கிறிஸ்தவ நிலத் தணிக்கை நடவடிக்கை சூழலில் கிறித்தவ சபைகளும் அதன் நிர்வாகிகளும் உடனடியாகச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
"சட்டம் வரக்கூடாது என்று ஜெபிப்பதை விட, அரசு சட்டத்தின் முன்னும், கடவுளின் பார்வையிலும் நாம் சரியாக இருக்கிறோமா? என்பதை சீர்தூக்கிப் பார்த்து, நம்மைச் சரிசெய்ய முன்வர வேண்டும்."
1. ஆவணங்களை ஒருங்கிணைத்தல் (Document Compilation)
1.1 மூல ஆவணங்கள்: நிலத்தின் விற்பனை பத்திரம் (Sale Deed), தானப் பத்திரம் (Gift Deed), மற்றும் பட்டா போன்ற அனைத்து அசல் ஆவணங்களையும் பாதுகாப்பாகத் தொகுத்து வைக்க வேண்டும்.
1.2 வருவாய்த்துறை பதிவுகள்: நிலத்தின் தற்போதைய வருவாய்த்துறை (Revenue Record) ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களில் சபையின் பெயர் அல்லது உரிய அறக்கட்டளையின் பெயர் சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கட்டிட அனுமதி முறையாக பெற்றிருக்க வேண்டும்.
1.3 பழைய ஆவணங்கள் பாதுகாப்பு: சுதந்திரத்திற்கு முந்தைய கால ஆவணங்களாக இருந்தால், அவை சிதைந்து போகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையெனில், அந்த ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை (Certified Copies) அரசு அலுவலகங்களிலிருந்து முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம். அல்லது CMS, SPG போன்ற மிஷனரி ஸ்தாபனங்களை அணுகி, நிலத்திற்கான ஆவணங்களை அல்லது சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம்.
2. ஆலோசனை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள்
2.1 சபை சொத்து தணிக்கைக் குழு (Church Property Audit Committee): சபை தணிக்கை அறிக்கை குழு : சபை நிர்வாகம் தனியாக ஒரு சட்டத் தணிக்கையை மேற்கொண்டு, ஆவணங்கள் தெளிவாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சொத்து வரி (Property Tax), மின்சாரக் கட்டணம் மற்றும் இதர அரசு வரிகள் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2.2 வழக்கறிஞர் குழு: நில விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு உங்கள் சொத்து ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் ஆவணங்களில் குறைபாடுகள் அல்லது இடைவெளிகள் இருந்தால், அவற்றைச் சட்டப்பூர்வமாகச் சரிசெய்வதற்கான வழிகளை இப்போதே ஆலோசிக்க வேண்டும். ஏற்கனவே, வழக்குகள் நிலுவையில் இருந்தால், விரைவாக முடிக்க வழிவகுக்க வேண்டும்.
2.3 தகவல் பரிமாற்ற குழு: அரசு ஆணையத்திடமிருந்து ஏதேனும் விசாரணை கோரப்பட்டால், முறையாகவும், உரிய காலக்கெடுவுக்குள்ளும் பதிலளிக்க ஒரு பொறுப்புக் குழுவை (Task Force) நியமிக்க வேண்டும்.
3. நிர்வாக வெளிப்படைத்தன்மை
3.1 அறக்கட்டளை பதிவு: சொத்துகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அறக்கட்டளையின் (Public Trust) கீழ் வருகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும். அறக்கட்டளை பதிவுகளில் ஏதேனும் மாற்றங்கள் நிலுவையில் இருந்தால், அவற்றை உடனே முடித்து வைக்க வேண்டும்.
3.2 நிலப் பட்டியல்: சபையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களின் துல்லியமான பட்டியலை (Inventory of Lands) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்தெந்த நிலங்கள் எந்தெந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன (எ.கா: தேவாலயம், பள்ளி, கல்லறைத் தோட்டம்) என்பதைத் தெளிவாக வகைப்படுத்தப்பட வேண்டும். நிலப் பத்திர நகல்கள் (ஜெராக்ஸ்) சேகரம், சபை மன்றம், மாவட்டம் மற்றும் திருமண்டல அளவில் சேகரித்து வைக்க வழிவகுக்க வேண்டும்.
3.3 டிஜிட்டல் ஒருங்கிணைப்பு:
அனைத்து அசல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து (High-Quality Scanning) பாதுகாப்பான Cloud Storage-ல் சேமிக்க வேண்டும். இது ஆவணங்கள் தொலைந்துபோகும் அல்லது தீ விபத்தினால் அழிந்துபோகும் சூழலில் பேரழிவைத் தவிர்க்கும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள சபைகள் தலைமை அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், பொது அலைபேசி எண் & பிரத்தியேக இணையதள வசதியை அறிமுகப்படுத்தலாம்.
4. செயல்பாட்டு நடவடிக்கைகள்
4.1 நிலத்தின் எல்லைகளில் "இது சபை/அறக்கட்டளைக்குச் சொந்தமானது" என்ற அறிவிப்புப் பலகையை (Signboard) நிரந்தரமாகப் பொருத்த வேண்டும்.
4.2 வேலி அமைத்தல்: நிலத்தின் எல்லைகளைத் தெளிவாகக் குறிக்க வேண்டும். கல் நடுவதோ அல்லது முறையாக வேலி அமைப்பதோ ஆக்கிரமிப்புகளைத் தடுக்க உதவும்.
4.3 ஆக்கிரமிப்பு ஆய்வு: நிலம் தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அங்கு ஏதேனும் ஆக்கிரமிப்புகள் (உதாரணமாக: குத்தகைதாரர்கள், இதர பயன்பாட்டாளர்கள்) உள்ளனவா என்பதையும் அவ்வப்போது நேரில் சென்று கள ஆய்வு செய்து புகைப்படச் சான்றுகளுடன் ஆவணப்படுத்த வேண்டும்.
5. விழிப்புணர்வு செயல்பாடுகள்
5.1 தணிக்கைப் பயிற்சி: சபைச் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் (எ.கா: Indian Trusts Act, Charity Commissioner rules) குறித்து ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவ்வப்போது விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
5.2 கலந்தாய்வு கூடுகைகள்
சபை அளவில், சேகர அளவில் மற்றும் திருமண்டல பெருமன்ற அளவில் வரலாறு அறிந்த நபர்களுடன் கலந்தாய்வு கூடுகைகள் நடத்தி, வேறு இடங்கள் சபைக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
5.3 முறையான வழிகாட்டுதல்
புதிதாக இடம் வாங்கும் போது அல்லது கட்டிடம் கட்டும் போது அரசு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதைக் குறித்து சபை மக்கள் மற்றும் ஊழியர்கள் எப்போதும் அறிந்துகொள்ள இதன் வழிமுறைகளை திருமண்டல வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
"நாமாக நமது கடமைகளைச் சரியாக செய்யாவிட்டால், அரசாங்கம் வாயிலாக, கடவுள் நம்மைச் செய்ய வைக்கிறார் போலும்."
Written by
Meyego

0 Comments