தில் பலவிதமான பாலின அடையாளங்கள் பற்றித் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
• சிறிய மனமாற்றம் ஏற்பட்டால் கூட, உடனே இணையத்தில் தேடி, தனக்குத் தானே ஒரு லேபிளை (Label) ஒட்டிக்கொள்வது ஆபத்தானது.
• என் நண்பர் தவறானவர் என்ற கண்ணோட்டத்தில், முடிவு செய்து விடக் கூடாது. சந்தேகத்தால் பல உண்மையான நட்புகள் சிதைந்து போய் உள்ளன. மனதிற்குள் ஊகங்களை வளர்ப்பதை விட, அவரிடம் நேரடியாகப் பேசுவது சிறந்தது.
• மாணவர்களின் மூளை 25 வயது வரை முழுமையாக வளர்ச்சியடைவதில்லை என்பதால், இந்த வயதில் தோன்றும் உணர்வுகள் மாறக்கூடியவை (Fluid). எனவே, அவசரப்பட்டு எந்த முடிவிற்கும் வரக்கூடாது.

4. தெளிவு பெறுவதற்கான வழிகள்
மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்:
4.1. இந்த உணர்வு அந்த நண்பரின் குணத்தின் மீதான மதிப்பா? அல்லது வெறும் உடல் ரீதியான (பாலியல் ரீதியான எண்ணங்கள்) ஈர்ப்பா?
4.2. எனது படிப்பு அல்லது லட்சியத்தில் நான் கவனம் செலுத்தும்போது இந்த எண்ணம் மறைகிறதா?
4.3 "இந்த உணர்வுகள் எனது அன்றாடக் கடமைகளைப் பாதிக்கின்றதா?"
4.4. நான் போதுமான அளவு உறக்கம் மற்றும் சரியான உணவு முறையைப் பின்பற்றுகிறேனா? (உடல் சோர்வு மனக்குழப்பத்தை அதிகமாக்கும்).
4.5 நான் பார்த்த திரைப்படங்கள், சீரியல்கள் அல்லது இணையதளச் செய்திகளின் தாக்கத்தால் எனக்கு இப்படித் தோன்றுகிறதா?
4.6 ஒரு நண்பருடன் மட்டும் ஒட்டிக்கொண்டு, மற்ற நண்பர்களைத் தவிர்க்கிறேனா? அல்லது அந்த நண்பர் மற்றவர்களுடன் பேசினால் எனக்குப் பொறாமை வருகிறதா?
4.7 எனது இந்தச் செயல் அல்லது எண்ணம் எனது பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் பெருமைப்படுவார்களா அல்லது வேதனைப்படுவார்களா?

5. நல் ஆலோசனை பெறுதல்
நட்பு வட்டாரம் இரகசியம் இல்லை. பெற்றோருடன் நட்பு குறித்து பகிர்ந்துகொள்ள வேண்டும். மனதில் உள்ள பாரத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால், அதைச் சரியான நபரிடம் சொல்வது அவசியம். ஒரு தொழில்முறை ஆலோசகர் (Psychological Counselor) உங்களை முன்முடிவுகள் இன்றி (Non-judgmental) கவனிப்பார். அவர் உங்கள் உணர்ச்சிகளின் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை விளக்கி, மனத் தெளிவு பெற உதவுவார்.

நிறைவாக....
நெருக்கமான நட்பு என்பது ஒரு வரப்பிரசாதம். அந்த நட்பில் கண்ணியம் (Dignity) மற்றும் எல்லைகள் (Boundaries) இருக்கும் வரை அது ஆரோக்கியமானது. தற்காலிகமான உணர்ச்சி அலைகளைக் கண்டு பயப்படாமல், கல்வியிலும் நற்பண்புகளிலும் கவனம் செலுத்துவதே ஒரு மாணவனுக்கு அழகு.

"ஈர்ப்பு என்பது ஒரு தற்காலிகமான மேகம் போன்றது; 
நட்பு என்பது வேரூன்றிய மரம் போன்றது." 

Post a Comment

0 Comments