Ad Code

அறுப்பின் பண்டிகை வரலாறு | Harvest Festival

பண்டிகை என்றாலே அது இறைவன் கொடுத்த நியமம்.  சீரிய முறையில் நல்ல திட்டங்களை உருவாக்குவதில் மிகுந்த கவனமும் உற்சாகமும் கொண்டவர் CMS மிஷனரி கனம். தாமஸ் உவாக்கர் ஐயரவர்கள் (09.02.1859 - 24.08.1912). அவர் தான் முதன் முதலில் திருநெல்வேலி திருமண்டலத்தில் சபைமன்ற அளவில் அறுப்பின் பண்டிகை ஆசரிக்க திட்டம் தீட்டினார். இதற்கு முன்பாக SPG சங்கம் சார்பாக ஸ்தோத்திர பண்டிகை என்று நாசரேத்தில் 1884 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது. ஆனால் அடுத்து அது தொடரவில்லை.  CMS மிஷனரி தாம் திட்டமிட்டப்படி, அறுப்பின் பண்டிகையை முதன் முதலில் 1891 ஆம் ஆண்டு சபை மன்றத்திலுள்ள சாட்சியாபுரம் சேகரத்தில் செயல்படுத்தினார். அங்கு அறுப்பின் பண்டிகை 4 நாட்கள் மிக சிறப்பாக ஆசரிக்கப்பட்டது. எல்லா செலவும் போக ரூபாய் 100 மீதமாக இருந்தது.

தொடக்கத்தில் வருடத்திற்கு ஏதாவது ஒன்று அல்லது சில சபை மன்றத்தில் மாத்திரம் நடை பெற்றது. 1892 ஆம் ஆண்டு மேற்கு திருநெல்வேலி என்றழைக்கப்படும் நல்லூர் சேகரத்தில் வைத்து ஆசரிக்கப்பட்டது. 1893 ஆம் ஆண்டு மெஞ்ஞானபுரம் ஆலயம் அறுப்பின் பண்டிகைக்கான விழாக்கோலம் பூண்டது. 1894 ஆம் ஆண்டு சுவிசேஷ புரத்திலும் டோனாவூரிலும் கொண்டாடப்பட்டது. 1895 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து ஆசரிக்கப்பட்டது.  1896 ஆம் ஆண்டு பண்ணைவிளையிலும், சுரண்டையிலும் நடைபெற்றது. அந்த ஆண்டு கிடைத்த காணிக்கை தொகை ரூபாய் 2670 ஆகும்.


சுரண்டையில் நடைபெற்ற அறுப்பின் பண்டிகை கனம். உவாக்கர் ஐயா வாழ்வில் மறக்க முடியாத ஒன்றானது. Rev. கார், Rev. உவாக்கர் மற்றும் சில சுதேச ஊழியர்களும் பண்டிகை முடிந்து சுரண்டையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென திருடர்கள் வந்து முதலில் சென்ற கனம்.  கார் ஐயா வண்டியைத் தாக்கினர். அடுத்த வண்டியில் இருந்த உவாக்கர் ஐயா திருடர்களை தாக்க ஏதாவது ஒரு ஆயுதம் கிடைக்குமா என்று தேடினார். அவருடன் வந்து இடையில் தம் ஊரில் இறங்கிய ஒரு சுதேச ஆயரின் கோல் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு  கீழே இறங்கி வந்த ஐயா திருடர்களை நோக்கி அந்த கம்பை சுழற்றிக் கொண்டே சீறி சென்றார். அதை பார்த்த திருடர்கள் முதல் வண்டியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். அடுத்து பாதுகாப்பாக அனைவரும் வீடு திரும்பினர்.

இந்த அறுப்பின் பண்டிகையின் நோக்கம் என்னவென்றால், இறைமக்களை ஏதாவது ஓரிடத்தில் கூடிவரச் செய்து, இணைந்து கடவுளை வழிபட்டு, தங்கள் அறுப்பின் முதற்பலனை செலுத்த வழிவகுப்பதாகும்.  இஸ்ரவேலருக்கு கடவுள் கற்றுக் கொடுத்ததும் இது தான். யாத்திராகமம் 23.16 சொல்லுகிறது: "நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக."

இப்படிப்பட்ட பண்டிகைகள் மக்களின் பண்பாட்டோடு தொடர்புப்படுத்தி ஆசரிக்கப்படும் போது, விசுவாசிகள் பின்வாங்கி போகாமல் இருக்கவும், தங்கள் பழைய  வழிபாடுகள், விழாக்கள் போன்றவற்றில் பங்கெடுப்பதை விட்டுவிடவும் வழிவகுத்தன. ஏனெனில், மக்கள் தங்கள் கலாச்சார பண்பாட்டுபடி விளைச்சல் முடிந்த பின்பு, அறுவடைக்குப் பின், விழாவெடுப்பதும், இயற்கை வழிபாடும் வழக்கம்.

திருநெல்வேலி திருமண்டலத்தில் ஒவ்வொரு சேகரங்களிலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அறுப்பின் பண்டிகை ஆசரிக்கப்படுகின்றன. Rev. பேரன்புரூக் ஐயா மூலம் உருவான பங்களா சுரண்டை சேகரத்தில் தான் முதன் முதலில் ஆரம்பித்து, அப்படியே ஒவ்வொரு சேகரமாக நடந்து,  குற்றாலப் பண்டிகையோடு முடிவடையும். குற்றாலப் பண்டிகை என்பது அன்றைக்கு தென்காசி, சாந்தபுரம், புளியங்குடி, பாவூர்சத்திரம் என 4 சேகரங்கள் இணைந்து (தற்போது இந்த 4 சேகரங்கள் 10 ஆக வளர்ந்துள்ளன) நடத்தும் அறுப்பின் பண்டிகை.

அறுப்பின் பண்டிகைக்கு ஸ்தோத்திரப் பண்டிகை என்ற பெயர் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. தற்சமயம் மனமகிழ்ச்சி பண்டிகை என்றழைப்பதும் இருக்கிறது. மூன்று முக்கிய ஆராதனைகள் அறுப்பின் பண்டிகையில் இருக்கும். 1. பிராதன ஆராதனையில் கடவுளுக்கு நன்றி கூறுதல் மற்றும் நன்றிக் காணிக்கை படைத்தல். 2. வருடாந்திர கூட்டத்தில் சபை காரியங்களை இறைநாம மகிமைக்காக வாசித்து நன்றி நவிலல். 3. சேகரத்தின் அனைத்து சபைகளும் இணைந்து ஒன்றாக பங்கெடுக்கும் பரிசுத்த நற்கருணை வழிபாடு. இது தவிர அருணோதயப் பிரார்த்தனை, இரவு நிகழ்ச்சிகள், ஞானஸ்நான ஆராதனை மற்றும் சிறப்பு கூட்டங்கள் நடைபெறும்.


பண்டிகையின் மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

⛪🌾➕💐⛪

தகவல் திரட்டல் & தொகுப்பு

மேயேகோ

துணை நின்ற நூல்கள்

இவர்களைத் தெரியுமா?

Post a Comment

5 Comments

Anonymous said…
78 வது குற்றால ஸ்தோத்திர பண்டிகை - 2021
Meyego said…
தங்கள் சேகரம் எது?
Rev.R.R.Meadows said…
சாமுவேல் பவுல் ஐயர்