கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்திய ரோமப் பேரரசன் டயோகிளிஷியனுக்கு அடுத்து வந்த மாக்சிமிலியன் என்ற அரசனும் டயோக்ளிஷியனை விடக் கொடியவனாய் காணப்பட்டான். பிரான்ஸ் நாட்டின் மார்சில்வெஸ் என்ற சிறிய பட்டணத்தில் வாழ்ந்து வந்த விக்டர் ஒரு உண்மைக் கிறிஸ்தவர். ரோமப் பேரரசரால் பாடுகளுக்கு ஆளான குடும்பங்களை உற்சாகப்படுத்தி , ஊக்கப்படுத்தி பொருளுதவி செய்யும் இவரது வழக்கம் அரசனுக்குத் தெரிய வந்தது.
அரசன் ஆணை பிறப்பித்தான். விக்டரின் ஆடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு தெருத்தெருவாய் இழுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு இமுத்துச் செல்லும் போது கொடிய சித்திரவதைக்குள்ளானார். அடுத்து இரண்டு மரக்கட்டைகளுக்கு நடுவே சரீரத்தைக் கட்டி கட்டை கொண்டு தாக்கினார்கள். அப்போது விக்டர் வானத்தைப் பார்த்து ஆண்டவரே! இந்த கொடிய வேதனைகளை சகிக்க எனக்கு கிருபை தாரும் என்று ஜெபித்தார். கடைசி தருணமாக அந்நிய தேவர்களுக்கு தூபம் காட்ட வேண்டுமென்று கட்டளை வந்தது. விக்டர் என்ன செய்யப் போகிறாரோ என்று எல்லோரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
விக்டர் வேகமாக சென்றார். பலம் கொண்டு தன் இரண்டு கால்களால் சிலையையும் பீடத்தையும் மிதித்துத் தள்ளினார். கோபமுற்ற அரசனின் ஆணைப்படி இரண்டு கால்களும் வெட்டப்பட்டு துண்டாக எடுக்கப்பட்டது. ஆனாலும் "ஆண்டவரே! உமது கிருபையை தாரும்" என்று மன்றாடிய அவரை எடுத்து, உயிரோடு கற்களை நொறுக்கித் தூளாக்குகிற இயந்திரத்துக்குள் போட்டனர். விக்டர் உருக்குலைந்து காணாமலே போனான். ஆனால் அவர் விசுவாசம் காணாமல் போகவில்லை.
ஆண்டவருக்காக நம்முடைய உறுதி எப்படியுள்ளது? தைரியம் காணப்படுகின்றதா?
வேதத்தில் மூன்று வாலிபர் அறிக்கையிட்டவை இதோ: "நாங்கள் ஆராதிக்கிற கடவுள் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்" (தானியேல் 3:18).
இந்த நம்பிக்கை நம்மில் உண்டா???
0 Comments