நம் தாய்நாட்டின் பவள விழா சுதந்திர தினத்தில் உங்கள் யாவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துகள். அருளும் அமைதியும் உண்டாகட்டும்.
இந்த 2021 ஆம் ஆண்டின் சுதந்திர தின கருப்பொருள் என்னவென்றால், சுதந்திர வாழ்வில் நம்பிக்கை 2021. ஆம் நம்பிக்கையும் சுதந்திரமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுபவை. சுதந்திரம் என்றால் விடுதலை. நம்பிக்கை என்றால் ஒன்றை அல்லது ஒருவரை நம்புவது எனலாம். இன்றைய சுதந்திர இந்தியாவில் தனிமனித வாழ்வானாலும், பொது வாழ்வானாலும் நம்பிக்கையோடு வாழ முடிகிறதா? அல்லது நம்பக்கூடியவாறு மாந்தரைக் காண முடிகிறதா?
நம்பிக்கை இருக்கும் இடத்தில் தான் சுதந்திரம் பிறக்கும்; சுதந்திரம் இருக்கும் இடத்தில் தான் நம்பிக்கை வளரும். உதாரணமாக, பெற்றோர் தம் பிள்ளையை நம்பினால் தான் அதற்கு அந்த நம்பிக்கைக்கேற்ற சுதந்திரம் கிடைக்கும். அந்த சுதந்திரம் இருந்தால்தான் பெற்றோர் மீதுள்ள நம்பிக்கை வளரும். அதுபோலவே, தான் சமுதாயத்தில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை உணர்வு வேண்டும். அந்த நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள் நடைபெற்றால் இன்னும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பது தான் தெளிவு.
ஒரு சிறு பிள்ளையோ, வாலிபரோ இந்த நாட்களில் நம்பிக்கையுடன் வெளியே சென்று வர முடியாத அளவுக்கு நம் நாட்டின் நிலைமை உள்ளது. நம்பிக்கைக்கு கேடு விளைவிக்கும் செயல்கள் நடைபெறுவதால் நாடு சுதந்திரம் அடைந்து விட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
இது மாத்திரமல்ல, நம்பி ஓட்டை போட்டுவிட்டு, பின்னர் ஏமாற்றப்படும் அவலநிலையும் நம் நாட்டில் உள்ளது. இங்குதான் நம்பிக்கை துரோகம் என்னும் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது.
ஒரு இறை நம்பிக்கையுள்ள என்னால் அல்லது உங்களால் செய்யக்கூடிய பணி என்ன? நாம் தான் மக்களிடையே இறை நம்பிக்கையையும், சமூக நம்பிக்கையையும் விதைக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும். சுதந்திர இந்தியாவில் நம்பிக்கை மலர வேண்டும். இந்த நம்பிக்கை மலரும் போது, நிச்சயமாக ஒவ்வொரு இந்தியரும் சுதந்திரமாக வாழ முடியும்.
நம்பிக்கை இல்லாவிடில்
எந்தவொரு நட்புறவும் நீடிக்காது - அவ்வாறே
நம்பிக்கை மலராவிடில்
விடுதலையை அனுபவிக்க முடியாது
By
meyego
15/08/2021
0 Comments