"கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்". சங்கீதம் 118:26 & 27.
ஸ்தோத்திர பண்டிகையின் தொடக்கம்
திருநெல்வேலி திருமண்டலம் எஸ்.பி.ஜி மற்றும் சி எம் எஸ் ஆகிய இரு மிஷனரி சங்கங்களின் மூலம் உருவானது. முதன்முதலாக ஸ்தோத்திர பண்டிகை எஸ்.பி. ஜி (Society of Propagation for the Gospel) மிஷனில் அக்காலத்தில் அதன் தலைமை இடமாக இருந்த நாசரேத்தில் 1884 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இப்பண்டிகை அங்கு நடைபெறவில்லை. முதன்முதலாக சி.எம்.எஸ் (Church Missionary Society) மிஷனில் சிவகாசி சாட்சியாபுரம் சர்க்கிளில் தலைமை இடமாகிய சாட்சியாபுரத்தில் 1891 இல் சி.எம்.எஸ். தலைமை மிஷனரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட சர்ச் கவுன்சில் தலைவர் Rev.தாமஸ் வாக்கர் ஐயரவர்களால் தபச உற்சவம் என்னும் ஸ்தோத்திர பண்டிகை தொடங்கப்பட்டது. அந்த பண்டிகை இன்றளவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்திலும் இப்பண்டிகை மிக முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது.
பண்டிகை நாட்கள்
சாட்சியாபுரத்தில் முதன்முதலாக இப்பண்டிகை தொடங்கப்பட்ட காலத்தில் நான்கு நாட்கள் இப்பண்டிகை நடத்தப்பட்டது. இப்பண்டிகை மிக வெற்றிகரமாக நடைபெறுவதையும் சிவகாசி சாட்சியாபுரம் சர்க்கிள்களுக்கு உட்பட்ட அனைத்து சபை மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு பண்டிகையில் பங்கு பெறுவதையும் கண்ட திருநெல்வேலி திருமண்டலத்தில் பிற சர்க்கிள்களின் குருமார்கள் தங்களுடைய சர்க்கிள்களின் தலைமை இடத்தில் ஸ்தோத்திர பண்டிகை என்றும் அறுப்பின் பண்டிகை என்றும் சேர்ப்பின் பண்டிகை என்றும் அழைக்கப்பட்ட இப்பண்டிகையை தொடங்க ஆரம்பித்தார்கள். பிற்காலத்தில் கூட்டம் என திருநெல்வேலி திருமண்டல சபைமக்களால் இப்பண்டிகை அழைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலும் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ஸ்தோத்திர பண்டிகை நடைபெறும் இடங்களும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளும்
1891 – சாட்சியாபுரம் (சிவகாசி)
1892 – நல்லூர்
1893 – மெய்ஞானபுரம்
1894 – டோனாவூர்
1894 -சுவிசேஷபுரம்
1895 பாளையங்கோட்டை
1896 – சுரண்டை
1896 – பண்ணைவிளை
1902 – இடையன்குளம்
1919 – பொட்டல்பட்டி
1944 – குற்றாலம்
1945 – கடையம்
1966 – சீவலசமுத்திரம் (கண்டபட்டி)
1970 – கல்லிடை க்குறிச்சி
1974 – கோவிலூற்று
ஸ்தோத்திர பண்டிகை தொடங்குவதற்கான காரணங்கள்
பல கிராமங்களிலிருந்து பிற மதத்தினர் ஒன்றுகூடி மாட்டு வண்டிகளில் ஒன்றாக செல்வதும் ஆனி, ஆடி மாதங்களில் திருவிழாக்கள் கொடை விழாக்களுக்கு செல்வதும் குலதெய்வ கோயிலுக்கு பங்குனி உத்திரம் சிவராத்திரி போன்ற நாட்களில் குடும்ப சொக்காரர்கள் (பங்காளிகள்) ஒன்றாக இணைந்து விழாக் கொண்டாடி வருவதும் செல்வதுமாக இருந்ததைக் கண்ட புதிய கிறிஸ்தவர்களும் தாங்களும் ஒன்றுகூடி அலங்காரப் பந்தலில் சபை குடும்பங்களாக சபை மக்களாக ஒருங்கிணைந்து ஆண்டவரை வழிபட வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறான சபை மக்களின் விருப்பத்தை அந்தக்கால CMS மிஷனரிமார் அன்புடன் ஏற்றுக் கொண்டார்கள் இதுவே ஸ்தோத்திர பண்டிகைகள் தொடங்குவதற்கு காரணமாயிருந்தது.
