Ad Code

ஜீவனையும் வெறுத்து பொக்கிஷம் சேர்

கிறிஸ்தவர்களை மிகவும் கொடுமையாக துன்புறுத்திய வலேரியன் என்ற ரோமச் சக்கரவர்த்தி, கி.பி 257 ஆம் ஆண்டு, அக்காலத்தில் பேராயராக இருந்த கனம். லாரன்ஸ் என்பவரை அழைத்து, "மூன்று நாட்களுக்குள் திருச்சபை சொத்துக்களையெல்லாம் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். உடனே பேராயர் லாரன்ஸ் அனைத்துச் சொத்துக்களையும் விற்று விதவைகள் , அனாதைகள், ஏழைகள் மற்றும் ஊனமுற்றவர்கள் போன்ற சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்குக் கொடுத்தார். பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்து பேரரசன் முன் நிறுத்தி "இவர்களே என் திருச்சபையின் சொத்து" என்று கூறினார்.
அரசனுக்கு கடுங்கோபம் வந்தது. பேராயர் லாரன்ஸைப் பிடித்து கை கால்களைக் கட்டி இரும்புக் கட்டிலில் படுக்க வைத்து கீழே தீ மூட்ட கட்டளையிட்டான். சுடர் விட்டு எரியும் நெருப்பில் பேராயரின் முகம் இறைத்தூதரின் முகம் போலக் காணப்பட்டது. பேராயர் லாரன்ஸ் தன் உடல் வெந்து கொண்டிருந்த சூழலிலும் அரசனை நோக்கி, "அரசனே கிறிஸ்துவின் அன்பு உம்மை ஆண்டு கொள்வதாக" என்று அன்புடன் சொல்லி, "என் உடல் வெந்ததும் அதை உமக்கு உணவாக்கிக் கொள்ளும்" என்று உயிரை நீத்தார்.


பேராயர் லாரன்ஸ் அவர்கள் தன் மரண வேளையைப் புரிந்தவராக, மிகுந்த ஞானமாக செயல்பட்டு,  தன் ஜீவனையும் வெறுத்து, சபையின் சொத்துக்கள் அரசன் கைக்கு போகா வண்ணம், அதை விற்று உதவி செய்தார். தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்கவில்லை, மாறாக தம் சபையில் ஆத்துமாக்களை சேர்த்து வைத்து விட்டார். இயேசு சொன்னார்: (மத்தேயு 6.20,21) "பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்."


Post a Comment

0 Comments