1. குழந்தை ஞானஸ்நானமும் உடன்படிக்கையும் (Covenantal Baptism)
பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம் குழந்தைகளுக்குச் செய்யப்பட்டது போல (ஆதியாகமம் 17:12), புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் உடன்படிக்கையின் அடையாளமாகிறது. ஞானஸ்நானம் என்பது ஒரு மனிதன் எடுக்கும் முடிவை விட, கடவுள் நம்மோடு செய்யும் "உடன்படிக்கை" ஆகும்.
வேதாகம ஆதாரம்:
"அவனும் அவன் வீட்டார் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்" (அப்போஸ்தலர் 16:33).
"அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு..." (அப்போஸ்தலர் 16:15).
பழைய ஏற்பாட்டில் எட்டாம் நாளில் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது போல, புதிய உடன்படிக்கையில் ஞானஸ்நானம் குழந்தைகளுக்குக் கிருபையின் அடையாளமாகக் கொடுக்கப்படுகிறது. குழந்தை தன் அறிவால் கடவுளைக் கண்டடைவதற்கு முன்பே, கடவுளுடைய கிருபை அக்குழந்தையைத் தேடி வருகிறது. இது குடும்பம் முழுமைக்குமான உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறது.
2. திருவிருந்து (Eucharist)
சுயாதீன சபைகளில் திருவிருந்து அவ்வப்போது நடக்கும் ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் முக்கிய திருச்சபைகளில் இது ஒரு "கூட்டுறவு/Unity" மற்றும் "உடன்படிக்கையாக" ஆழமாகப் பார்க்கப்படுகிறது. முக்கிய திருச்சபைகளில் திருவிருந்து வழிபாட்டின் மையமாகவும் இருக்கிறது. இதில் நாம் பங்கு பெறும்போது கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமை நம்மைப் பலப்படுத்துகிறது.
வேதாகம ஆதாரம்:
"நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவின் சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?" (1 கொரிந்தியர் 10:16).
"என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள்" (லூக்கா 22:19).
இது வெறும் அடையாளமல்ல, கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நாம் பங்குபெறும் ஒரு ஆவிக்குரிய அனுபவம். கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சரீரத்திலும் இரத்தத்திலும் நாம் பங்குபெறும்போது, நமக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத உடன்படிக்கை புதுப்பிக்கப்படுகிறது.
3. லெந்து காலம் (Lent Days) - 40 நாட்கள் உபவாசம்
லெந்து காலம் என்பது வெறும் சடங்கு அல்ல, அது ஒரு ஆவிக்குரிய ஆயத்தக் காலம்.
வேதாகம ஆதாரம்:
இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தைத் தொடங்கும் முன் வனாந்தரத்தில் 40 பகலும் 40 இரவும் உபவாசம் இருந்தார் (மத்தேயு 4:2). மோசே சீனாய் மலையில் 40 நாட்கள் தங்கியிருந்தார் (யாத்திராகமம் 34:28). எலியா 40 நாட்கள் நடந்து கடவுளுடைய மலைக்குச் சென்றார் (1 இராஜாக்கள் 19:8).
ஆவிக்குரிய சத்தியம்:
இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் தியானிக்க நம்மைத் தயார்படுத்துவதே இதன் நோக்கம். "மாம்சத்தின் இச்சைகளை அடக்கி, ஆவியின் கனிகளைப் பெருக்குதல்" என்பதே இதன் சாராம்சம். இது ஒரு தற்காலிக சடங்கு அல்ல, மாறாக மனந்திரும்புதலுக்கான அழைப்பு (யோவேல் 2:12-13).
4. சிலுவை அடையாளம் (Sign of the Cross)
ஜெபத்திற்கு முன்பும் பின்பும் நெற்றியில் அல்லது மார்பில் சிலுவை அடையாளம் வரைவது பலருக்கு ஒரு வெறும் சடங்காகத் தெரியலாம், ஆனால் அதில் மிக உயர்ந்த சத்தியம் அடங்கியுள்ளது.
வேதாகம ஆதாரம்:
"நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையையல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக" (கலாத்தியர் 6:14).
எசேக்கியேல் 9:4-ல், கடவுளுடைய முத்திரை நெற்றியில் இடப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம்.
ஆவிக்குரிய சத்தியம்:
அடையாளம்: சிலுவை அடையாளமிடுவது நாம் யாருக்குச் சொந்தமானவர்கள் என்பதை நினைவூட்டுகிறது. ஒரு படைவீரன் தனது சீருடையில் அடையாளத்தைப் பெற்றிருப்பது போல, நாம் கிறிஸ்துவின் போர்வீரர்கள் என்பதைக் குறிக்கிறது.
மூவொரு கடவுளின் அறிக்கை: "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரால்" என்று சொல்லும்போது, நாம் திரித்துவ கடவுளின் பாதுகாப்பிற்குள் நுழைகிறோம்.
சுய அர்ப்பணிப்பு: சிலுவை அடையாளம் வரைவதன் மூலம் என் எண்ணம் (நெற்றி), என் இதயம் (மார்பு), என் பலம் (தோள்கள்) அனைத்தும் சிலுவைக்கு அர்ப்பணம் என்பதை உணர்த்துகிறது.
5. பாமாலை மற்றும் கீர்த்தனை பாடல்கள்
சுயாதீன சபைகளில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சிவசமான பாடல்கள் பாடப்படும்போது, பாரம்பரிய சபைகளில் பழைய பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.
பாரம்பரிய பாடல்கள் வெறும் மெல்லிசை அல்ல, அவை ஆழமான இறையியல் (Theology) கொண்டவை. விசுவாசிகளின் உணர்ச்சிகளைத் தூண்டுவதை விட, கடவுளைப் பற்றிய உண்மைகளை (Attributes of God) மூளையிலும் இதயத்திலும் பதிய வைப்பதே இதன் நோக்கம்.

0 Comments