ஆதியில் அச்சங்காடு என்றிருந்து, இன்றைக்கு அச்சம்பட்டி என்றழைக்கப்படும் ஊரானது நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இந்த பெயர் வந்ததற்கு சில காரணங்கள் வாய்வழி செய்திகளாக சொல்லப்படுகின்றன. மருந்துக்கு பயன்படும் அச்சஞ்செடிகள் புதர் புதராய், குத்துக் குத்தாக இருந்ததால் அச்சங்காடு என்ற பெயராகி, பின்பு அச்சம்பட்டி என்று மருவியது. ஆனால் இன்றைக்கு ஒரு செடி கூட இல்லை. அச்சஞ்செடிகளுக்குள் பாம்புகள் அதிகமாக புற்றுகளுக்குள் இருக்கும் காரணத்தால் பயத்தின் காரணமாக அச்சம்பட்டி என்ற பெயர் நேரடியாக வந்தது என்று சொல்வோரும் உண்டு. கேரளத்திலிருந்து பிழைக்க வந்த மக்கள் தங்கள் அச்சன் என்ற மலையாள பெயரால் அழைத்திருக்க வாய்ப்புண்டு என்பர் சிலர். மிஷனரிகள் காலத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டு பயம் நீங்கி நல்வாழ்வு கிடைத்ததால், அச்சம்பட்டி என்றானது என்ற செய்தியும் உண்டு.
1880 ஆம் ஆண்டு அச்சம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாதிய கொடுமை தலைவிரித்தாடியது. மேலும் நெல்லையிலிருந்து அச்சம்பட்டி வழியாக திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இராணி மங்கம்மாள் சாலை உண்டு. அதன் வேலை அப்போது தான் நடைபெற்ற போது, இந்த பகுதி மக்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தான் 1888 ஆம் ஆண்டு கார் ஐயர் (Rev. Khar) ஊழியம் செய்ய இந்த பகுதிக்கு வந்தார். மக்களுக்கு இழைத்த கொடுமைகளை களைந்தெரிய கச்சை வரிந்து கட்டி முனைந்து செயல்பட்டார். கலெக்டர் அலுவலகம் சென்று பேசி, முறையான கூலியை மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார். சாதிய வேறுபாடின்றி மக்களிடம் பாசமாக பழகி உதவிகள் செய்தார். நற்செய்தி அறிவித்தார். அதே 1888 ஆம் ஆண்டே அச்சம்பட்டி சபை தோன்றியது. கார் ஐயர் 1887 முதல் 1915 வரை இந்த பகுதியிலுள்ள பல ஊர்களில் பணி செய்தார். இவரது காலத்தில் ஓலைக் கோயிலும், ஒரு சிறு பள்ளியும் தோன்றின.
இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட பெரிய நான்கு நாக்கு மணியானது, இருபெரும் பனை மரங்களை நாட்டி, அவற்றின் நடுவில் தொங்கவிடப்பட்டது. ஏதாவது கொடுமை நடப்பின், அந்த மணியை ஒலிக்கலாம். சபை ஒன்று கூடும். பிரச்சினை சரிசெய்து விடப்படும். சபை வளர்ந்து பெருகியது. 30.09.1921 அன்று பழைய மண் சுவர் கோயிலுக்கு சற்று மேற்கே, புதிய ஆலயம் கட்ட உவாக்கர் ஐயரவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அடித்தளத்தோடு வேலை தடைப்பட்டது. 1927 ஆம் ஆண்டு புதிதாக இங்கு வந்த கனோன். எஸ். பால் மாணிக்கம் ஐயா முயற்சி எடுக்க ஆலயத்தின் நான்கு பக்க சுவர்கள் எழுப்பட்டாலும் மீண்டும் தடை ஏற்ப்பட்டது. 1933 ஆம் ஆண்டு பால் மாணிக்கம் ஐயா பணியிடம் மாற்றம் பெற, அதற்கு பின் 20 ஆண்டுகள் பல ஆயர்கள் வந்தும் ஆலய கட்டுமானப் பணிகள் தொடரவில்லை..
எந்த குருமாரும் அச்சம்பட்டிக்கு போக விரும்பவில்லை. கொஞ்ச நாட்களுக்கு அச்சம்பட்டிக்கு குருமார் வேண்டாம் என்று கமிட்டி கூட்டமொன்றில் காரசார விவாதம் நடந்த போது, பால் மாணிக்கம் ஐயா குறுக்கிட்டு, என் மகன் போவார் என்றுசொல்லி தீர்வு கண்டார். 1953 ஆம் ஆண்டு, போக்குவரத்து மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத, பிரச்சினைகளுள்ள இந்த பகுதிக்கு Rev. தியோடர் பால் மாணிக்கம் ஐயா இன்முகத்துடன் வந்தார்கள். 1954 இல் ஆலய கட்டுமானப்பணி மீண்டும் தொடங்க, மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொடுத்தும், வேலையும் செய்தனர். 02.04.1955 அன்று பேராயர். கனம். ஜெபராஜ் ஐயாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தூய மிகாவேல் ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது.
1972 ஆண்டு ஆலய கோபுரம் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதலில் ஆரம்பப்பள்ளியாக இருந்தது, இப்போது நடுநிலைப் பள்ளியாக செயல்படுகிறது. பழைய ஆலயம் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு Rev. சாமுவேல் துரைராஜ் ஐயா காலத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. சுமார் 55 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் 2012 அக்டோபர் 6 ஆம் நாள் Rt. Rev. J. J. கிறிஸ்துதாஸ் பேராயவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இன்றைக்கு 400 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இந்தக் கிராமத்தில் உள்ளன. தூய மிகாவேல் ஆலயத்தை தலைமையிடமாகக் கொண்ட வடக்கு அச்சம்பட்டி சேகரத்தில், தற்போது, அச்சம்பட்டி, தடியாபுரம், புளியம்பட்டி, சாயமலை, கொக்குகுளம், மேலநீலிதநல்லூர், மேலசிவகாமியாபுரம், ஆவுடையாள்புரம், கரிசல்குளம், வெள்ளப்பனேரி, மடத்துப்பட்டி என்ற பதினொரு கிளை சபைகள் உள்ளன. நல்ல வளர்ச்சியை இந்த ஆலயம் கொண்டுள்ளது.
துணை நின்ற நூல்கள்
ஊரும் பேரும் - ஆர். எஸ். ஜேக்கப்
கார் ஐயர் வரலாறு
Photos by
Yesu Mani
4 Comments