Ad Code

புதிய ஏற்பாட்டின் அமைப்பு

கிறிஸ்தவ திருமறையின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாடு என்றழைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் பிரமாணத்தை அடிப்படையாக கொண்ட இரண்டாம் உடன்படிக்கையின் கருத்துக்களே புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களிலும் உள்ளன.


1. புதிய ஏற்பாட்டின் பிரிவுகள்

புதிய ஏற்பாடு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1.1 வரலாற்று நூல்கள்

அப்போஸ்தலராகிய மத்தேயு, சுவிசேஷகராகிய மாற்கு, சுவிசேஷகராகிய லூக்கா, அப்போஸ்தலராகிய யோவான் ஆகிய நான்கு பேருடைய நூல்களும் கிறிஸ்துவின் வரலாற்றை விளக்கும்  நற்செய்தி நூல்கள் ஆகும். இதில் மாற்கு தான் முதல் எழுதியிருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நான்கு நூல்களும், கிறிஸ்து இயேசுவின் வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். அடுத்ததாக அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற ஒரு சபைவரலாற்று நூல் உள்ளது. சுவிசேஷகராகிய லூக்கா என்பவர் தன்னுடைய  நற்செய்தி நூலின் தொடர்ச்சியாக, ஆதி திருச்சபையின் வரலாறை எழுதியிருக்க கூடும் என்ற கருத்துள்ளது.

1.2 மடல்கள் / நிருபங்கள்

ரோமர், 1 & 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1 & 2 தெசலோனிக்கேயர், 1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன் ஆகிய 13 கடிதங்கள் பவுலடிகளாரால் எழுதப்பட்டவை ஆகும். இவைகளுக்கு அடுத்து வரும் எபிரேயருக்கு எழுதின நிருபம் யாரால் எழுதப்பட்டது என்று தெரியவில்லை. அடுத்ததாக, யாக்கோபு, 1 & 2 பேதுரு, 1, 2, & 3 யோவான், யூதா ஆகிய 7 கடிதங்கள் பொதுவான நிருபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

1.3 வெளிப்பாட்டு நூல்

அப்போஸ்தலராகிய யோவானுக்கு, சபைகள் மற்றும்  இறுதிக்காலம் பற்றி கடவுள் வெளிப்படுத்தின காரியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிப்படுத்தின விசேஷம் ஒரு வெளிப்பாட்டு நூல் ஆகும்.


2. புதிய ஏற்பாட்டில் என்ன உள்ளது?

முதல் நான்கு நூல்களும் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்ப்பு மற்றும் உபதேசங்களை எடுத்துரைக்கின்றன. அப்போஸ்தலருடைய நடபடிகள் இயேசுவின் பரமேறுதல் முதல் பவுலின் மிஷனரி ஊழியங்கள் வரை தெளிவாக சொல்லுங்கின்றன. 21 நிருபங்களும், கிறிஸ்துவின் நற்செய்தியை மையமாகக் கொண்டு நடைமுறைக்கு ஏற்றாற்போல் சபைகளுக்கு அல்லது தனிப்பட்ட நபருக்கு எழுதப்பட்ட இறையியல் நூல்கள் ஆகும். கடைசி நூலானது, சபைகளுக்கு எச்சரிப்பையும், கிறிஸ்துவின் வருகைக்கான செய்தியையும் அறிவிக்கிறது. 


3. புதிய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

புதிய ஏற்பாடு என்ற ஒன்று நம்முடைய கைகளில் கிடைத்திராவிட்டால் அநேக பழைய ஏற்பாட்டு வசனங்களை புரிந்து கொள்வது கடினம். அதே நேரத்தில் அநேக பழைய ஏற்பாட்டு வசனங்களை புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் மேற்கோடிட்டு காட்டியுள்ளனர். புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் கொள்களை விளக்கும் அருமையான புத்தகம். இன்றைக்கும் நாம் ஆதி அப்போஸ்தலர்கள் எதை பின்பற்றினார்களோ அதையையே நாம் நம்முடைய விசுவாசமாக கொண்டிருக்கிறோம்.

                          ......... தொடரும் ...........


Post a Comment

0 Comments