Ad Code

தூய அந்திரேயா ஆலயம் | மைலப்பபுரம்


மைலப்பபுரம் (மயிலப்புரம்) என்ற கிராமம் பாவூர்சத்திரத்துக்கு தெற்கே 7 கி. மீ தொலைவிலும், கடையத்துக்கு வடக்கே 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு காணப்படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க தூய அந்திரேயா ஆலயம் CSI திருநெல்வேலி திருமண்டலத்தில் கோவிலூற்று சேகரத்தின் கிளை சபையாக இருப்பினும், இந்த சேகரத்தில், அதிக விசுவாசிகள் கொண்ட பெரிய சபையாகும்.

St. Andrew's Church
தூய அந்திரேயா ஆலயம், மைலப்பபுரம்

CMS மிஷனரி Rev. ரேனியஸ் ஐயரவர்கள் (1791-1838) நல்லூரை மையமாக கொண்டு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நற்செய்தி அறிவித்து சபைகளை நிறுவினார். அவர் மூலமாக மேல விசுவாசத்தில் முதன் முதலாக இயேசுவை ஏற்றுக்கொண்ட 5 குடும்பங்களில் வெள்ளை அமிர்தநாயகம் குடும்பம் மிக்க இறைப்பற்றுடன் வாழ்ந்து வந்தனர். யாக்கோபு அமிர்தநாயகம் மற்றும் யோசேப்பு அமிர்தநாயகம் என்னும் இரு மகன்கள் அவருக்கு உண்டு. கதாகாலட்சேபம் செய்வதில் சிறந்து விளங்கிய யோசேப்பு அமிர்தநாயகம் 25 ஆண்டுகள் மைலப்பபுரத்தில் உபதேசியாராக பணியாற்றினார் என்று வரலாறு சொல்லுகிறது. இவர் காலத்தில் தான் முதல் காரைக் கோயில் கட்டப்பட்டு, அதில் ஆராதனை நடைபெற்றிருக்கிறது.  சுத்தம், ஒழுங்கு, பக்தி இந்த மூன்றையும் தன் மூச்சாக கருதின யோசேப்பு அமிர்தநாயகம் ஐயா 1908 இல் இவ்வுலக வாழ்வை முடித்தார்கள். இதிலிருந்து 1880 களுக்கு முன்பாகவே கிறிஸ்தவை ஏற்றுக் கொண்டவர்கள் மைலப்பப்புரத்தில் இருந்திருக்க வாய்ப்பிருப்பது தெரிய வருகிறது.


சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் புஞ்சைகளில் பணிசெய்து கொண்டிருந்த ஒரு அறுவடைக் காலத்தின் ஞாயிற்றுக்கிழமை அது. வட்டத்தார் போட்ட வெண்னிற வேட்டி, முட்டு வரை நீண்ட கோடு, கிராப்புத் தலை, கையில் பெரிய வேதாகமம் என யோசேப்பு அமிர்தநாயகம் உபதேசியார் வேகமாக நடந்து வந்தார். ஆலயத்தில் முதல் மணி அடித்தும், ஒரு குழந்தைகள் கூட வரவில்லை. ஊருக்குள் மக்கள் நடமாட்டம் தெரியவில்லை. எல்லாரும் வேலைக்கு சென்றுவிட்டார்கள் என்று அறிந்த உபதேசியார், ஆலயத்தில் துக்க மணி போன்று, விட்டு விட்டு மணி அடித்தார். யாரோ மரித்துவிட்டார்கள் என்று வயல்களில் இருந்து மக்கள் வர, வர மண்டபம் முன்பு கூட்டம் கூடியது. யார் இறந்தது என்று மக்கள் உபதேசியாரிடம் கேட்க, அவர், "இந்த ஆலயத்திலுள்ள  ஆத்துமாக்கள்" என்று சொன்னார். இதைக் கேட்டு துக்கமடைந்த மக்கள், தங்கள் தவறை உணர்ந்து, கண்ணீருடன் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டனர்.


அதற்குப் பின்பு மைலப்பப்புரத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட நேர்த்தியான ஆலயம் 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் நாளன்று அன்றைய திருநெல்வேலி & மதுரை அத்தியட்சர் Rt.Rev. ஆக்கேஷன் வில்லியம்ஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் தூய அந்திரேயா ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது Rev.R.S தாவீது ஐயா நல்லூர் குருசேகர பொறுப்பில் இருந்து இறைப்பணி செய்தார்கள்.

St Andrew's Church
         1998 களில் கொத்திப் பூசப்பட்ட பின் தோற்றம்

நல்லூர் சர்க்கிளில் தெற்கேயுள்ள சபைகளில் நன்றாக வளர்ச்சி கண்ட சபைகளில் மைலப்பப்புரம் சபையும் ஒன்றாகும். 1975 ஆம் ஆண்டு நல்லூர் சர்க்கிளிலிருந்து கோவிலூற்று சேகரமாக மாறிய பின்பு, மைலப்பபுரம் சபை அதன் அங்கமாக இருந்தது. சேகரத்தின் முக்கிய சபையாக அன்று முதல் இன்று வரை காணப்படுகிறது.


2008 ஆம் ஆண்டு, அப்போதைய  கோவிலூற்று சேகர ஆயர் Rev. தானியேல் பால்துரை அவர்கள் மற்றும் சபையார் முயற்சியால், ஆலய விரிவாக்கம் & புதுப்பித்தல் பணிக்காக ஏப்ரல் 25 ஆம் தேதி பேராயர் கனம். ஜெயபால் டேவிட் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.  



St Andrew Church
ஆலயத்திலுள்ள கல்வெட்டுகள்

சபை மக்களின் ஊக்கமான ஜெபம் மற்றும் நன்கொடைகளால் ஆலய கட்டுமானப்பணி சுமார் நான்கு ஆண்டுகள் மிக சிறப்பாக நடந்தேறியது. 10.06.2012 அன்று Rt.Rev.Dr. J. J. கிறிஸ்துதாஸ் பேராயரவர்களால் புதிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 


10.05.2015 அன்று புதிய கோபுரமானது Rt.Rev.Dr. J. J. கிறிஸ்துதாஸ் பேராயரவர்களால் இறைநாம மகிமைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Church Tower Dedication
ஆலய கோபுர பிரதிஷ்டை
 
இறைமக்கள் பயன்பாட்டின் வசதிக்காக, ஆலயத்தின் முன்பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று, 27.06.2020 அன்று அப்போதைய சேகர ஆயர். Rev. நிக்சன் ஐயரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்றைக்கு 150 குடும்பங்கள் தூய அந்திரேயா ஆலயத்தில் வழிபட்டு வருகின்றனர்.  ஒரு TDTA துவக்கப்பள்ளி உள்ளது. இந்த 112 ஆம் ஆண்டு விழாவில், இறையாசி உங்களுக்கு நிறைவாக உண்டாவதாக. ஆலயத்தின் மகிமையினால் உங்கள் இல்லங்களும், உள்ளங்களும் நிறையட்டும்.


துணை நின்ற நூல்கள்

இவர்களைத் தெரியுமா?

நல்லூர் சர்க்கிள் வரலாறு

Photos by

ரெபிசன், மைலப்பபுரம்.






Post a Comment

2 Comments