பண்டிகை தொடங்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள்
ஸ்தோத்திர பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் மூலம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிதிருவிழா, சங்கரன்கோவில் ஆடித்தபசுதிருவிழா, திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித்திருவிழா, பாபநாசம் காரையார் ஆடி அமாவாசை விழா, தேரிகுடியிருப்பு, மேலபுதுக்குடி, உவரி போன்ற பல இடங்களில் குலதெய்வ கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு கிறிஸ்தவர்கள் ஆன பின்பும் பழைய பழக்கத்தை கைவிடாமல் சென்று வந்த கிறிஸ்தவர்கள் ஸ்தோத்திரபண்டிகைகள் தொடங்கப்பட்ட பின்பு அந்த இடங்களுக்குச் செல்லாமல் வண்டி கட்டி உற்சாகமாக ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்ற சர்க்கிள் தலைமை இடங்களுக்குச் சென்று வந்தார்கள். குறிப்பாக சுரண்டை வட்டாரத்தை சார்ந்தவர்கள் சுரண்டையில் நடைபெற்ற ஸ்தோத்திர பண்டிகைக்கும், நல்லூர் ஆலங்குளம் வட்டாரத்தை சார்ந்தவர்கள் நல்லூர் ஸ்தோத்திர பண்டிகைக்கும், டோனாவூர் வட்டாரத்தை சார்ந்தவர்கள் டோனாவூர் ஸ்தோத்திர பண்டிகைக்கும், இடையன்குளம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இடையங்குளம் ஸ்தோத்திர பண்டிகைக்கும் தென்காசி பாவூர்சத்திரம் செங்கோட்டை கடையநல்லூர் புளியங்குடி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் குற்றாலம் ஸ்தோத்திரப் பண்டிகைகும் கடையம் வட்டாரத்தைச் சேர்ந்தோர் கடையம் ஸ்தோத்திரப் பண்டிகைக்கும் சுவிசேஷபுரம் வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் சுவிசேஷபுரம் ஸ்தோத்திர பண்டிகைக்கும் கண்டபட்டி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கண்டபட்டி சீவளசமுத்திரம் ஸ்தோத்திர பண்டிகைக்கும் மாட்டு வண்டிகள் மூலம் சென்று அந்த இடங்களில் மூன்று நாட்கள் தங்கியிருந்து அலங்கார பந்தலில் ஆண்டவரை வழிபட்டு திரும்பி வந்தார்கள் அதன் மூலமாக அவர்களுக்குள் ஐக்கியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது தற்காலத்தில் மாட்டு வண்டிகளில் பயணம் செய்வது குறைந்துள்ளது பேருந்து மூலமாக, வேன் மூலமாக, கார் மூலமாக, இருசக்கர வாகனங்கள் மூலமாக குடும்பம் குடும்பமாக ஸ்தோத்திர பண்டிகைகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆண்டவருக்கு நன்றி காணிக்கை செலுத்தி இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
பண்டிகைக்கான ஆயத்தங்கள்
இந்த பண்டிகைக்காக பல மாதங்களுக்கு முன்பாகவே சபை மக்கள் பணம் சேர்த்து வருவது, சிறுபிள்ளைகள் உண்டியல் மூலம் பணம் சேகரிப்பது, பண்டிகை என புத்தாடை எடுப்பது வாலிபர்கள் மற்றும் பெண்கள் சீருடை எடுப்பது எனப் பல காரியங்கள் இன்றளவும் தொடர்கிறது ஸ்தோத்திர பண்டிகைகள் சபைகளுக்குள்ளும், சபை மக்களுக்குள்ளும் கிறிஸ்தவ ஐக்கியத்தை ஏற்படுத்தி இறைமக்களை ஒன்று கூட்டுகிறது.
ஸ்தோத்திர பண்டிகை நிகழ்வுகள்
பொதுவாக ஸ்தோத்திர பண்டிகைகளில் முதலாம் நாள் ஆயத்த பவனி, ஆயத்த கொடியேற்றம், ஆயத்தஆராதனை போன்றவை நடைபெறுகின்றன. இரண்டாம், மூன்றாம் நாட்களில் திருவிருந்து ஆராதனை, வருடாந்திர கூட்டம், பண்டிகை ஆராதனை போன்றவையும் விளையாட்டு போட்டிகள், மன்றாட்டு ஜெபம், சிறுவர்களுக்கு வாலிபர்களுக்கு ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு ஜெபக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் மூன்றாம் நாட்களின் இரவுகளில் பஜனை பிரசங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அனைத்து நிகழ்வுகளிலும் கொடுக்கப்படுகிற ஆண்டவருடைய அருட்செய்தி சபை மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆண்டவருடைய திருச்சமுகத்திற்கு நேராக கொண்டு செல்கிறது.
பண்டிகைக்கால கொண்டாட்டங்கள்
ஸ்தோத்திர பண்டிகைகள் நடைபெறும் இடங்களில் சிறுபிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் ராட்டினங்கள், மிட்டாய் கடைகள், வளையல் கடைகள், விளையாட்டு பொருட்களுக்கான கடைகள் , குடும்பத்திற்கு தேவையான உணவு உபயோக பொருட்களுக்கான கடைகள், Refresh செய்வதற்காக தேனீர் கடைகள், சிற்றுண்டி மற்றும் உணவு அளிக்கும் கடைகள் என பலதரப்பட்ட மக்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கடைகள் என ஸ்தோத்திர பண்டிகைகளை ஒட்டிய நிகழ்வுகள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாக அமைகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஸ்தோத்திர பண்டிகை
1.இறைமக்களை ஆண்டவருக்கு நேராகக் கொண்டு செல்கிறது.
2.இறைமக்களை ஒன்று கூட்டுகிறது.
3.இறை மக்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
Acknowledgement
J. ஜான் ஞானராஜ்,
கல்லிடைக்குறிச்சி
0 Comments