Ad Code

பழைய ஏற்பாட்டின் அமைப்பு | திருமறையில் திடப்படுவோம் - 2

 கிறிஸ்தவ திருமுறையில் முதற்பகுதியாக பழைய ஏற்பாடு காணப்படுகின்றது. இது யூதர்களின் புனித நூலாகையால் அவர்கள் இதை பழைய ஏற்பாடு என்றோ, முதல் உடன்படிக்கை என்றோ அழைப்பதை விரும்புவதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் இதை கடவுளின் முதல் உடன்படிக்கையின் திருவார்த்தை என்று நம்புகிறோம்.

1. யூதர்களின் கண்ணோட்டத்தில் அமைப்பு

யூதர்கள் தங்கள் புனித நூலை TaNaKh என்று அழைக்கிறார்கள். இந்த பெயரிலேயே அதன் மூன்று பிரிவுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும் கிறித்தவர்கள் 39 என்று சொல்கிறவற்றை 24 அல்லது 35 என்ற எண்ணிக்கையில் அடக்கிடுவர். அதாவது புத்தகங்களின் பங்கீடு தான் மாறுமே தவிர வேறெந்த மாற்றமில்லை.

1.1 தோரா - Torah  (T) / Pentateuch - 5

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், & உபாகமம் என்ற முதல் 5 புஸ்தகங்கள் இதில் அடங்கும். தோரா என்ற வார்த்தைக்கு சட்டம் (Law) மற்றும் அறிவுரை (instruction) ன்று அர்த்தம். ஐந்து என்ற எண்ணிக்கையை வைத்து கிரேக்க பின்னணியில் Pentateuch (பஞ்சாகமம்) என்று அழைக்கப்படுகிறது. 

1.2 நெப்பீம் - Nevvi'm (N) - 8 

நெப்பீம் என்றால் தீர்க்கதரிசி (Prophets) என்று பொருள். இந்த வகை வரலாற்றை விளக்குகிற, ஆனால் தீர்க்கதரிசிகளை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகிறது. இதை முற்கால இறைவாக்கினர் மற்றும் பிற்கால இறைவாக்கினர் என இரண்டாக பிரிக்கலாம். 

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள் என 4 புத்தகங்கள் முற்கால இறைவாக்கினர் காலத்தில்  அடங்கும். எபிரேய மரபுப்படி, 1 சாமுவேல், 2 சாமுவேல் என்றில்லாமல், இரண்டும் சேர்த்து சாமுவேல் என்றே வரும். இது போல் தான் இராஜாக்கள் புத்தகமும் வரும். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், மற்றும் 12 சின்ன தீர்க்கதரிசன புத்தகங்கள் இணைத்து ஒரே புத்தகம் என 4 புத்தகங்கள் பிற்கால இறைவாக்கினர் காலத்தில் அடங்கும். ஆனால் மல்கியாவின் காலக்கட்டத்தில் 12 சின்ன புத்தங்களும் தனித்தனியாக எண்ணப்பட்டன. 

1.3 கெத்துவீம் - Ketuvi'm (K) - 11

கெத்துவீம் என்றால் எழுதப்பட்டவை (Writings) என்று பொருள். இதில் கவிதை (Hebrew Poetry) சார்ந்த புத்தகங்களும், சில பிற்கால புத்தகங்களும் அடங்கும். அவையாவன: யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, புலம்பல், ரூத், எஸ்றா-நெகமியா, எஸ்தர், தானியேல், நாளாகமம். 


2. கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தில் அமைப்பு 

கிறிஸ்தவர் மரபில், புஸ்தகங்ககளின் உட்பொருளின் அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

2.1 சட்ட புத்தகங்கள் - Laws - 5

இது அப்படியே யூத அமைப்பின்படியே இருக்கிறது. பஞ்சாகமம்  என்ற பெயரும் உண்டு.

2.2 வரலாற்றுப் புத்தகங்கள் - History - 12

யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர் என பன்னிரெண்டு புஸ்தகங்கள் இதில் வரும். 

2.3 கவிதை புத்தகங்கள் - Poetry - 5

யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, என்ற 5 நூல்கள் இதில் அடங்கும்.

2.4 பெரிய தீர்க்கதரிசிகள் Major Prophets

ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல் மற்றும் தானியேல் ஆகிய ஐந்தும் இந்த வகையில் வரும். பெரிய & சின்ன தீர்க்கதரிசன வேறுபாடு என்பது புத்தகத்தின் அளவும் (lenth), யாருக்கு எழுதப்பட்டது என்பதை (Audience) பொறுத்தது. பெரிய தீர்க்கதரிசன புத்தகங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கியது. சின்ன புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தில், நோக்கில் எழுதப்பட்டது. எந்த தீர்க்கதரிசியும் தங்கள் செயல்பாடுகளால் பெரியது, சிறியது என்று இந்த பிரிவு உண்டாகவில்லை.

2.5 சின்ன தீர்க்கதரிசிகள் Minor Prophets

பன்னிரெண்டு புஸ்தகங்கள் இந்த வகையில் அடங்கும். அவையாவன: ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மற்றும் மல்கியா. இந்த பன்னிரு புத்தகங்களையும்  இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வாசிக்காத அல்லது  பின்னணி குறித்து புரிந்து கொள்ளாத நிலை தான் உள்ளது. 


3. பழைய ஏற்பாட்டில் என்ன உள்ளது?

           முற்பிதாக்களின் காலம்

           எகிப்தின் அடிமை காலம்

           விடுதலைப் பயண காலம்

           நியாயதிபதிகள் காலம்

           அரசர்கள் காலம்

           பாபிலோனிய அடிமைக் காலம்

           சீர்திருத்தக் காலம்

என கடவுளின் படைப்பு முதல் ரோமரசின் காலத்தில் இரண்டாம் கோவில் கட்டப்பட்ட வரையுள்ள வரலாறு பழைய ஏற்பாட்டில் உள்ளது. 

                             ......தொடரும்.....

அடுத்த பதிவில் புதிய ஏற்பாட்டின் அமைப்பைக் குறித்து பார்ப்போம்.


Post a Comment

0 Comments